cyanide Mohan Vartha Bharati
சினிமா

யார் இந்த சயனைடு மோகன்? #KalamKaval

கர்நாடகா போலீசார் இணைந்து ஒரு அதிரடி நடவடிக்கையை எடுத்தனர். அனைத்து செல்போன் அழைப்புகளும் அறிவியல்பூர்வமாக ஆராயப்பட்டன. அனிதாவிடம் பேசியிருந்த போனின் சிக்னல் மங்களூர் ஹோட்டல் காட்டியது... அங்கே..

எம். குமரேசன்

மலையாள இயக்குநர் ஜிதின் கே. ஜோஸ் இயக்கத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ள படம் களம்காவல். மம்முட்டி சைக்கோ கில்லராக நடிக்க, விநாயகன் கடமை தவறான போலீஸ் இன்ஸ்பெக்டராக நடித்துள்ளார். 'கெட்டவனா நடிக்கறதா' என்றெல்லாம் யோசிக்காமல் நடிப்புக்காக மம்முட்டி நடித்துள்ள மற்றொரு படம் இது. கர்நாடகத்தில் பிரபல கொலைக்காரனாக அறியப்பட்ட சயனைடு மோகன் செய்த கொலைகளை தழுவி கொஞ்சம் புனைவுகளையும் சேர்த்து இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளது. இதனால், சயனைடு மோகனை பற்றி பலரும் இணையத்தில் தேடத் தொடங்கியுள்ளனர். யார் இந்த சயனைடு மோகன் என்று பார்க்கலாம்.

கர்நாடக மாநிலம் தக்ஷின கன்னட மாவட்டத்தில் மங்களூரு அருகேயுள்ள பந்த்வால் என்ற பகுதியை சேர்ந்த மோகன்குமார், பெண்களைக் காதலிப்பது போல நடிப்பார்... அல்லது நண்பராக இருப்பார். தொடர்ந்து, பாலியல் ரீதியாக அவர்களைப் பயன்படுத்திக்கொண்டு, பிறகு கொல்வதை வழக்கமாக வைத்திருந்துள்ளார். பின்னர், நகைகளைக் கொள்ளையடித்து விட்டு தலைமறைவாகி விடுவார். சயனைடு கலந்த மாத்திரைகளை கொடுத்துக் கொல்வதை வழக்கமாக வைத்திருந்ததால், சயனைடு மோகன் என்ற பெயரும் அவருக்கு ஏற்பட்டுள்ளது.

2003ம் ஆண்டு முதல் 2009ம் ஆண்டு வரை 20 பெண்கள் இப்படிக் கொல்லப்பட்டுள்ளனர். ஹோட்டல் கழிவறைகள் அல்லது பேருந்து நிலைய கழிவறைகளில் இந்தப் பெண்களின் சடலங்கள் கிடப்பது வழக்கமாக இருந்துள்ளது. கொல்லப்பட்ட அனைவருமே சயனைடு கொடுத்து கொல்லப்பட்டுள்ளது உடற்கூறு ஆய்வில் உறுதிபடுத்தப்பட்டது.

Kalamkaval

கடந்த 2009ம் ஆண்டு மோகனால் கொல்லப்பட்ட ஒரு பெண்ணால் பெரும் கலவரம் ஏற்பட்டது. வேறோர் இனத்தைச் சேர்ந்த அனிதா பாரிமர் என்ற பெண் திடீரென காணாமல் போனார். அப்போது, இன்னொரு மதத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவருடன் அனிதா சென்று விட்டதாகவும் அவரைக் கண்டுபிடிக்கக் கோரியும் அனிதாவின் இனத்தைச் சேர்ந்த மக்கள் பெரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீஸ் நிலையத்தை எரித்து விடப் போவதாகவும் எச்சரித்தனர். இந்த தருணத்தில், போலீசார் தங்களுக்கு ஒரு மாதம் அவகாசம் தரும்படியும் , அனிதா பாரிமரை கண்டுபிடித்து ஒப்படைப்பதாகவும் வாக்குறுதி அளித்தனர். ஆனால், அனிதாவும் மோகனால் கொல்லப்பட்டவர்களின் பட்டியலில் இருந்தார்.

இந்த சம்பவத்தையடுத்து, கர்நாடகா போலீசார் இணைந்து ஒரு அதிரடி நடவடிக்கையை எடுத்தனர். அனைத்து செல்போன் அழைப்புகளும் அறிவியல்பூர்வமாக ஆராயப்பட்டன. அப்போது, அனிதாவிடம் பேசியிருந்த போனின் சிக்னல் மங்களூர் அருகேயுள்ள ஹோட்டல் பகுதியை காட்டியது. அந்த ஹோட்டலுக்குள் புகுந்த போலீசார், தனுஷ் என்ற இளைஞரைக் கைது செய்தனர். அவரிடத்தில் நடத்திய விசாணையில், இந்த சிம்கார்டை தனது மாமா தனக்குக் கொடுத்ததாக கூறியுள்ளார். அந்த கொடூரன்தான் சயனைடு மோகன். சுதாரித்துக் கொண்ட போலீசார் 2009ம் ஆண்டு அக்டோபர் 21ம் தேதி மோகனை அதிரடியாக கைது செய்தனர்.

விசாரணையில் மோகன் கொடுத்த வாக்குமூலத்தில், ''பொருளாதாரரீதியாக பின்தங்கியுள்ள திருமண வயதை எட்டிய பெண்களைதான் அணுகுவேன். அவர்களின் நம்பிக்கையைப் பெற்ற பிறகு, ஹோட்டல் அறைக்கு அழைத்துச் செல்வேன். வரும்போது, அவர்களிடத்தில் இருக்கும் நகைகளை அணிந்து கொண்டு வரும்படி கூறுவேன். ஹோட்டல் அறையில் எல்லாம் முடிந்த பிறகு, 'இப்போது குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டாம். கருத்தரிக்காமல் இருக்க மாத்திரை சாப்பிட்டுக்கொள்கிறாயா?' என்று அவர்களை மூளைச்சலவை செய்து நான் வைத்திருக்கும் சயனைடு கலந்த மாத்திரையைச் சாப்பிடச் சொல்வேன். கழிவறைக்குச் சென்று சாப்பிடும்படி கூறி விடுவேன். அங்கு, அந்த மாத்திரையை வாயில் வைத்ததும் இறந்து விடுவார்கள். பின்னர், நான் நகைகளை எடுத்துக் கொண்டு தப்பிவிடுவேன். இப்படி, 20 பெண்களை கொலை செய்துள்ளேன்'' என்று சர்வசாதாரணமாக கூறியுள்ளார்.

சயனைடு மோகன் கொலை செய்த பெண்களில் கர்நாடக பெண்கள் மட்டுமல்ல கேரளத்தைச் சேர்ந்த பெண்களும் அடக்கம். கொல்லப்பட்ட அனைவரும் 21 வயது முதல் 33 வயது உடையவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. வழக்குகள் அனைத்தும் மங்களூரு நீதிமன்றத்தில் நடந்து வந்தன.

புஷ்பவதி என்ற 21 வயது பெண்ணை கொன்ற வழக்கு உள்பட 6 வழக்குகளில் மோகனுக்கு தூக்குத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 14 வழக்குகளில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. எனினும், தூக்குத்தண்டனை இன்னும் நிறைவேற்றப்படவில்லை. தற்போது, 61வயதான மோகன் பெலகாவியிலுள்ள ஹிண்டல்கா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.