Dhruv Vikram  Neelam Producions
சினிமா

பைசன் காளமாடன் - தீராப் பகைக்கு தீர்வு கிடைத்ததா? #BisonReview

மிக முக்கியமான கேள்வி. இதே கேள்விதான் மாரி செல்வராஜின் முந்தைய படங்களின் முக்கியமான கருப்பொருளுமாகும். மாரி செல்வராஜ், இந்தக் கேள்வியை விதம் விதமாகக் காட்சிப்படுத்துவதோடு நின்றுவிடுகிறார்.

ஆதி தாமிரா

1990 களின் தொடக்கத்தில் கபடி விளையாட விரும்பும் ஒரு தென்தமிழகத்து இளைஞனின் கனவு என்னவானது, அந்தக் கிராமத்தின் சாதி அரசியல் சூழல் அவனை என்னவெல்லாம் செய்தது என்பதுதான் பைசன் படத்தின் கதை!

இரண்டு இடங்களில் படத்தின் பிரதான கரு, வெளிப்படையான கேள்வியாகவே முன்வைக்கப்படுகிறது.

”நான் பிறக்கும் முன்னமே, என் தந்தை பிறக்கும் முன்னமே, நூற்றாண்டுகளாக எங்களுக்கான தீராத பகை எப்படித் தயாராக வைக்கப்பட்டிருக்கிறது?”

Mari Selvaraj and Dhruv Vikram

மிக முக்கியமான கேள்வி. இதே கேள்விதான் மாரி செல்வராஜின் முந்தைய படங்களின் முக்கியமான கருப்பொருளுமாகும். மாரி செல்வராஜ், இந்தக் கேள்வியை விதம் விதமாகக் காட்சிப்படுத்துவதோடு நின்றுவிடுகிறார். கலைஞன் சரியோ, தவறோ தீர்வை நோக்கி நகர வேண்டும். அதற்கு அவன், அதன் வேரை அடையாளம் காணவேண்டும், அடையாளம் காட்ட வேண்டும். சில வலிகளைக் காலத்தின் பக்கங்களில் பதிந்து வைத்துதான் ஆகவேண்டும்! ஆனால், அது மட்டுமே தீர்வாகிவிடாது. ஆனாலும், நாம் அதை வற்புறுத்தமுடியாது, அது அந்தப் படைப்பாளியின் விருப்பம் மற்றும் உரிமை.

அரசியல்தான் முக்கியமானது, அதில் நமக்கும் மாற்றுக் கருத்தில்லை. சினிமா, இரண்டாம் பட்சம்தான் எனினும் சினிமாவாக பைசனில் சிக்கல்கள் இருக்கின்றன. மிகத் தாமதமாக இரண்டாம் பாதியில்தான் கதைக்கே வருகிறார். படத்தில் நிகழும் சாதி மோதலுக்கும், ஹீரோவுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. அவரது காதல் பிரச்சினைக்கும் கூட சாதி காரணமில்லை. அவர் தேமேயென்று கபடி விளையாடுகிறார். போனால் போகிறதென்று ஒரு தடவை தன் தந்தையிடம் மேற்சொன்ன அந்தக் கேள்வியைக் கேட்கிறார்.

Bison Movie Still

படத்திலிருக்கும் அப்பா, அக்கா, பிடி சார், காண்டீபன் சார், அவர் மகள் மற்றும் பார்வையாளர்களான நாம் என எல்லோரும்தான் அவர் கபடியில் ஜெயிக்க வேண்டும் என நினைக்கிறோம், அவர் நினைப்பதாகத் தெரியவில்லை. பொசுக்கு பொசுக்கென ஓடி வந்துவிடுகிறார். இத்தனைக்கும் ஒவ்வொரு கட்டத்திலும் சாதிதான் விளையாடுகிறது என்றும் வெளிப்படையாகச் சொல்லப்படவில்லை.

தேசியக்குழுவில் இடம் பெறாமல் போகும்போது கூட பணம், அந்தஸ்து, சாதி என எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. இறுதிப் போட்டியில், பைசனை இறக்குவதற்கு கோச் மறுக்கும் போதும் இவன் புதுப் பையனாக இருக்கிறானே என்பதுதான் முதல் காரணமாக இருக்கிறது.

போலவே, நான் லீனியருக்கான அவசியமும் இந்தக் கதையில் இல்லை. முதலிலேயே ஜப்பானில் நடக்கும் ஆட்டக்களத்தில் நாயகன் இருக்கிறார், அவருக்கான வாய்ப்புக்காக காத்திருக்கிறார், அது கிளைமாக்ஸில் வரும் என்பது தெரிந்துவிட்ட பின்பு, அவர் கை உடைந்து விளையாடுவாரா மாட்டாரா என்றொரு கட்டம், கிளப் அணிக்குப் போவாரா மாட்டாரா என்றொரு கட்டம், மாநில அணியில் இடம் பெறுவாரா மாட்டாரா என்றொரு கட்டம்,  தேசிய அணியில் இடம்பெறுவாரா மாட்டாரா என்றொரு கட்டம், இடம் பெற்றதும் பிளைட்டைப் பிடிப்பாரா மாட்டாரா என்றொரு கட்டம், இதெல்லாம் போதாதென்று கடைசி மேட்ச்சில் ஆடுவாரா மாட்டாரா என்றொரு கட்டம்… இதிலெல்லாம் நமக்கு எப்படி ஆர்வம் வரும்?  

Pasupathi in Bison Movie

இடைநிலை சாதியின் பிரதிநிதிகளாக வரும் பிடி வாத்தியாரின் அணுகுமுறை, மற்றும் வில்லன் கந்தச்சாமியின் இன்னொரு கபடிப் பக்கம் என பல விசயங்களும் ரசிக்கும்படி இருந்தன. ’எதுக்காக ஆரம்பித்தது, யார்யாராலோ எங்கெங்கோ போய்க் கொண்டிருக்கிறது’ எனும் பாண்டியராஜாவின் பார்வையும் ஆழமானது. தேசிய அணியில் இடம்பெற்றதற்கு அக்கா கட்டியணைத்துக் கண்ணீர் பெருக்கினால், முத்தமிட்டு வழியனுப்பிவைக்கும் காதலியும் பேரழகு! இன்னும் கொஞ்ச நேரம் பார்க்கலாமே என்று எண்ணும் படியிருந்தது அந்தக் காதல்!

துருவ், பசுபதி, அமீர், லால், ரஜிஷா (அக்கா), அனுபமா (காதலி) என அனைவருமே மிகச் சிறப்பான பங்களிப்பைத் தந்திருக்கிறார்கள். இசை, சண்டைக்காட்சிகள் சிறப்பு! கதைக்குள் கிரிக்கெட் இல்லை எனினும் படம் முழுதும் கிரிக்கெட் இருந்தது லப்பர் பந்து படத்தில். ஆனால், அதில் அத்தனை அட்டகாசமாக கிரிக்கெட்டைப் படமாக்கியிருந்தார்கள். இந்தப் படத்தில் கதைக்குள் இருக்கிறது கபடி. ஒளிப்பதிவு, இன்னுமே கபடியை நமக்குள் கடத்தியிருக்க வேண்டும், தவறவிட்டிருக்கிறது என்பதுதான் நமது எண்ணம்!