Rajinikanth in Padayappa Thenappan P - Shree Raajalakshmi Films - Youtube
சினிமா

ரஜினிகாந்தின் ஆகச்சிறந்த ரசிகன் யார் தெரியுமா? #PadayappaRerelease

யார் கதை எழுதினாலும், யார் இயக்கினாலும் தன்னுடைய ரசிகர்கள் எதற்கு முக்கியத்துவம் தருவார்கள், எதை எதிர்பார்ப்பார்கள் என்ற மனநிலையில் இருந்து அவர் விலகியதே இல்லை! அதனால்தான்...

ஆதி தாமிரா

ரஜினிகாந்தின் 75வது பிறந்தநாள், மற்றும் சினிமாவில் அவர் நிறைவு செய்யும் 50வது வருடம் ஆகியவற்றை முன்னிட்டு வரும் 12ஆம் தேதி, வெள்ளிக்கிழமை ’படையப்பா’ படம் ரீரிலீஸ் செய்யப்படுகிறது. இதன் பிரமோஷனுக்காக ரஜினிகாந்த், 40 நிமிட வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அந்த வீடியோவில், படையப்பா படம் உருவானது பற்றியும், வேறு பல விஷயங்கள் பற்றியும் வெளிப்படையான பல கருத்துக்களை பகிர்ந்து கொண்டிருக்கிறார் ரஜினிகாந்த். வழக்கமாக ரஜினிகாந்த், அவரது படங்களின் ஆடியோ ரிலீஸ் விழாக்களில் உற்சாகத்தோடு, சக கலைஞர்களை உரிமையோடு கலாய்ப்பது, திரைக்குப் பின்னால் நடக்கும் சுவாரசியங்களைப் பகிர்ந்துகொள்வது என வெளிப்படையாகப் பேசக்கூடியவர் என்பது நாமறிந்ததே! இந்த வீடியோவில், நாம் எதிர்பாராத வகையில், இன்னும் வெளிப்படையாகத் தயக்கமின்றி பல விஷயங்களை பகிர்ந்து கொண்டிருப்பது சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகியிருக்கிறது.

அவர் இந்த வீடியோவில் என்னவெல்லாம் பேசி இருக்கிறார் என்பதை, முதலில் அவரது குரலிலேயே பார்ப்போம். அதன் பிறகு சில விஷயங்களைப் பேசுவோம். நேரடியாக அதைப் படிக்க விரும்புபவர்கள்.. ஸ்க்ரோல் செய்து கீழே படிக்கலாம்!

”1995ல், அதாவது நான் சினிமாவுக்கு வந்து 21 வருடம் ஆகின்ற சமயத்திலேயே நமது 25 ஆவது ஆண்டில், நண்பர்களின் பெயரில், நாமே சொந்தமாக ஒரு படத்தை பிரமாண்டமான முறையில் தயாரிக்க வேண்டும் என்று முடிவு செய்திருந்தேன். அப்படியே அதற்கான சமயமும் வந்தது. எனக்கு பொன்னியின் செல்வன் நாவலில் வரும் நந்தினி கதாபாத்திரம் மிகவும் பிடித்தமான ஒன்றாகும். அப்படி ஒரு பெண் கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து ஒரு அடிப்படைக் கதை ஒன்றை உருவாக்கி, கேஎஸ்.ரவிக்குமாரிடம் சொல்லி அதற்கான ஒரு திரைக்கதையை அமைக்கச் சொன்னேன். அவரும் அருமையான முறையில் அதைச் செய்து கொண்டுவந்தார்.

”அதன் பின்னர் படத்துக்கு டைட்டிலாக படையப்பா என்ற பெயரை முன்மொழிந்தேன். அந்தப் பெயர் திடீரென எனக்குள் தோன்றிய தலைப்பு. சில சமயங்களில் இப்படித்தான் நடக்கும். ஆனால், அதைக் கேட்டுவிட்டு கேஎஸ்.ரவிக்குமாருக்குத் திருப்தியே இல்லை. ’என்ன சார் இது? ரொம்ப ஓல்ட் ஃபேஷனா இருக்குது, அதோட படை, சொறி என்று வேறு மாதிரி எல்லாம் கேலி பண்ணுவாங்க’ என்று மிகவும் தயங்கினார். ஆனால், என் பிடிவாதம் அவருக்குத் தெரியும். நான் பிடித்தப் பிடியாக நிற்பேன் என்பதால் வேறு வழி இல்லாமல் ஒப்புக் கொண்டார்.

