Avatar Fire and AsH Disney Plus
சினிமா

முந்தைய பாகங்களைத் தாண்டுகிறதா அவதார் 3? #Avatarfireandash

முதல் பாகத்தில் காடுவாழ் நாவி இன மக்களையும், இரண்டாம் பாகத்தில் கடல்வாழ் நாவி இன மக்களையும் பார்த்தோம். இந்த மூன்றாவது பாகத்தில் 'சாம்பல் மக்கள்' (Ash People) எனப்படும் புதிய நாவி இனம் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது.

ஆதி தாமிரா

2009-ல் வெளியான 'அவதார்' மற்றும் 2022-ல் வெளியான 'அவதார்: தி வே ஆஃப் வாட்டர்' ஆகிய படங்களின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து, உலகம் முழுவதும் பெரும் எதிர்பார்ப்பைக் கிளப்பியிருந்த 'அவதார் 3- பயர் அண்ட் ஆஷ்' படம் இந்த வாரம் வெளியாகியிருக்கிறது.

தனது பர்சனல் வெஞ்சன்ஸுக்காக, ஹீரோ ஜேக் ஸல்லியைத் தேடிப் பழி தீர்த்து, அவரது மகன் ஸ்பைடரைக் கைப்பற்றிச் செல்லும் நோக்கத்தோடு வரும் கலோனல் மைல்ஸ் ஒரு பக்கம், நாவி மக்களின் கடவுள் வடிவாக இருக்கும், ஈவாவுக்கு எதிராகக் கிளம்பிவரும் சாம்பல் நாவிக்கள் ஒரு பக்கம், நாவிக்களின் வாழ்வில் ஓர் அங்கமாக இருக்கும் டுல்கூன் எனும் பெரும் திமிங்கலங்களைச் சூறையாட வரும் RDA நிறுவனம் ஒரு பக்கம் என மும்முனைகளுக்குள் சிக்கிக் கொள்கிறார்கள் ஹீரோ ஜேக் ஸல்லியும், அவரது குடும்பமும்! அதிலிருந்து அவர்கள் எப்படி மீண்டார்கள் என்பதுதான் கதை!

முதல் பாகத்தில் காடுவாழ் நாவி இன மக்களையும், இரண்டாம் பாகத்தில் கடல்வாழ் நாவி இன மக்களையும் பார்த்தோம். இந்த மூன்றாவது பாகத்தில் 'சாம்பல் மக்கள்' (Ash People) எனப்படும் புதிய நாவி இனம் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது. இதுவரை நாவி இனத்தவர்கள் அமைதியானவர்களாகவும், ஆக்கப்பூர்வமானவர்களும் காட்டப்பட்டனர். ஆனால், சாம்பல் நாவிகள் ஓர் அழிவு சக்தியாக இருக்கின்றனர்.

டெக்னிகலாக படம் பிரமிப்பை ஏற்படுத்தினாலும், முதலிரு பாகங்களைப் போல திரைக்கதையாக படம் நம்மை திருப்திப்படுத்தவில்லை என்றுதான் சொல்ல வேண்டியிருக்கிறது. 

ஹீரோ மீது அத்தனை வெஞ்சன்ஸோடு வரும் மைல்ஸ், தொடக்கக்காட்சியிலேயே ஹீரோவுடனே கைகோர்த்துக்கொண்டு சாம்பல் நாவிக்களிடமிருந்து தப்புவது அந்தக் கேரக்டர் மீதான பிடிப்பைக் குறைக்கிறது. அதன் பிறகு சாம்பல் நாவிக்களோடு இணைந்து கொண்டு ஹீரோவுக்கு எதிராகத் திரும்புகிறார் மைல்ஸ். அவராக எதுவும் செய்வது போலத் தெரியவில்லை. சாம்பல் நாவிக்களுக்கு எதனால் ஈவா மீது அப்படி ஒரு கோபமென்றும் தெரியவில்லை. அவர்களது நோக்கமும், செயல்பாடுகளும் தெளிவாக இல்லை.

