Kuttram Purindhavan: The Guilty One @sonylivtamil - Youtube
சினிமா

ட்விஸ்டு மேல ட்விஸ்டு! - குற்றம் புரிந்தவன் Web Series Review

கதை தொடங்குவதிலிருந்து ஒவ்வொரு எபிஸோடிலும், நாம் எதிர்பாராத புதுப்புது திருப்பங்கள் வந்து கொண்டே இருப்பது நம்மை தொடரோடு கட்டிப்போட்டுவிடுகிறது.

ஆதி தாமிரா

செல்வமணி முனியப்பன் எழுதி இயக்கி, விதார்த், பசுபதி ஆகியோர் நடித்திருக்கும் வெப் சீரிஸ் ’குற்றம் புரிந்தவன்’!

 
ஒரு அரசு மருத்துவமனையில் கம்பவுண்டராக பணிபுரியும் பசுபதி, ஒரு சிறிய கிராமத்தில், தன் எளிய வீட்டில் மனைவி மற்றும் பெற்றோரை இழந்த பேரன் ஆகியோரோடு வாழ்ந்து வருகிறார். அந்தப் பேரன், ஏதோ ஒரு நோயால், தலையில் ஒரு முக்கியமான ஆபரேஷன் செய்ய வேண்டிய நிலையில் இருக்கிறான். அவரது பக்கத்து வீட்டில் லட்சுமி பிரியா, கணவர் மற்றும் அவரது 12 வயது பெண் குழந்தை மெர்சி ஆகியோரோடு வசிக்கிறார். அதே ஊரின் காவல் நிலையத்தில், டிஎஸ்பியின் கார் டிரைவராக பணிபுரிகிறார் விதார்த். அதிகாரச் சக்கரத்துக்குள் சிக்கி பாதிக்கப்பட்டவர் அவர். 

அந்த கிராமத்தில் கோவில் திருவிழா நடக்கும் சமயத்தில் சிறுமி மெர்சி காணாமல் போகிறாள். அதே நாளிரவில் வீட்டு வாசலில் லட்சுமி பிரியாவின் கணவரும் இறந்து கிடக்கிறார். காணாமல் போன மெர்சி என்னவானாள்; லட்சுமியின் கணவரை கொலை செய்தது யார் என்று தொடங்கும் கதை நிறைய திருப்பங்களோடு ஏழு எபிசோடுகளாக விரிகிறது.

 குழந்தைகள் மீதான பாலியல் குற்றப் பின்னணியில் எடுக்கப்படும் சினிமாக்களை நாம் பார்க்க விரும்புவதில்லை. இதுவும் அப்படி ஒரு கதைதான் என்றாலும், டிஸ்டர்பிங்கான எந்த காட்சிகளுமே இல்லை என்பதால், விறுவிறுப்பான திருப்பங்களுக்காகப் பார்க்கலாம்!

 ஒரு குற்றம் அல்லது தொடர் குற்றங்களை  நிகழ்த்திய அல்லது நிகழ்த்திக் கொண்டிருக்கும் குற்றவாளி யார் என்று கண்டுபிடிப்பதை மையமாகக் கொண்டு பின்னப்படும் Whodunnit வகை தொடர்தான் இது. இந்த வகைப் படைப்புகளில் பொதுவாக இருக்கும் சிக்கல் என்னவென்றால்,  பார்வையாளர்களான நாமும் குற்றவாளி யார் என்று கண்டுபிடிக்கப் போராடும் ஹீரோவின் பயணத்தோடு ஒன்றியிருப்போம். இந்த வகை படைப்புகளை நாம் அடிக்கடி பார்த்து வருகிறோம் என்பதால் நம்மை ஆச்சரியப்படுத்தும் அளவுக்கு புதிதான கிளைமாக்ஸ் ஒன்றை உருவாக்கி விட முடியாது. அதிலும், வில்லன் என்று காண்பிக்கப்படும் நபர்தான் ஹீரோ என்றும், ஹீரோ என்று காண்பிக்கப்படும் நபர்தான் வில்லன் என்றும், குற்றவாளியே கிடையாது நடந்தது எல்லாமே தற்செயல்தான், காண்பிக்கப்பட்ட எல்லா கேரக்டர்களுமே வில்லன்கள்தான் என்பது போல விதவிதமான கிளைமேக்ஸ்களை நாம் பார்த்திருக்கிறோம். அதையெல்லாம் தாண்டி நம்மை ஆச்சரியப்படுத்துவதெல்லாம் சிரமம்தான்.

Actor Pasupathy

அதனால், இவ்வகைப் படைப்புகளில், கிளைமாக்ஸை விடவும் தொடரின் மற்ற பகுதிகள் எத்தனை சுவாரசியமாக நகர்கிறது என்பதற்குத்தான் நாம் அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டியிருக்கிறது. அவ்வகையில், இந்தத் தொடரின் கிளைமேக்ஸ்சும் அப்படித்தான் அமைந்திருக்கிறது. நாம் எதிர்பாராத ஒரு கதாபாத்திரத்தை இறுதியில் குற்றவாளியாக  சித்தரித்திருக்கிறார்கள். அது அத்தனைப் பொருத்தமாக இல்லைதான், எனினும் கதை தொடங்குவதிலிருந்து ஒவ்வொரு எபிஸோடிலும், நாம் எதிர்பாராத புதுப்புது திருப்பங்கள் வந்து கொண்டே இருப்பது நம்மை தொடரோடு கட்டிப்போட்டுவிடுகிறது.

ஒரு பெரிய மனப் போராட்டத்திற்குள் சிக்கியிருக்கும் கதாபாத்திரம் பசுபதியுடையது, சொல்லவே தேவையில்லை அதை அவர் செவ்வனே செய்திருக்கிறார். விதார்த்தும் உயரதிகாரிகளுக்கிடையே சிக்கி அவமானப்படுவதும், அந்நிலையிலும் குற்றவாளியைக் கண்டுபிடிப்பதில் முனைப்புக் காட்டுவதுமாக சிறப்பாக நடித்திருக்கிறார். பசுபதியின் மனைவியாக லிசி ஆண்டனி மற்றும் பெண்ணைத் தொலைத்த அண்டை வீட்டுக்காரராக லக்ஷ்மி பிரியா ஆகியோரும் மிகச் சிறப்பான பங்களிப்பை செய்திருக்கிறார்கள். இறுதி வரை விறுவிறுப்பை தக்க வைப்பதில் வெற்றி பெற்றிருக்கிறார் இயக்குனர் செல்வமணி முனியப்பன்.

 ’குற்றம் புரிந்தவன்’ சீரிஸ், சோனி லைன் ஓடிடி தளத்தில் காணக்கிடைக்கிறது.