”அதன் பிறகு நீலாம்பரி கதாபாத்திரத்துக்கு யாரை நடிக்க வைப்பது என்ற பேச்சு எழுந்தது. அந்த கேரக்டரை ஐஸ்வர்யாராய்தான் செய்ய வேண்டும் என்று நான் மிகவும் ஆசைப்பட்டேன். ஆனால், ஐஸ்வர்யாராய் அந்த சமயத்தில் மிகவும் பிஸியாக இருந்தார். ’ஒரு வருஷம், ரெண்டு வருஷம் அவங்களுக்காக காத்திருந்தாலும் பரவாயில்லை, அவங்கதான் அந்த ரோலை பண்ண முடியும்’ என்று நான் சொன்னேன். ஆனால், ஒரு கட்டத்தில் அவர்களுக்கு இந்தக் கதையில் நடிப்பதில் விருப்பம் இல்லை என்று தெரியவந்த்து. விருப்பமில்லை என்ற பிறகு நாம் கட்டாயப்படுத்துவதில் அர்த்தம் இல்லை என்று விட்டுட்டோம். வேறு யாரென்று பார்த்தால், ஸ்ரீதேவி, மீனா, மாதவி அப்படியாகப் பலரையும் சொல்கிறார்கள். இவர்கள் எல்லோரும் திறமையான நடிகைகளாக இருந்தாலும், இந்தப் பர்டிகுலர் கதாபாத்திரத்துக்கு, அதாவது திமிரான, அரகண்டான கதாபாத்திரத்துக்கு அவர்கள் பொருத்தமாக இருப்பார்களா என்று எனக்கு ரொம்ப சந்தேகம். அதன் பிறகு, கே.எஸ்.ரவிக்குமார் ரம்யா கிருஷ்ணனைச் சொன்னார். ஒரு சில படங்களில் பார்த்திருக்கிறேனே தவிர ரம்யா கிருஷ்ணன் பற்றி எனக்கு அப்போது அவ்வளவாகத் தெரியாது. அவர் மீதும் எனக்கு நம்பிக்கை இல்லை, ஆனால் வேறு வழியில்லாமல் அரை மனதாகச் சம்மதித்தேன்.

Super Star Rajinikanth Title card

”அடுத்து, அப்பா கேரக்டருக்காக சிவாஜி சார் வேண்டும் என்று நான் சொன்னேன். சிவாஜி சார் வேண்டாம் என்று ரவிக்குமார் சொன்னார். முதல் காரணமாக, ’நம் கதையில், அப்பா கேரக்டர் அவ்வளவு முக்கியத்துவமும் இல்லாத சின்னக் கேரக்டராக இருக்கிறது. தேவர் மகன் மாதிரி படத்தில் அவ்வளவு பெரிய முக்கியமான கதாபாத்திரத்தைச் செய்தவருக்கு இது சரியாக வராது சார். அது சரியில்லை’ என்றார். ஆனால், எனக்கு அவர்தான் வேண்டும் என்று ஆசை! ரவிக்குமார் போய் சிவாஜி சாரிடம் கதையை சொல்லிவிட்டு வந்தார். ’என்னத்தையோ பண்ணிட்டுப் போங்கடா, அவன் ஆசைப்படறான்ல, நான் செய்கிறேன்’ என்பது போல அவரும் ஒப்புக்கொண்டு விட்டார். அதன் பிறகுதான் இரண்டாவது காரணத்தைச் சொன்னார் ரவிக்குமார். ’சிவாஜி சாரின் சம்பளம் ரொம்பப் பெரிதாக இருக்கிறது, நம்ம பட்ஜெட்டுக்குத் தாங்காது’ என்பதுதான் அது. ரவிக்குமார் எப்போதுமே தயாரிப்பாளரின் சிரமங்களை அறிந்த இயக்குநர். அதனால்தான் அப்படி யோசித்திருக்கிறார். ’ரொம்ப தப்பு சார், அவரிடம் கதை சொல்லி ஒப்புதல் வாங்கி விட்ட பிறகு இந்த காரணத்துக்காக நாம் தவிர்த்தால் நம்மைப் போன்ற கேவலமானவர்கள் வேற யாரும் இருக்க மாட்டாங்க. சார் என்ன கேட்கிறார்களோ அதை அப்படியே கொடுத்திட வேண்டும்’ என்று முடிவு செய்தேன். முதல் நாளே முழு செட்டில்மெண்டையும் கொண்டு போய் நேரிலேயே கொடுத்து, காலில் விழுந்து, ஒப்புக்கொண்டதற்கு மகிழ்ச்சி தெரிவித்து ஆசீர்வாதமும் வாங்கிவிட்டு வந்தேன்.

