Actress Parvathy Krishna parvathy_r_krishna
சினிமா

'பாங்' குடித்தேன்: நடிகை பார்வதி கிருஷ்ணாவின் 'வாரணாசி' அனுபவம்!

விழாக்காலங்களில் பாங் விற்பனை அதிகரித்துவிடும். இந்த சமயத்தில் இளைஞர்கள் அதிகமாக இதை, அருந்துவதாக கூறப்படுகிறது.

எம். குமரேசன்

உத்தரபிரதேசத்தில் வாரணாசி நகரத்தில் மட்டுமல்ல வட இந்தியாவின் பல நகரங்களில் பாங் என்ற ஒரு வித போதை தரும் பானத்தை அருந்தும் பழக்கம் மக்களிடத்தில் இருக்கிறது. பாலைக் கொண்டு தயாரிக்கப்படும் இந்த பானம் ஆப்பிள், மாம்பழம் மற்றும் பப்பாளி போன்ற சுவைகளைக் கொண்டதாகவும் தயாரிக்கப்படும். 1985ம் ஆண்டு இந்திய போதைப் பொருட்கள் மற்றும் மயக்க மருந்துகள் சட்டத்தின்படி, போதைச் செடியின் உற்பத்தி, விற்பனை மற்றும் அந்த செடியின் சில பாகங்களை சாப்பிடத் தடை உள்ளது. ஆனால் , இலைகளுக்கு மட்டும் விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதனால், வாரணாசியில் மட்டும் 300 பாங் கடைகள் உள்ளன. இவை, அரசால் அங்கீகரிக்கப்பட்ட கடைகள் ஆகும்.

வாரணாசி உட்பட பல ஆன்மீக நகரங்களில் சாமியார்கள் பாங்கை நேரடியாக சாப்பிடுவதையோ அல்லது குழல் வழியாக பாங்கைப் புகைப்பதையோ பார்க்கமுடியும். ஹோலி போன்ற வட இந்திய பண்டிகையின் போதும், இளைஞர்கள் பலர் , பாங்கை அதிகளவில் அருந்துவதை வழக்கமாக வைத்திருந்துள்ளனர். இதனால், விழாக்காலங்களில் பாங் விற்பனை டபுள் மடங்காகி விடுகிறது. இதை, சாப்பிட்டதும் தொடக்கத்தில் ஒரு மகிழ்ச்சியான மயக்கம் ஏற்பட்டு , முடிவில் பிரமை போன்ற உணர்வை ஏற்படுத்தும். 'ஆதவன்' படத்தில் நடிகர் வடிவேலு ஆனந்த்பாபு வாங்கிக் கொடுக்கும் போதை தரும் பாலை வண்டி வண்டியாக உள்ளே தள்ளுவார். பின்னர், போதையில் கண்டபடி உளறுவார். உச்சக்கட்டமாக, 'நான் உலகம் முழுக்க பேமஸ்' வாயைச் சுழித்துக் கொண்டே கூறுவார். பாங் அருந்திய அனுபவமும் இதே போன்றுதான் இருக்கும்.

Parvathi Krishna drinking Prasad

இந்த நிலையில்,பிரபல மலையாள நடிகை பார்வதி கிருஷ்ணா வாரணாசி சென்ற போது, பாங் குடித்ததாகவும் அப்போது ஏற்பட்ட அனுபவம் பற்றி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூறியுள்ளார். அதில், அவர் தெரிவித்திருப்பதாவது, '' வாரணாசியில் பாங் குடித்த பலரின் அனுபவம் பற்றி எனக்கு தெரியும். இதனால், நான் பாங் கடைக்கு சென்ற போது, மிகுந்த எச்சரிக்கையுடன் இருந்தேன். எங்களிடத்தில் ஸ்ட்ராங்காக வேண்டுமா? அல்லது மீடியம் , லைட்டாக வேண்டுமா ? என்று கேட்டனர். நாங்கள் மீடியமாக வேண்டும் என்று சொன்னோம். ஆனால், குடித்தவுடன் உடனடியாக அறைக்கு திரும்பி விட வேண்டுமென்று முடிவு செய்திருந்தோம். ஏனென்றால், பாங் குடித்த பலரும் வாரணாசியில் தங்கள் அறையை கண்டுபிடிக்க முடியாமல் சுற்றித் திரிந்த பல கதைகள் பற்றி நாங்கள் கேள்விப்பட்டுள்ளோம்.

பாபா தண்டைய் என்று அழைக்கப்படும் இந்த பானம் வாரணாசியில் பரவலாக அருந்தப்படும் பாரம்பரிய பானம். பாலில் கஞ்சா இலைகள் கலந்து, பாதாம், முந்திரி, ஏலக்காய், குங்குமப்பூ, முலாம்பழ விதைகள் மற்றும் ரோஜா இதழ்கள் கடைசியாக பாங் போட்டு தயாரிக்கப்படும் ஒரு வித பானம். வாடிக்கையாளர்களின் விருப்பத்துக்கு ஏற்ப லைட், மீடியம், ஸ்ட்ராங் என டோசேஜ்களாகக் கலக்கப்படும். பாங் அருந்தியதும் உடனடியாக, உங்கள் உடலில் மாற்றம் நிகழ்ந்து விடாது. ஆனால், 3 மணி நேரத்துக்குள் உடலில் போதை ஏறலாம். எனவே, மிகுந்த ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். குறைந்தது உடலில் 3 மணி நேரத்துக்கு போதை இருக்கும். இதன் காரணமாகவே, உடனடியாக நாங்கள் அறைக்குத் திரும்பி விட்டோம். அறைக்கு திரும்பியதும் நான் நீண்ட நேரமாக சிரித்துக் கொண்டே இருந்தேன். பாங் ஏற்படுத்தும் போதை மனிதருக்கு மனிதர் வித்தியாசப்படும்''

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

போதை, எந்த வடிவத்திலும் தீமைதான்!