கமல், ரஜினி, அஜித், விஜய் இல்லாவிட்டாலும் கூட, சூர்யா, எஸ்கே, கார்த்தி அளவிலாவது யாராவது ஒருவர் தீபாவளிக்கு எட்டிப் பார்த்துவிடுவார்கள். ஆனால், டாப்பர்ஸ் யாருமே இல்லாத ஒரு தீபாவளி இந்த ஆண்டு! என்னவாயிற்று என்று தெரியவில்லை.
இருந்தாலும் பொன் வைக்கிற இடத்தில் பூ வைப்பது போல கோலிவுட்டின் ஹாட்கேக் குட்டி எஸ்கே என்றழைக்கப்படும் பிரதீப் ரங்கநாதனின் ட்யூட் வருகிறது. ’புள்ள ஒரு ஹிட் கூட கொடுக்க முடியாமல் தவிக்குதே’ என்று துருவ் விக்ரம் மீது ஒரு சின்ன சாப்ட் கார்னர் நமக்கெல்லாம் இருக்கிறது. அவர் மீது எதிர்பார்ப்பு இருக்கிறதோ இல்லையோ, அந்த எதிர்பார்ப்பை மாரி செல்வராஜ் ஏற்படுத்துகிறார். அவர்களது கூட்டணியில் பைசன் வருகிறது. அடுத்து இன்னொரு எஸ்கே நம்ம ஹரீஷ்கல்யாண். இவரது கதைத்தேர்வுகள் அபாரம். சமீபத்தில் பார்க்கிங் என்று ஒரு சுவாரசியமான படத்திலும், லப்பர்பந்து எனும் பாத்பிரேக்கிங் படத்திலும் இவர் இருந்ததால் இவரது டீசல் படமும் ஒரு எதிர்பார்ப்புக்குள்ளாகியிருக்கிறது.
டீஸல்:
இரண்டு ஹிட் கொடுத்த தைரியத்தில் ஆக்ஷன் அவதாரம் எடுத்திருக்கிறார் ஹரீஷ். டிரெயிலரில் இரண்டு கோடி லிட்டர் க்ரூட் ஆயில் கடத்தல் என்பது புதிதாக இருந்தது. அதென்ன தங்கமா, கரன்சியா, போதைப்பொருளா… தள்ளிக்கொண்டு போவதற்கு? அதை வைத்து என்ன செய்வது? அதை பிராசஸ் பண்ணி பெட்ரோல், டீஸலா மாற்ற வேண்டுமென்றால் 30- 40 சதுரகிமீ சைஸுல ஒரு ரிஃபைனரி பிளாண்ட் வேண்டும். என்ன சொல்லப்போகிறார்களோ என்று கொஞ்சம் சுவாரஸ்யம் கூடுகிறது. இப்படியான ஒரு மெகா குரூட் ஆயில் கடத்தல் பின்னணியில் கைலியும், கட்டம்போட்ட சட்டையும் போட்ட ஹரீஷ் என்ன செய்யப்போகிறார் என்றும் தோன்றுகிறது வில்லனாக சச்சின் கடேகர், சாய்குமார், வினய் என பல முகங்கள் தெரிகின்றன. இயக்குநர் சண்முகம் முத்துசாமி! இதற்கு முன்னால் நாம் கேள்விப்பட்டிருக்காத நான்கைந்து படங்களை இயக்கியிருக்கிறார். இதுவாவது அவரது பெயரை நிலைநிறுத்துகிறதா என்று பார்ப்போம்!
பைசன்:
பைசன், டேக் லைனாக காளமாடனாம்! பைசன்னா காளைமாடு, இதென்ன பெயருக்கு அர்த்தம் சொல்கிற முயற்சியா? அதற்கு காளைமாடன் என்றே வைத்திருக்கலாமே! இதுவரை ஒவ்வொரு படத்திலும் அரசியலாகவும், இயக்குநராகவும் அடுத்தடுத்த கட்டத்துக்கே நகர்ந்திருக்கிறார் இயக்குநர் மாரி செல்வராஜ்! இந்தப் படமும் நிச்சயம் சாதி அரசியல் பேசும் என்று நம்பலாம். அந்த வகையில் படத்தின் மீது ஒரு இயல்பான எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது. பசுபதி, அமீர், லால் போன்ற பிராமிஸிங்கான முகங்கள் இருக்கின்றன. வெளியாகும் மூன்று படங்களில் இது முந்தும் என்பது நமது கணிப்பு!
ட்யூட்:
இப்படி ஏனோதானோவென்று பெயர் வைத்தால்தான் இன்றைய இளைஞர்களுக்குப் பிடிக்கிறது என்று யார் இவர்களுக்கு சொல்லிக்கொடுப்பது? படம் நன்றாக இருந்தால் அனைவரும் கொண்டாடப்போகிறார்கள், அதற்கு ஒரு நல்ல தமிழ்ப் பெயர் இருந்தால் இன்னும் அழகாகத்தானே இருக்கும்? பாருங்கள், இன்று நாம் பார்க்கும் மூன்று படங்களுக்குமே ஆங்கிலப்பெயர்கள். இந்தப் படத்தின் டிரெயிலர் அப்படியே பிரதீப்பின் லவ்டுடே, டிராகன் படங்களின் அதே தீமிலேயே இருந்தது. கதையும் ஏறத்தாழ அதே போலவே இருக்க வாய்ப்புகள் அதிகம்! முதலில் சில்லறையாக, டாக்சிக்காக இருக்கும் கதாநாயகன் இறுதியில் திருந்துவான் போலிருக்கிறது. இதன் இயக்குநர் கீர்த்தீஸ்வரனுக்கு இது முதல் படம். முன்னர் சுதா கொங்கராவிடம் உதவியாளராக இருந்திருக்கிறார். என்ன செய்து வைத்திருக்கிறார்கள் என்று பார்க்க காத்திருப்போம்!