AVM SARAVANAN  Puthuyugam
சினிமா

ஏவிஎம்மின் லெகசியைப் பாதுகாத்த ஏவிஎம். சரவணன்!

நடிகர் சிவகுமார் வாய்ப்புகள் தேடி சோர்ந்திருந்த சமயத்திலெல்லாம் அவருக்கான வாய்ப்புகளை உருவாக்கிக் கொடுத்தவர் ஏ.வி.எம் சரவணன். பழனிசாமி என்ற அவரது பெயரை சிவகுமார் என்று மாற்றியது ஏ.வி.எம் சரவணன்தான்.

ஆதி தாமிரா

வயது மூப்புக் காரணமாக 04.12.25 காலை இயற்கை எய்தியிருக்கிறார், திரு. ஏ.வி.எம் சரவணன். அவருக்கு வயது 86.

 தமிழ் சினிமாவின், முன்னோடித் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான ஏவிஎம் புரொடக்சன்ஸ் நிறுவனம், 1945ல் திரு. ஏவி.மெய்யப்பன் அவர்களால் சென்னையில் தொடங்கப்பட்டது. இதுவரை 300க்கும் அதிகமான படங்களை, தமிழ் மட்டுமல்லாது ஹிந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்டப் பல இந்தியப் பெருமொழிகளிலும் இந்த நிறுவனம் தயாரித்திருக்கிறது. சிவாஜிகணேசன், ராஜ்குமார், எஸ்.எஸ்.ராஜேந்திரன், வைஜயந்திமாலா, கமலஹாசன், சிவகுமார் உள்ளிட்ட இந்தியாவின் புகழ்பெற்ற நட்சத்திரங்கள் பலரையும் இந்த நிறுவனமே அறிமுகம் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.

 1945ல் ஏவிஎம் புரொடக்சன்ஸ் தொடங்கப்பட்டிருந்தாலும், அதற்கு முன்னரே அல்லி அர்ஜுனா, வசந்தசேனா, சபாபதி, ஸ்ரீ வள்ளி போன்ற புகழ்பெற்ற படங்களை  சரஸ்வதி பிக்சர்ஸ், பிரகதி பிக்சர்ஸ் போன்ற பெயர்களில் ஏவி.மெய்யப்பன் தயாரித்திருக்கிறார். ஏவிஎம் புரடக்சன்ஸ் தொடங்கப்பட்ட பிறகு, முதல் படமாக டி.ஆர்.மகாலிங்கம் நடித்த ’நாம் இருவர்’ எனும் சமூகக் கதையமைப்பு கொண்ட சினிமா தயாரிக்கப்பட்டது.

 அந்தக் காலகட்டத்தில், பெரும்பாலும் புராணக் கதைகளே சினிமாவாக்கப்பட்டுக் கொண்டிருந்தன. அந்த நிலையை மாற்றும் வண்ணம், ஏவிஎம் நவீன சமூகக் கருத்துக்கள் அடங்கிய சினிமாக்களை எடுக்க தொடங்கியது குறிப்பிடத்தகுந்த செய்தியாகும். வாழ்க்கை, ஓர் இரவு, அந்த நாள், பெண் போன்ற புதிய சிந்தனைகள் அடங்கிய படங்களெல்லாம் ஏவிஎம்மின் தொடக்கக் காலத் தயாரிப்புகளாகும். நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அறிமுகமான பராசக்தி, ஏ.வி.எம் ஸ்டுடியோவில்தான் படமாக்கப்பட்டது. கமல்ஹாசன் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான களத்தூர் கண்ணம்மா ஏ.வி.எம் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டது. கமல்ஹாசனை ஏவி.மெய்யப்பனே நேரடியாகத் தேர்ந்தெடுத்திருக்கிறார். இப்படியானப் பல பெருமைகளை உடையது ஏ.வி.எம் நிறுவனம்.

1979ல் திரு. ஏவி.மெய்யப்பன் அவர்கள் மறைந்தார். அதன் பிறகு அவரது மகன் சரவணன், அவரது சகோதரர் பாலசுப்ரமணியன் மற்றும் மகன் குகனோடு இணைந்து ஏவிஎம் புரொடக்சன்ஸ் நிறுவனத்தின் பொறுப்பேற்றுக் கொண்டு தொடர்ந்து நடத்தினார். புதிய தலைமையில் இவர்கள் உருவாக்கிய முதல் தமிழ்ப்படம் ரஜினிகாந்த் நடித்த முரட்டுக்காளை! அதைத் தொடர்ந்து சகலகலா வல்லவன், முந்தானை முடிச்சு, புதுமைப்பெண், உயர்ந்த உள்ளம், பாட்டி சொல்லைத் தட்டாதே, சம்சாரம் அது மின்சாரம், எஜமான் போன்ற பெரும் வரவேற்பைப் பெற்றப் படங்களைத் தயாரித்தார்கள்.

