இன்று திரையரங்குகளில் வெளியாகும் திரைப்படம் ’அதர்ஸ்’! அபின் ஹரிஹரன் இயக்கத்தில் ஆதித்யமாதவன், கௌரிகிஷன், முனீஷ்காந்த் நடிப்பில் உருவாகியிருக்கிறது இந்தப்படம். இதன் பத்திரிக்கையாளர் சந்திப்பு ஒன்று சமீபத்தில் நடந்தது.
அதில் ஒரு யூடியூப் நிருபர், படத்தின் ஹீரோ ஆதித்யமாதவனிடம், ‘ஹீரோயின் கௌரிகிஷனை தூக்குவது போல ஒரு காட்சியில் நடித்திருக்கிறீர்களே, அவரது வெயிட் எவ்வளவு?’ என்று நக்கலாக கேள்வி கேட்டிருக்கிறார். அந்தக் கேள்வியின் உள்ளர்த்தம், நடிகை குண்டாக இருக்கிறார் எனும் கேலிதான் என்பது தெளிவு.
அந்த நிருபரின் கேள்வியால் காயம்பட்ட நடிகை கௌரி, ‘இதெல்லாம் என்ன மாதிரியான கேள்வி? படத்துக்கும் எனது எடைக்கும் என்ன சம்பந்தம்? ஒரு படத்துக்கான பத்திரிகையாளர் சந்திப்பில் இதுபோன்ற பாடி ஷேம் செய்கிற மற்றும் அநாவசியமாக, அநாகரிகமான கேள்விகளைத் தவிர்த்து படம் சம்பந்தப்பட்ட கேள்விகளைக் கேட்கத் தெரியாதா?’ என்று தனது நியாயமான கோபத்தைப் பதிவு செய்திருக்கிறார்.
இது மாதிரியான கேள்விகள் எல்லாம் நார்மலைஸ் செய்யப்பட்டிருக்கிற நம் சூழலில், ஒரு நடிகை துணிவோடு, தன் எதிர்ப்பைப் பதிவு செய்தால், சற்றேனும் சிந்திக்கத் தெரிந்திருந்தால், ‘சாரி, மேடம்’ என்று ஒரு வார்த்தையில் பிரச்சினையை அந்த நிருபர் எளிதாக முடித்து வைத்திருக்கலாம். ஆனால், தான் கேட்ட கேள்வி என்னவோ உன்னதமான கேள்வி என்பது போல நடிகையிடம் அத்தனை பேருக்கு முன்னால் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கிறார் அந்த நிருபர். ‘பல வருடங்களாக நான் சினிமா நிருபராக இருக்கிறேன். தமிழ் ரசிகர்கள் விரும்பி ரசிக்கிற இண்ட்ரஸ்டிங்கான கேள்வி அது, அதில் என்ன தப்பு? ஒரு நடிகையான உங்களிடம் மோடியைப் பற்றியும், டிரம்பைப் பற்றியுமா கேட்கமுடியும்?’ என்பது அவரது வாதம்.
ஏன் டிரம்பையும், மோடியையும் பற்றிய அரசியல் கேள்விகளுக்கு நடிகைகள் பதிலளிக்க மாட்டார்களா? பதிலளிக்கக்கூடாதா? முதலில் அத்தகைய கேள்விகளைக் கேட்கும் அரசியல் அறிவு அந்த நிருபருக்கு இருக்கிறதா என்பதுதான் நமது கேள்வி.
பேட்டி தந்தவர்கள், பேட்டி எடுப்பவர்கள் அனைவருமே ஆணாக இருக்கும் அந்தச் சூழலில் கௌரி மட்டுமே ஒரு பெண்ணாக இருக்கிறார். அப்படியும் கௌரி தனியாளாக, நிதானமாக அவருக்குப் பதிலளிக்க முயற்சிக்கிறார். ஆனால், அவரைப் பேச விடாமல் வளவளவென்று தொலைக்காட்சி விவாதம் மாதிரி பேசிக்கொண்டிருந்ததோடு மட்டுமல்லாமல், கோபமாகவும் பேசி மன்னிப்புக் கேட்கவும் சொல்லியிருக்கிறார். உடனிருந்த அந்த இயக்குநரோ, ஹீரோவோ இதில் தலையிடாமல் உட்கார்ந்திருந்தது இன்னும் அநியாயம்! மற்ற நிருபர்களும் கூட கௌரிக்கு வாய்ப்பளிக்காமல் கசமுசவென்று குழப்பத்தைத்தான் ஏற்படுத்திக்கொண்டிருந்தனர்.
அந்த நெருக்கடியான சூழலிலும், பதற்றத்திலும் கௌரி, வார்த்தைகளை விட்டுவிடாமல், அழுதுகொண்டு ஒதுங்கிவிடாமல், தைரியமாக, கண்ணியமாக, ’மன்னிப்புக் கேட்கமுடியாது. பாடிஷேம் பண்ணின நீங்கதான் மன்னிப்புக் கேட்கணும், நீங்க கேட்டது முட்டாள்தனமான கேள்விதான்’ என்று சொல்லிவிட்டு, மற்ற அனைத்து நிருபர்களையும் பார்த்து, ‘இது மாதிரி அநாகரீகமான கேள்விகளை கேட்கும் இப்படியான ஆட்களை ஆதரித்து, இப்படியான அநாகரீகங்களை நார்மலைஸ் பண்ணாதீர்கள்’ என்று தன் கருத்தைத் தெளிவாக முன்வைத்தது பாராட்டுக்குரியது.