பஞ்சாப்பின் லூதியானா பகுதியில் உள்ள நஸ்ராலி கிராமத்தில் 1935-ம் ஆண்டு பிறந்தவர் தர்மேந்திரா. தர்மேந்திரா கேவல் கிருஷண் தியோல் என்பது இயற்பெயர். பாலிவுட் நடிகர் திலிப் குமார்தான் இவருக்கு ரோல் மாடல். பாலிவுட்டில் நடிக்க வேண்டுமென்பதற்காக பஞ்சாப்பில் இருந்து மும்பைக்கு குடியேறினார். ஆரம்ப காலக்கட்டங்களில், கிடைத்த இடங்களில் தங்கி, கிடைத்த வேலையைச் செய்து வந்தார். நாள் ஒன்றுக்கு 200 ரூபாய் சம்பளத்தில் மும்பையில் வாழ்க்கையை ஓட்டி வந்தார். ஆரம்பக் காலக்கட்டங்களில் பாலிவுட்டில் கிடைத்த வாய்ப்புகளில் சாதாரண நடிகராக நடிக்க தொடங்கினார்.
தொடர்ந்து, 1960-ம் ஆண்டு, ‘தில் பி தேரா ஹம் பி தேரே’ படம் மூலம் அறிமுகமானார். அவர் 1966-ம் அண்டு வெளியான ‘பூல் அவுர் பத்தர்' என்ற படம் இவருக்கு பிளாக்ஸ் பஸ்டராக அமைந்தது . அடுத்து, ‘ஆயே தின் பாஹர் கே’ என்ற படமும் ஹிட் ஆனது. அழகான முகமும், ஆர்ப்பாட்டமில்லாத நடிப்பும் தர்மேந்திராவுக்கு கோடிக்கணக்கான ரசிகர்களை பெற்ற தந்தது.
பின்னர், ஷோலே, சுப்கே சுப்கே , தரம் வீர், பூல் அவுர் பத்தர், மேரா காவ்ன் மேரா தேஷ் , பிரதிக்யா , சீதா அவுர் கீதா போன்ற படங்களில் நடித்தார். இதில், ஷோலே படம் வரலாற்றுக் காவியமாக அமைந்தது. நட்பு என்றால் எப்படி இருக்க வேண்டுமென்பதற்கு உதாரணமாக ஷோலே படம் பார்க்கப்பட்டது. . ஷோலே படத்தில் நான் நடித்த 'வீரு 'கேரக்டர்தான் தனது தாய்க்குப் பிடித்த கதாபாத்திரம் என்றும் தர்மேந்திரா சொன்னதும் உண்டு.
1970ம் ஆண்டு ஹேமமாலினியுடன் 'தும் ஹசீன் மேன் ஜவான் 'என்ற படத்தில் தர்மேந்திரா முதன்முறையாக இணைந்து நடித்தார். ஷோலே, சீதா அவுர் கீதா மற்றும் ட்ரீம் கேர்ள் , அலிபாபா 40 சோர், தோஸ்த் என பல படங்களில் நடிகை ஹேமமாலினியுடன் இணைந்து தர்மேந்திரா நடித்துள்ளார். அப்போதுதான், இருவருக்குள்ளும் காதல் மலர்ந்து திருமணத்தில் முடிந்தது. பாலிவுட்டில் மட்டும் தர்மேந்திரா 300 படங்களில் நடித்துள்ளார். இதில், 75 படங்களை ஹிட் கொடுத்துள்ளார். இது, அமிதாப் மற்றும் ஷாருக்கானை விட அதிகமாகும். 1980ம் காலக்கட்டத்தில் லோ பட்ஜெட் ஆக்ஷன் படங்களில் நடிப்பதையும் தர்மேந்திராவின் வாடிக்கையாக வைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
பாலிவுட்டின் ‘ஹீ-மேன்’ என அழைக்கப்படும் தர்மேந்திரா, இந்தி சினிமாவில் அதிக வெற்றிப் படங்களில் நடித்த ஹீரோ என்ற சாதனையைப் பெற்றவர். 1973-ம் ஆண்டு 8 ஹிட் படங்களைக் கொடுத்தார். 1987-ம் ஆண்டு அவர் நடித்து 9 படங்கள் வெளியானது. அதில் அடுத்தடுத்து வெளியான 7 படங்கள் வெற்றி பெற்றன. இந்தச் சாதனை இன்று வரை முறியடிக்கப்படவில்லை. மொத்தம், 300 படங்களுக்கு மேல் தர்மேந்திரா நடித்துள்ளார். 1990ம் ஆண்டுக்குப் பிறகு, குணசித்திர வேடங்களுக்கு மாறினார். இவர், மொத்தம் 65 ஆண்டுகள் சினிமாத்துறையில் கோலோச்சி வந்துள்ளார். அதாவது ஆறு தசாபதங்களுக்கு மேல்! அதோடு, தாய்மொழியான பஞ்சாபி, போஜ்பூரி , தெலுங்கு மொழிகளிலும் இவர் நடித்துள்ளார்.
தர்மேந்திரா கடைசியாக நடித்துள்ள இக்கிஸ் (Ikkis) என்ற திரைப்படம் டிச.25-ம் தேதி வெளியாக இருக்கிறது.
நடிகர் தர்மேந்திரா அரசியலிலும் ஈடுபட்டது உண்டு. கடந்த 2004ம் ஆண்டு பாரதிய ஜனதா கட்சி சார்பில் ராஜஸ்தானின் பிஹானீர் தொகுதியில் போட்டியிட்டு எம்.பியாக தேர்வு செய்யப்பட்டார். பின்னர், வயது மூப்பு காரணமாக தர்மேந்திரா அரசியலில் இருந்து முற்றிலும் ஒதுங்கி விட்டார்.கணவரை பின்பற்றி நடிகை ஹேமமாலினி அரசியலில்புகுந்து தற்போது, ராஜ்யசபா எம்.பியாக உள்ளார். தர்மேந்திராவின் பல படங்கள் அவற்றின் கதையம்சத்தால், தமிழில் ரீ மேக் செய்யப்பட்டுள்ளது.
தர்மேந்திரா தனது 89 வயதில் மறைந்துள்ளார். பாலிவுட் அவருக்கு காலத்துக்கும் நன்றி செலுத்திக் கொண்டிருக்கும்.