”படப்பிடிப்பு ஆரம்பித்ததும், பெங்களூரில் இருந்து மைசூர் வருவதற்காக சிவாஜி சாருக்கு ஹெலிகாப்டர் புக் ஏற்பாடு செய்திருந்தோம். ’நானே ரொம்ப நாள் கழிச்சு இந்த பக்கம் வருகிறேன்டா, ஹெலிகாப்டர் எல்லாம் வேண்டாம்’ என்று சொல்லி, கேன்சல் செய்து விட்டு காரிலேயே வந்தார். அவர் தங்குவதற்காக மைசூரில் லலிதா மஹாலில், மகாராஜா ஸூட் புக் செய்திருந்தோம். ஷூட்டிங்கில் அந்தக் கோவில் படியில் ஏறி வருவதற்கு அவர் மிகவும் சிரமப்பட்டார். அதை மறைத்துக் கொண்டு நடுநடுவே நின்று, வேறு விஷயங்களைப் பேசியதையும் என்னால் மறக்கமுடியாது. எத்தனையோ பக்கம் பக்கமான டயலாக்குகளை ஒரே ஷாட்டில் பேசி நடித்த அப்பேர்ப்பட்ட நடிகர், படையப்பாவில் சில காட்சிகளில் பிராம்ப்ட் கேட்டு நடிக்க வேண்டியிருந்தது. அதற்காக வருத்தப்பட்டார். ஆனால், முதுமை எல்லோருக்கும் வரக்கூடியதுதானே! அந்த வயதிலும் அவ்வளவு டெடிகேஷனோடு நடித்துக் கொடுத்தார்.

”உணவு இடைவேளைகளில், அவரிடம் நிறைய பேசிக்கொண்டிருக்கும் வாய்ப்பு கிடைத்தது. ’சம்பாதிக்கிற வயதில் நடிக்காமல் இவன் எங்கே, அடிக்கடி இமயமலை போகிறேன், ஆன்மீகப்பயணம் போகிறேன் என்று போய்விடுகிறானே என்றெல்லாம் குறைபட்டுக் கொண்டிருந்தேன்டா. ஆனால், நீ செய்வதுதான் சரி. வேலை, சம்பளம் எல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும், வயது காரணமாகவோ அல்லது வேறு காரணமாக வீட்டில் இருக்க வேண்டியது வந்தால் மனநிம்மதி போய்விடும். அதை நீ இப்போதே பழகிக் கொள்கிறாய் என்பது புரிகிறது. உன் மனம்போலவே இரு’ என்று சொன்னார். அதோடு, ’நான் இறந்து போனால், அந்த இறுதி ஊர்வலத்தில் கூட வருவாயா’ என்றும் கேட்டார். அதை என்னால் மறக்க முடியாது. நானும், கமலஹாசனும் அவர் மறைந்த போது இறுதி ஊர்வலத்தில் முழுமையாகக் கலந்து கொண்டோம்.

”ரகுமான் இசையில், வைரமுத்து பாடல்களை எழுதினார். அத்தனை பாடல்களும் அவ்வளவு அருமையாக இருந்தன. மின்சாரக்கண்ணா பாடலை ஹரிஹரன் அவ்வளவு சிறப்பாக பாடியிருந்தார். ஆனால், ட்ராக் பாடிய ஸ்ரீனிவாஸின் குரல் எனக்கு பிடித்திருந்தால் அவரது வெர்ஷனையே நாங்கள் பயன்படுத்தினோம்.

“அதற்கு முன்னர் வெளியான பாட்ஷா, முத்து போன்ற படங்களில் பஞ்ச் டயலாக்குகள் ரசிகர்களால் பரவலாக ரசிக்கப்பட்டதும், இதிலும் அப்படி ஒன்று இருக்க வேண்டும் என்று நினைத்து மெனக்கட்டு உருவாக்கினோம். ஆனால், படம் வெளியாவதற்கு முன்னாலேயே மீடியாவில் அது வெளியாகிவிடக் கூடாது என்பதற்காக ’என் வழி தனி வழி’ டயலாக்கை உரத்துக் கூட சொல்லாமல் மௌனமாக வாய் அசைத்தே நடித்தேன்.

