ஒரு சூட்கேஸ், ஒரு பென்டிரைவ், வைரம் ஒளித்து வைக்கப்பட்ட ஒரு பொம்மை என ஒரு பொருளை மையமாக வைத்துச் சுழலக் கூடிய காமெடி + க்ரைம் திரில்லர் படமாக இந்த ரிவால்வர் ரீட்டா வந்திருக்கிறது.
ரீட்டா, அவரது அக்கா, தங்கை, அம்மா, ஒரு கைக்குழந்தை என ஒரு சராசரிக் குடும்பம், எதிர்பாராத வகையில் ஒரு கிரைமில் சிக்கிக் கொள்கிறது. இருவேறு வில்லன் குழுக்கள் அவர்களுக்குள்ளும், துரத்திக் கொள்கிறார்கள், இந்தக் குடும்பத்தையும் துரத்துகிறார்கள். இவர்களுக்கு நடுவே ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டர் குட்டையைக் குழப்புகிறார்! இதுதான் கதை!
ஒரு விஷயத்தை மையமாக வைத்து இப்படிப் பல குழுக்கள், ஒருவரை ஒருவர் துரத்துவது, ஏமாற்றுவது, தப்பிப்பது, பழி வாங்குவது என தேவையான டிவிஸ்டுகளோடு அமைக்கப்பட்ட புதிர்ப்பாதை போன்ற கதையமைப்பு. இதை பிளாக் காமெடி ஜானரில் சொல்ல இயக்குநர் முயற்சித்திருக்கிறார். காமெடி செய்வதற்கு ஏற்ற களம்தான்! கீர்த்தி சுரேஷ், ராதிகா, சுனில், அஜய் கோஷ், ஜான் விஜய், சூப்பர் சூப்பர்ராயன், கதிரவன், சென்ட்ராயன், ரெடின் கிங்ஸ்லி என்று கதைக்கேற்ற பொருத்தமான நடிகர்கள்தான்! எல்லோரும் அவரவர் பங்களிப்பை சிறப்பாகவும் செய்திருக்கிறார்கள்தான்! ஆனால், காமெடிதான் ஒர்க் அவுட் ஆகவில்லை!
ராதிகா, ரெடின் கிங்ஸ்லி வரக்கூடிய காட்சிகளில் ஓரிரு இடங்கள் தவிர வேறு எங்கும் காமெடி ஒர்க் அவுட் ஆகவில்லை. ஒரு கிரைம், அதன் தொடர்ச்சியாக தேடல்கள், ஆபத்து என கதை ஓடிக்கொண்டே இருக்கிறது. ஆனால், நமக்குதான் எந்தப் பதற்றமும் இல்லை. இடைவேளைக்குப் பிறகு எப்போதடா படம் முடியும் என்று நாம் வாட்சையே திரும்பத் திரும்பப் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.
காரணம், படத்தின் இயக்குனர் சந்துரு! சிறப்பாக எழுதியிருக்கிறார், சில விநாடிகளே வந்து போகும் ஹவுஸ் ஓனர், டாஸ்மாக் கேரக்டர்கள் கூட நம்மைக் கவர்ந்து விடுகின்றனர். ஆனால், பிரதான கதாபாத்திரங்களோடு நாம் உணர்வுபூர்வமாக ஒன்ற முடியாமல் போனதுதான் துரதிருஷ்டம்! அப்படியான இயக்கம். சில வாரங்களாக, பார்க்கக்கூடிய அளவில் படங்கள் ஏதும் வரவேயில்லை. அதனால் தியேட்டர் கிரேவிங் ஏற்பட்டுத் தவிக்கும் நபர்கள் வேண்டுமானால், ஒருமுறை பார்க்கலாம்!