Avatar Fire and Ash

ஹீரோ ஸல்லியும் படம் முழுவதும் யாரிடமாவது சிக்கிக் கொள்கிறார். வேறு யாராவதுதான் வந்து காப்பாற்ற வேண்டியிருக்கிறது. மைல்ஸ் மற்றும் சாம்பல் நாவிக்களையும் சமாளித்துக்கொண்டு வரவிருக்கும் RDA உடனான போரை எதிர்கொள்ளத் தயாராவார் என்று பார்த்தால், கடல் நாவிக்களோடு பேச்சுவார்த்தை, டுல்கூன்களோடு பேச்சுவார்த்தை, மகள் கிரி மூலமாக ஈவாவோடு பேச்சுவார்த்தை என்று பேச்சுவார்த்தைகள் நடத்திக்கொண்டிருக்கிறார். இது போதாது என்று மனைவியோடு பிரச்சினை, மகனோடு பிரச்சினை, ஸ்பைடரை என்ன செய்வது என்ற பிரச்சினை என்று பல்வேறு குடும்பப்பிரச்சினைகள் வேறு! ஆளாளுக்கு ஒவ்வொரு சிக்கலில் தவிக்கிறார்கள். சாம்பல் நாவிக்களுக்கும், RDAவுக்கும் எதிராக படைதிரட்டிப் பட்டையைக் கிளப்புவார் என்று பார்த்தால், அவரையே வீட்டுக்காரிதான் போய்க் காப்பாற்ற வேண்டியிருக்கிறது. 

அப்படியே இழு இழுவென்று இழுத்து கிளைமாக்ஸுக்கு வருகிறார்கள். கிளைமாக்ஸ் ஃபைட்டாவது கூஸ்பம்ஸ் கிளப்பும் என்று பார்த்தால், போரிலும் அத்தனை சுளுவாகத் தோற்றுப் போகிறார்கள். அப்படி ஆனால்தானே, ஈவாவை எழுப்பும் ஆன்மீகப் போராட்டத்தை நடத்தமுடியும். ஒருவழியாக, ஈவா எழுந்து ஆக்டோபஸ் மாதிரி இருக்கும் சில குட்டி மீன்களைக் கிளப்பி விட்டபின்னர், அவை வந்துதான் எல்லோரையும் காப்பாற்றுகின்றன. அவ்வளவு பெரிய கப்பல் சைஸிலிருக்கும் டுல்கூனாலேயே முடியாததை, இந்த அயிரை மீன் மாதிரி இருக்கும் ஆக்டோபஸ் வந்துதான் காப்பாற்றுகிறதாம்!

 
ஜேம்ஸ் கேமரூன் தனது 'டெர்மினேட்டர்' ‘ட்ரூ லைஸ்’, 'டைட்டானிக்', ’அவதார்-1’ போன்ற பிரம்மாண்ட படங்களின் மூலம் உலகையே வியக்க வைத்தவர். இந்த அவதார் வரிசை படங்களுக்காகத் தனது வாழ்நாளின் பெரும் பகுதியை அர்ப்பணித்துள்ளார். கேமரூன் இந்தப் படத்திற்காக அதிநவீன மோஷன் கேப்சர் (Motion Capture) மற்றும் CGI தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தியிருக்கிறார். இந்தப்படமும், முதலிரு படங்களைப் போலவே, மேக்கிங்கில் ஒரு டெக்னிகல் ஒண்டர் என்று சொல்லுமளவில் உருவாகியிருக்கிறது. ஆனால், அதெல்லாம் திரைக்கதையின் இழுவையினால் அர்த்தமில்லாமல் போனது வருத்தம்தான். அரைத்த மாவான அவதாரையே மீண்டும் அரைப்பதைக் கைவிட்டுவிட்டு, புதிய கதைகளோடு ஜேம்ஸ் கேமரூன் வரவேண்டும் எனது நம் ஆசை!
இந்தப் படமும், முதலிரு படங்களைப் போலவே இயற்கையைப் பாதுகாப்பதன் அவசியம் மற்றும் மனிதர்களின் பேராசையினால் ஏற்படும் அழிவுகள் குறித்து பேசுகிறது. இந்த ஆதாரக்கருத்து மற்றும் வியக்கவைக்கும் மேக்கிங், ஜேக்கைக் காப்பாற்ற வரும் நேய்த்ரியின் சண்டைக்காட்சி போன்ற ஒரு சில காட்சிகள் ஆகியவற்றுக்காக ஒருமுறை பார்க்கலாம்.