Re Release of Padayappa Movie

”அடுத்து ’மாப்பிள்ளை இவர்தான், ஆனால் அவர் போட்டிருக்கிற டிரஸ் என்னோடது’ என்ற காமெடிக் காட்சி. செந்திலுக்கு அதிக ஸ்கோப் இருந்த காட்சி அது. ஆனால் அதை எடுப்பதற்கு நேரமில்லாமல், ’இங்கே இதை எடுக்க வேண்டாம். சென்னையில் ஸ்டுடியோவுக்குள் எடுத்துக் கொள்ளலாம்’ என்று ரவிக்குமார் சொல்லிவிட்டார். ’எல்லா நல்ல காட்சிகளையும் இங்கே எடுத்தாச்சு, என்னுடைய காட்சி மட்டும் செட்டில் எடுக்க வேண்டுமா’ என்று செந்திலுக்கு அதில் பயங்கர கோபம். பிறகு, அவரைச் சமாதானம் செய்து அவ்வளவு நீண்ட காட்சியை இரண்டு மணி நேரத்திற்குள் சூட்டிங் செய்து முடித்தோம்.

“அடுத்து, வெற்று உடம்போடு நடித்த சண்டைக் காட்சி!  அதையும் நான்தான் ஐடியாவாக முதலில் ரவிக்குமாரிடம் சொன்னேன். அவருக்கோ ஆச்சரியம்! ’ஏன் சார் இந்த வேண்டாத வேலை, அதெல்லாம் நல்லா இருக்காது, வேண்டாம் சார்’ என்றார். நான் வற்புறுத்தினேன். சண்டைக்காட்சி இயக்குனர் கனல் கண்ணனுக்கும் அதே மாதிரி எண்ணம்தான். ’இதெல்லாம் தேவையில்லாத வேலை, சிரிச்சிடுவாங்க சார்’ என்றார். கனல் கண்ணன், கமல்ஹாசனின் தீவிர ரசிகர் வேறு! கனல் கண்ணன் ஏற்கனவே முத்து படத்தில் வேலை செய்துகொண்டிருந்தபோது, ஒரு முறை ஒரு காட்சியில் நான் நடிப்பதைப் பார்த்துவிட்டு, ’நல்லாதான் நடிக்கிறீங்க சார்’ என்று சொன்னார். ’நல்லா ’தான்’ நடிக்கிறாரா!! இதுவரை நல்லா நடிக்காமலா இத்தனை வருஷம் சூப்பர் ஸ்டாராக இண்டஸ்ட்ரியில் இருக்கிறார், கொழுப்புடா உனக்கு’ என்று ரவிக்குமார் பதில் சொன்னப்பிறகு, ’நான் அந்த அர்த்தத்துல சொல்லல சார். பார்க்கும்போது எனக்கே கண்ல தண்ணி வந்துருச்சு. அதனால பாராட்டாத்தான் சார் சொன்னேன்’ என்று சொன்னார். அப்படியாகப்பட்டவர் அவர். அதன்பின் இருவரிடமும் சட்டையைக் கழற்றி, கைகளை முறுக்கிக் காண்பித்த பின்னர்தான், ’பரவாயில்லையே சார், முயற்சித்துப் பார்க்கலாம்’ என்று சம்மதித்தார்கள். அதன்பிறகுதான், அப்படி ஒரு சண்டைக் காட்சியை எடுத்தோம்.

