ஸ்ரீனிவாசன் உடலுக்கு அஞ்சலி செலுத்திய நடிகர் பார்த்திபன்  
சினிமா

ஸ்ரீனிவாசனுக்கு இறுதி அஞ்சலி செலுத்த சென்றது ஏன்? நடிகர் பார்த்திபனின் எமோஷனல் பதிவு

'பைலட் இருக்கை கூட தாருங்கள்' என்று கூறினேன். நான் கண்டிப்பாக கொச்சி போயாக வேண்டுமென்பதை இப்படி, அவரிடத்தில் இப்படி எடுத்துக் கூறினேன்.

எம். குமரேசன்

மலையாள நடிகர் ஸ்ரீனிவாசனின் மறைவு மலையாளத் திரைத்துறையினரை சோகத்தில் ஆழ்த்தியியுள்ளது. மலையாளத் திரைத்துறையினர் பலரும் நேரில் சென்று , அவருடைய உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்கள்.தமிழ் திரையுலகில் இருந்து நடிகர் பார்த்திபன், சூர்யா ஆகியோர் அஞ்சலி செலுத்தினர். தமிழில் ஸ்ரீனிவாசன் நடித்த இரு படங்களில் பார்த்திபனின் 'புள்ளக்குட்டிக்காரன்' படமும் ஒன்று. அந்த வகையில், நட்புக்கு மரியாதை கொடுக்கும் வகையில், துபாய் செல்லவிருந்த பயணத்தை ரத்து செய்து விட்டு கொச்சிக்கு விரைந்து சென்று நண்பரின் முகத்தை இறுதியாக பார்த்துள்ளார் பார்த்திபன்.

ஸ்ரீனிவாசனுக்கு அஞ்சலி செலுத்தச் சென்ற விதம் பற்றி தனது எக்ஸ் பக்கத்தில் நடிகர் பார்த்திபன் எமோஷனலாக ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில், அவர் கூறியிருப்பதாவது, ''ஸ்ரீனிவாவசின் மறைவு செய்தி எனக்கு கிடைத்த போது, இரவு 7.55 மணி. கொச்சிக்கு எப்படிப் போவது என்று தெரியவில்லை. உடனடியாக , எனது பென்ஸ் காரை எடுத்து, நானே ஓட்டிக்கொண்டு சென்னை ஏர்போர்ட் சென்றேன். போக்குவரத்து நெருக்கடிக்கிடையே, 4 இடங்களில் கார் விபத்துக்குள்ளாக இருந்தது. எப்படியோ விபத்தில் சிக்கவில்லை. 8.40 மணிக்கு ஏர்போர்ட்டை அடைந்தேன். இரவு 9.25 மணிக்கு கொச்சிக்கு விமானம் இருந்தது. ஆனால், டிக்கெட் இல்லை என்று கூறி விட்டனர். நான் இன்டிகோ உயரதிகாரி ஒருவரை சந்தித்து டிக்கெட் கேட்டேன். 'பைலட் இருக்கை கூட தாருங்கள்' என்று கூறினேன். நான் கண்டிப்பாகக் கொச்சி போயாக வேண்டுமென்பதை இப்படி, அவரிடத்தில் எடுத்துக் கூறினேன். ஒரு வழியாக இன்டிகோ ஊழியர் ஒருவருக்கு ஒதுக்கப்பட்ட டிக்கெட்டை எனக்கு ஒதுக்கிக் கொடுத்தார்கள். இதற்காக, அந்த சீனியர் மேலாளருக்கு நான் நன்றி தெரிவித்துக் கொண்டேன். கொச்சிக்கு இரவு 11 மணிக்கு வந்து விட்டேன். எங்கு தங்குவது என்று தெரியவில்லை. ஸ்ரீனிவாசனின் வீட்டருகேயுள்ள 3 நட்சத்திர ஹோட்டலில் தங்கினேன்.

புள்ளக்குட்டிக்காரன் படத்தின் ஸ்ரீனிவாசன்

இந்த நாளில் நான் துபாயில் இருந்திருக்க வேண்டும். அந்த விமான டிக்கெட்டை ரத்து செய்தேன். புக்கிங் செய்திருந்த ஹோட்டலையும் ரத்து செய்தேன். கொச்சிக்கு வந்து ஸ்ரீனிவாசனுக்கு அஞ்சலி செய்யவே நான் விரும்பினேன். எங்கிருந்தாலும் மனதார நான் அஞ்சலி செலுத்தியிருக்கலாம். ஆனாலும் ஏதோ ஒன்று என்னை கொச்சிக்கு போக சொன்னது. என் மனது என்னைப் பார்த்து, 'நீ ஏன் இப்படி ஓடிக் கொண்டிருக்கிறாய்?' என்று கேட்டது. அங்கே, லெஜண்டுகளான மோகன்லால், மம்மூட்டி, திலீப் ஆகியோர் இருந்தார்கள். என் வாழ்க்கையில் செல்வத்தைப் பார்த்துவிட்டேன். இந்த சமயத்தில், என் கண் முன்பு வந்தது பணம் அல்ல , நல்ல உள்ளம். சிறந்த படைப்பாளியான அவருக்கு மரியாதை செலுத்த வேண்டும் என்கிற எண்ணம்தான் எனக்குள் வந்தது. என் அருமை நண்பருக்கு அஞ்சலி செலுத்த மல்லிகைப்பூவை கொண்டு சென்றிருந்தேன். அங்கிருந்த, யாருக்கும் என்னை தெரியாது என்பது எனக்குத் தெரியும். ஆனால் , அது முக்கியம் இல்லை. ராஜ் ப்ரபாவதி மேனன், எனக்கு மெசேஜுகள் அனுப்பினார்.அதில், ' உங்களை பார்த்ததில் ரொம்ப சந்தோஷம். சீனி அண்ணனைப் பார்க்க சென்னையில் இருந்து வந்ததே உங்களை பற்றி அனைத்தையும் சொல்கிறது. நீங்கள் நல்ல மனிதர், உண்மையான நண்பர். என் இதயத்தைத் தொட்டுவிட்டீர்கள் அண்ணா'' என்று கூறியிருந்தார்.

நடிகர் பார்த்திபனின் எக்ஸ் பதிவை பார்த்த பலரும் இதுதான் நட்புக்குக் கொடுக்கும் மரியாதை என்றுபாராட்டியுள்ளனர். நடிகர் ஶ்ரீனிவாசன் நடித்த முதல் தமிழ்ப்படம் புள்ளக்குட்டிக்காரன். மற்றொரு தமிழ்ப்படம் 'லேசா லேசா'.