51 வயதில் நடிகை நக்மா  nagma_actress
சினிமா

நக்மா: 51 வயசு... இன்னும் இளமை! ரகசியம் என்ன?

கிறிஸ்துமஸ் தினத்தில் பிறந்த நடிகை நக்மா கடந்த 25ம் தேதி 51வது வயதில் கால் பதித்தார்.

எம். குமரேசன்

நடிகை நக்மா! மும்பையில் பிறந்த இவரின் முதல் படமே சல்மான்கானுடன்தான். 1990ம் ஆண்டு வெளியான 'பாகி 'என்ற பாலிவுட் படத்தில்தான் அறிமுகமானார். முதல் படமே, சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. இந்தப் படத்தில் நடிக்கும் போது, நக்மாவின் வயது 15 மட்டுமே. ஆனாலும் , மிகவும் மெச்சூர்டாக இந்த படத்தில் நக்மா நடித்திருப்பார். மறைந்த நடிகை திவ்ய பாரதியும் அப்போது, ஹிந்தி படங்களில் நடித்துக் கொண்டிருந்தார். திவ்ய பாரதிக்கும் நக்மாவுக்கு நெருங்கிய நட்பு இருந்தது. இவர்தான், நக்மாவை கோடம்பாக்கம் பக்கம் திருப்பி விட்டார்.

Actress Nagma

நடிக்க வாய்ப்பு குறைந்த பிறகு, நடிகை நக்மா அரசியலிலும் கால் பதித்தார். காங்கிரஸ் கட்சியில் இணைந்து 2014 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் உத்தரப் பிரதேச மாநிலம் மீரட் தொகுதியில் நக்மா போட்டியிட்டு தோல்வி அடைந்தார். ஆனாலும், இப்போது வரை காங்கிரஸ் கட்சியில்தான் நக்மா தொடர்கிறார்.

இந்தநிலையில், கடந்த டிசம்பர் 25ம் தேதி நக்மா 51வது பிறந்த நாளை கொண்டாடினார். ஆனால், இந்த வயதிலும் அவர் இளைமையாக இருக்கிறார். பொதுவாக, நடிகைகள் சினிமாவில் இருந்து விலகி விட்டால், கட்டுப்பாடுகளை துறந்து பிடித்த உணவுகளை சாப்பிடுவார்கள். இதனால், உடல் எடை கூடி காணப்படுவார்கள். ஆனால், நக்மா இப்போதும் உடற்பயிற்சி, உணவு கட்டுப்பாடுகளை கடைபிடித்து அழகாக காட்சியளிக்கிறார்.

இது குறித்து 'வைல்ட் பிலிம்ஸ்' யூடியூப் சேனலுக்கு நக்மா பேட்டியளித்தார். அப்போது, அவர் கூறியதாவது, '' ஹெல்த்தை நான் வெல்த்தாக கருதுபவள். இதனால், எவ்வளவு பிசியான ஷெட்யூல் இருந்தாலும் உடற்பயிற்சி செய்வதை தவிர்ப்பதில்லை. எப்போதுமே மிகவும் எளிமையான உடற்பயிற்சியை மட்டுமே மேற்கொள்வேன். முறையான உணவுக் கட்டுப்பாடுகளை கடைபிடிக்கிறேன். தியானமும் செய்கிறேன். இதனால், எனது மனம் எப்போதுமே மகிழ்ச்சியாக இருக்கிறது. நானே சமைத்துக் கொள்வேன். நியூட்ரிசன் நிறைந்த உணவுகளை சமைப்பேன். பொரித்த உணவுகள், ஃபாஸ்ட் புட் உணவுகளை முற்றிலும் தவிர்த்து விடுவேன்'' என்று தெரிவித்துள்ளார்.

தனிமையில் வாழும் நக்மா, முன்னதாக அளித்திருந்த பேட்டியில், ''என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையில் மிகவும் மகிழ்ச்சியாகவே இருக்கிறேன். காதல் மற்றும் திருமணத்தின் மீது எனக்கு இன்னும் ஈர்ப்பு இருக்கிறது. ஆனால், ஒரு உறவு தேவை என்பதற்காக எந்த ஒரு உறவிலும் நான் சிக்கிக்கொள்ள விரும்பவில்லை. எல்லோரையும் போலவே குழந்தை, குட்டிகளுடன் வாழ ஆசைதான் ''என்று கூறியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

நடிகை நக்மாவின் தந்தை பெயர் அரவிந்த் மொரார்ஜி. மும்பையில் பிசினஸ்மேன். தாயார் பெயர் சீமா. ஒரு கட்டத்தில், நக்மாவின் பெற்றோர் விவாகரத்து பெற்று பிரிந்து விட்டனர். பிறகு, நக்மாவின் தாயார் சீமா, மறுமணம் செய்து கொண்டார். சீமாவுக்கு மறுமணத்தில் பிறந்தவர்கள்தான் நடிகைகள் ஜோதிகாவும் ரோஷிணியும்.