2000க்குப் பிறகும், மின்சாரக்கனவு, சிவாஜி போன்ற பெரிய பட்ஜெட் படங்களை, ராஜீவ் மேனன், ஷங்கர் போன்ற புதிய தலைமுறை இயக்குனர்களோடு இணைந்து உருவாக்கினார்கள். ரஜினி நடித்து, ஷங்கர் இயக்கிய சிவாஜி திரைப்படம் அந்தக் காலக்கட்டத்தில் மிகப்பெரும் பொருட்செலவில் தயாராகி, இந்தியத் திரையுலகையே திரும்பிப்பார்க்க வைத்தது. சினிமாத் தயாரிப்பு மட்டுமல்லாது, புகழ் பெற்ற தொலைக்காட்சித் தொடர்களையும் இந்த நிறுவனம் தயாரித்திருக்கிறது. இதற்கெல்லாம் மூளையாக இருந்தது செயல்பட்டது நல்ல அனுபவமும், தெளிவும் கொண்ட சரவணன்தான். அதற்குப் பல உதாரணங்களைச் சொல்ல முடியும். சம்சாரம் அது மின்சாரம் கதையில் மனோரமாவின் கேரக்டரைச் சேர்க்கச் சொன்னதும், அதன் கிளைமாக்ஸில் மனோரமா விசுவிடம் பேசும் காட்சியை வடிவமைத்த்தும் சரவணனின் யோசனை என்று சொல்லப்படுகிறது. இயக்குநர் சரண், விக்ரமை வைத்து ஜெமினி எனும் சூப்பர் ஹிட் கொடுத்ததும் சரவணனின் வியாபார மூளைதான். பாட்டி சொல்லைத் தட்டாதே படத்தின் காரை ஊர் ஊராகக் கொண்டு சென்று, விளம்பரம் செய்து படத்திற்குப் பெருவெற்றியைத் தேடிக்கொடுத்தது அவரது தொழில் யுத்திதான்.

Rajinikanth with AVM Saravanan

நடிகர் சிவகுமார் வாய்ப்புகள் தேடி சோர்ந்திருந்த சமயத்திலெல்லாம் அவருக்கான வாய்ப்புகளை உருவாக்கிக் கொடுத்தவர் ஏ.வி.எம் சரவணன். பழனிசாமி என்ற அவரது பெயரை சிவகுமார் என்று மாற்றியது ஏ.வி.எம் சரவணன்தான். அதற்கு நன்றி கூறும் விதமாகத்தான் - நடிகர் சூர்யாவாக நமக்குத் தெரிந்த - தன் முதல் மகனுக்கு சரவணன் என்று பெயர் சூட்டினார் சிவகுமார்.

 ஒரே மாதிரியான வெள்ளைச் சட்டை, வெள்ளை பேண்ட் உடையில், கைகளைக் கட்டியபடி விழாக்களில் கலந்துகொள்ளும், ஏவிஎம்.சரவணன் அவர்களின் பாந்தமான தோற்றத்தை நாம் அனைவருமே அறிந்திருக்கிறோம். 1979 லிருந்து ஏவிஎம் நிறுவனத்தின் உரிமையாளராகத் தன் தந்தை, ஏவி. மெய்யப்பன் உருவாக்கி வைத்திருந்த நிறுவனத்தின் பெரும் புகழைக் குன்றாமல் தொடர்ந்து எடுத்துச் சென்ற பெருமை ஏவிஎம்.சரவணனுக்கு உண்டு! தமிழ் சினிமாக்களில் கோடம்பாக்கத்தின் அடையாளமாகக் காட்டப்படும் ஏவிஎம் ஸ்டுடியோ நிறுவனத்தின் உலக உருண்டைச் சின்னத்தைப் போலவே, தந்தையின் புகழைப் போலவே, ஏவிஎம். சரவணனின் புகழும் திரையுலகம் உள்ளவரை நீடித்திருக்கும்.