“அடுத்து கிளைமாக்ஸ்! கடைசியில், நீலாம்பரி ’நான் இவ்வளவு கெட்டது செய்தபின்னரும், நீ எல்லோருக்கும் நல்லதுதான் செய்திருக்கிறாய், என்னை மன்னிச்சிடு படையப்பா’ என்று திருந்துவது போல இருந்தது முடிவு. நான் இல்லை, அந்தக் கேரக்டர் இப்படியிருந்தால் நன்றாக இருக்காது. நீலாம்பரி என்றால் அவ்வளவு ஒரு கெத்தான கேரக்டர் என்று என் மனதில் இருக்கிறது, ஆகவே, ’இப்படியெல்லாம் நான் வந்து உன்னிடம் மன்னிப்பு கேட்பேன் என்று நினைத்தாயா படையப்பா, உனக்கும் எனக்கும், பகை பகைதான். அடுத்த ஜென்மத்தில் பிறந்து வந்தாவது நான் அதைத் தீர்ப்பேன்’ என்று சொல்லிவிட்டு துப்பாக்கியால் சுட்டுக் கொண்டு இறப்பது போல செய்தால்தான், அந்தக் கேரக்டர் நிலைத்து நிற்கும் என்று நான் சொன்னேன். ஆனால், கேஎஸ்.ரவிக்குமார் இதற்கு ஒத்துக் கொள்ளவே இல்லை. ’சார், நாம் படையப்பா படம் எடுக்குறோமோ அல்லது நீலாம்பரி படம் எடுக்கிறோமா? இப்படி ஒரு கிளைமாக்ஸ் வைத்தால் படம் நீலாம்பரியின் பக்கம் திரும்பிவிடும் சார். உங்களை வைத்துக் கொண்டு இப்படி இன்னொரு கேரக்டருக்கு அவ்வளவு முக்கியத்துவம் கொடுக்க முடியாது, கொடுக்கக்கூடாது. நீங்கள் சொன்ன எத்தனையோ விஷயங்களைக் கேட்டேன். இந்த விஷயத்தில், ஒத்துக் கொள்ளவே முடியாது. உங்கள் ரசிகர்களுக்கு நான் பதில் சொல்ல வேண்டியது வந்துவிடும்’ என்று பிடிவாதம் பிடித்தார். ’ரசிகர்களை விடுங்கள் சார், கதைக்கு எது சரியான முடிவு என்று யோசித்துப் பாருங்கள். இதுதான் சார், இந்த கதைக்கு சரியான ஜஸ்டிபிகேஷனாக இருக்கும்’ என்று சொல்லி நான் சம்மதிக்க வைத்தேன். என் பிடிவாதத்துக்கு முன்னால், அவர் எப்படி சமாளிக்க முடியும்? வேறு வழி இல்லாமல் ஒத்துக் கொண்டார். அதன் பிறகு மனசு பொறுக்காமல், எனக்கு சில டயலாக்குகள் வைத்து, நீலாம்பரியின் கண்களை மூடி, வேலாயுதத்தை தொட்டு வணங்குவது போல எக்ஸ்ட்ரா காட்சிகள் எல்லாம் அவர் திருப்திக்காக வைத்துக் கொண்டார். அதாவது படையப்பா கேரக்டருக்கு இன்னும் கொஞ்சம் வேல்யூ கூட்டுகிறாராம்.

”கடைசியில் 19 ஆயிரம் அடி பிலிம் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. எதை எடுப்பது, எதை விடுவது என்று தெரியவில்லை, எனக்கு எல்லாக் காட்சிகளுமே பிடித்திருந்தன. கிட்டத்தட்ட மூன்றே முக்கால், நான்கு மணி நேரம் ஓடக்கூடிய அளவுக்கான காட்சிகள். அப்படியே வெளியிட்டு விடலாமா, ரெண்டு இடைவேளை விடலாமா என்றெல்லாம் எங்களுக்குள் பலத்த யோசனை. எந்த முடிவுக்கும் வரமுடியவில்லை. அதன்பிறகு, கமலஹாசன்தான் உள்ளே வந்து, ’எடிட்டிங்கில் நீங்கள் உட்கார்ந்தால் சரியாக வராது. ரவிக்குமாரிடம் விட்டு விடுங்கள். 14 ஆயிரம் அடிக்குள் அடக்கிக் கொண்டு வரச் சொல்லிவிட்டு விலகிவிடுங்கள், அவர் செய்து விடுவார். அவரது முடிவில் நீங்கள் தலையிடாதீர்கள்’ என்று சொன்ன பிறகுதான் ரவிக்குமாரிடம் ஒப்படைத்தேன். ரவிக்குமாரும், மூன்று மணி நேரத்துக்கு படத்தை அவ்வளவு சிறப்பாக வெட்டிக் கொண்டு வந்தார். படம் ரிலீஸும் ஆனது. அவ்வளவு பிரமாதமான வரவேற்பு கிடைத்தது. எனக்கு ரொம்பவும் திருப்தி, மகிழ்ச்சி!”

இனி.. பேட்டி குறித்து நம் பார்வை..

பாருங்கள், எவ்வளவு வெளிப்படையாக, எத்தனை விஷயங்களைப் பகிர்ந்து கொண்டிருக்கிறார் என்று! இயக்குநர்களிடம் எல்லாவற்றையும் ஒப்படைத்துவிடுவேன், இயக்குநர்களை தலையீடு செய்யக்கூடாது என்று நேற்று முளைத்தவர்களே கதை விட்டுக்கொண்டிருக்கும் போது, யார் என்ன நினைத்தாலும் பரவாயில்லை என்று, ஒரு சினிமாவில் தன் தலையீடு எவ்வளவு அதிகமாக இருந்திருக்கிறது என்பதை தயக்கமின்றி வெளிப்படுத்துகிறார். குறிப்பாக, தலைப்பு வைப்பது, பாடல்களை உருவாக்குவது, பாடல்களைத் தேர்ந்தெடுப்பது, சண்டைக் காட்சிகள், வசனங்கள் இவற்றில் தன்னுடைய பங்களிப்பையும் தருவது என பல விசயங்களில் அவர் தலையிட்டிருக்கிறார். இது இந்தப் படத்துக்கு என்று மட்டுமின்றி அவரது பல படங்களுக்கும் செய்திருப்பார் என்பதை நம்மால் உணரமுடிகிறது. அருணாச்சலம், அண்ணாமலை எல்லாமே இவர் வைத்த பெயர்களாகத்தான் இருக்கும் என்று இப்போது முடிவுக்கு வரமுடிகிறது.

Rajinikanth and Ramya Krishnan in Padayappa

குறிப்பாகத் தன்னுடைய படங்களில் ஒவ்வொரு விசயத்தையும், ரசித்து உருவாக்கி இருக்கிறார். யார் கதை எழுதினாலும், யார் இயக்கினாலும் தன்னுடைய ரசிகர்கள் எதற்கு முக்கியத்துவம் தருவார்கள், எதை எதிர்பார்ப்பார்கள் என்ற மனநிலையில் இருந்து அவர் விலகியதே இல்லை என்று தெரிகிறது. இன்னும் சொல்லப்போனால், ரஜினிகாந்தே ஒரு ரஜினிகாந்த் ரசிகராகவும் ஒவ்வொரு படத்தையும் கையாளுகிறாரோ என்றும் நாம் நினைக்கத் தோன்றுகிறது. ஆம். ரஜினிகாந்தின் ஆகச்சிறந்த ரசிகன்.. அவரேதான்!

இந்தப் படத்தைப் பொறுத்தவரை படையப்பா என்ற டைட்டிலையும், வெற்று உடம்புடன் ரஜினிகாந்த் நடித்த சண்டைக்காட்சியையும் அவராக தேர்ந்தெடுத்து இருப்பார் என்று நம்மால் இதுவரை நம்பியிருக்கவே முடியாது. ரஜினிகாந்த்துக்கு ஆன்மீகத்தில் அதிக நாட்டம் உண்டு என்ற நினைப்பில், அவரை திருப்திப்படுத்துவதற்காக படையப்பா என்ற பெயரையும், அந்தச் சண்டை காட்சி உங்கள் ரசிகர்களுக்கு பிடிக்கும், சார் தைரியமாக செய்யுங்கள் என்று ரவிக்குமார் அவரை வற்புறுத்திச் செய்ய வைத்திருப்பார் என்றும் நாம் நினைத்துக் கொண்டிருந்தோம். ஆனால், நிஜம் தலைகீழாக இருந்திருக்கிறது. ரவிக்குமாருக்கு விருப்பமில்லாமல் அவரை கட்டாயப்படுத்தி தான் இந்த காட்சிகளை எல்லாம் ரஜினிகாந்த் உருவாக்கி இருக்கிறார் என்பது முற்றிலும் நமக்கு ஆச்சரியம் தருகிறது. போலவே ரவிக்குமார், கனல் கண்ணன் போன்றோர் வெளிப்படுத்திய, தனக்கு அது சரியாக வராது என்று சொன்ன விமர்சனங்களைக் கூட தன்னுடைய இமேஜைப் பற்றிக் கவலைப்படாமல் வெளிப்படுத்துகிறார்.

சுருட்டை வாயில் தூக்கிப்போட்டுக் கொண்டு, ஸ்டைலாக ’எட்றா வண்டியை’ என்று வசனம் பேசும் காட்சியைப் பற்றியும், ஊஞ்சலைத் துண்டால் கீழே இழுத்துப்போட்டு ஸ்டைலாக அமரும் காட்சியையும் பற்றியும், பஞ்ச் டயலாக்குகளை மெனக்கெட்டு உருவாக்கி பயன்படுத்தும் காட்சிகளைப் பற்றி அவர் பேசும்போதும், நமக்கு ரஜினிகாந்தை பார்ப்பது போல அல்ல, ஒரு ரஜினிகாந்த் ரசிகனின் பேட்டியைப் பார்த்துக்கொண்டிருக்கிறோமோ எனும் உணர்வே ஏற்பட்டுவிடுகிறது. அவ்வளவு குழந்தைத் தனமான உற்சாகமும், மகிழ்ச்சியும் அவரது முகத்தில் பொங்கி வழிகிறது.

ஆனால், அதே நேரம் அவரது ரசிகர்களின் பார்வைக் கோணத்தில் இருந்து மட்டுமே முற்றிலும் பார்க்காமல், கதையும் சிறப்பாக அமைய வேண்டும் என்ற ஆர்வம் இன்னொரு புறம் வெளிப்படுவதையும் பார்க்கிறோம். குறிப்பாக இந்தப் படத்தில் கிளைமேக்ஸ், ரவிக்குமார் சொன்னது போலவே நீலாம்பரி கதாபாத்திரத்திற்கு அதிக முக்கியத்துவம் தருவதாக அமைந்து விட்டது. அதைச் செய்ய மாட்டேன் என்று ரவிக்குமார் சொன்ன பிறகும் கதைக்குத்தான் முக்கியத்துவம் தர வேண்டும் என்று ரஜினிகாந்த் பிடிவாதம் பிடித்தது அவரது ரசனையை வெளிப்படுத்தும் இன்னொரு பக்கமாக இருக்கிறது.

சிவாஜி கணேசனைப் பற்றி பேசும் போது அவரது கண்களில் ஒரு நெகழ்ச்சி இருந்தது. சிவாஜிகணேசனுக்கு அதிக சம்பளம் தருவதற்காக தங்களுக்குள் ஏற்பட்ட தனிப்பட்ட விவாதத்தையும்,  ஐஸ்வர்யாராய்க்காக வருடக் கணக்கில் காத்திருக்கவும் தயார் என்ற செய்தியையும் தன்னுடைய இமேஜ் பற்றிய எந்தக் கவலையும் இன்றி, எந்தத் தயக்கமும் இன்றி வெளிப்படுத்துகிறார்.

ரஜினியைப் பற்றி நாம் வியந்து பார்ப்பதற்கான இவ்வளவு விஷயங்கள் இந்த பேட்டியில் இருந்தாலும், ஒரு சில விமர்சனங்களும் இல்லாமல் இல்லை.

’அதிகமா ஆசைப்படுற ஆம்பளையும், அதிகமா கோபப்படுற பொம்பளையும் நல்ல வாழ்ந்ததா சரித்திரமே கிடையாது’  என்பது போன்ற வசனங்களை இன்னும் அவர் ரசித்துக் கொண்டிருக்கிறார். அற்புதமான டயலாக் என்று அதைக் குறிப்பிடுகிறார். இதெல்லாம் இந்த நவீன காலத்தில் எடுபடாமல் போய்விட்ட பூமர்த்தனமான வசனங்கள் என்று அவருக்குத் தெரியவில்லை. இப்படியான வசனங்கள் இந்தப் படத்தில் இன்னுமே இருக்கின்றன. போலவே, தனது ஒவ்வொரு படத்தின் மார்க்கெட்டிங்கின் போதும், ரசிகர்களின் எதிர்பார்ப்பை உச்சத்தில் வைப்பதற்காக எதையாவது அடித்து விடும் வழக்கமும் அவரிடம் இருக்கிறது. பல வருடங்களாக ஜெயலலிதாவுடன் இருந்த ஒரு உரசலை அதற்கு பயன்படுத்திக் கொண்டிருந்தார். இப்போது இந்த வெளியீட்டுக்காக, ‘நீலாம்பரி : படையப்பா 2’ என்றொரு கதையை நாங்கள் பேசிக் கொண்டிருக்கிறோம், முடிந்தால் வரும் என்று ஒரு பிட்டையும் போட்டுவைக்கிறார். இப்படி சின்ன சின்ன விமர்சனங்கள் அவர் மீது இருந்தாலும், ஒட்டுமொத்தமாக இந்தப் பேட்டி நம்மை மிகவும் கவர்ந்தது என்றே சொல்ல வேண்டும்.