Kurukshetra: The Great War of Mahabharata @Netflix
சினிமா

குருக்‌ஷேத்ரா- ஓர் அனிமேஷன் ஆச்சரியம்!

துரோணர் படைக்களத்தில் அர்ஜுனனுக்கு எதிராக நிற்கையில் அவரது வேஷ்டியின் மடிப்புகள் காற்றில் படபடப்பது கூட அத்தனைத் துல்லியமாக இருந்தது

ஆதி தாமிரா

குருக்‌ஷேத்ரா எனும் ஓர் அனிமேஷன் தொடர், நெட்பிளிக்ஸில் இந்த வாரம் பட்டையைக் கிளப்பிக் கொண்டிருக்கிறது.

மகாபாரதம் அள்ள அள்ளக் குறையாத ஒரு கதைச்சுரங்கம். அதன் மிக முக்கியமான கதைப்பகுதி கவுரவர்களுக்கும், பாண்டவர்களுக்குமிடையேயான இறுதிப்போரான குருக்‌ஷேத்ரா என்பது நாம் அனைவரும் அறிந்ததே! பல்வேறு விதமான புத்தகங்களாக, சினிமாக்களாக, காமிக்ஸ்களாக, டிவி தொடர்களாக எத்தனை வடிவங்களில் படித்திருக்கிறோம், பார்த்திருக்கிறோம் இல்லையா? அந்த இறுதிக் கட்டமான குருக்‌ஷேத்திரப் போரை மட்டும் முன்னிலைப்படுத்தி எழுதி உருவாக்கப்பட்ட ஒரு தொடர்தான் இந்தக் குருக்‌ஷேத்ரா! ஆனால், நாம் பேசப்போவது கதையைப் பற்றியல்ல, குருக்‌ஷேத்ராவின் அனிமேஷன் உருவாக்கத்தைப் பற்றி!

என்னவொரு அற்புதமான கணினி வரைகலை! இதை சற்றும் நாம் எதிர்பார்த்திருக்கவில்லை. இந்தத் தொடரின் கிரியேடிவ் தலைவராக இருந்து உருவாக்கியவர் அனு சிக்கா (Anu sikka), இயக்கியவர் அமித் குலாட்டி (Amit Gulati)! இவர்களிருவரையும் நாம் ஏற்கனவே நிகோலடியன், வயாகாம், ஜியோ போன்ற டிவி மற்றும் ஓடிடி தளங்களில் குழந்தைகளுக்கான அனிமேஷன் தொடர்களில் கேள்வியுற்றிருக்கிறோம். கான்கா, ஷிவா, ருத்ரா போன்ற 2டி, மற்றும் 3டியில் உருவான சின்னக் குழந்தைகளுக்கான அனிமேஷன் தொடர்களை உருவாக்கியது இவர்கள்தான்! ஆனால், அவற்றிலிருந்து இந்த குருக்‌ஷேத்ரா எந்த விதத்தில் மாறுபட்டிருக்கிறது?

Kurukshetra: The Great War of Mahabharata

அனிமேஷன் தரம்!

இதுவரை பிக்ஸார் ஸ்டுடியோஸ்,டிஸ்னி, டிரீம்வொர்க்ஸ், இலுமினேஷன் போன்ற ஹாலிவுட் அனிமேஷன் ஸ்டுடியோக்களில் தயாரான முழுநீள சினிமாக்களைப் பார்த்து வியந்திருக்கிறோம். முதல் முறையாக இந்தியாவில் அப்படியான ஒரு தரத்தில் குருக்‌ஷேத்ரா உருவாகியிருக்கிறது. இதை உருவாக்கியது, கொல்கத்தாவிலிருக்கும் ஹைடெக் அனிமேஷன் ஸ்டுடியோ (Hi-tech animation Studios)! 

இந்த ஸ்டுடியோவிலிருந்து இதற்கு முன்னால் இப்படியான ஓர் ஆக்கம் வந்ததில்லை. முன்னர் குறிப்பிட்ட ஷிவா, ருத்ரா போன்ற குழந்தைகளுக்கான குறுந்தொடர்கள் இவர்கள் ஆக்கியதுதான் எனும்போது, நாம் இப்படி ஒரு படைப்பை இவர்களிடமிருந்து எதிர்பார்த்திருக்கவில்லை. 

மனித உடலசைவுகள், பின்னணிக் காட்சிகள், தேர்கள், குதிரைகள், யானைகள், அரங்கப் பொருட்கள் என ஒவ்வொன்றையும் பார்த்துப் பார்த்து செதுக்கியிருக்கிறார்கள். ஹாலிவுட் ஸ்டுடியோக்களுக்கு சற்றும் குறையாத படைப்பு எனலாம். முகபாவங்களிலும், முகவமைப்புகளிலும் இன்னும் ஏற்றம் தேவையென்றாலும், அதில் படைப்பின் பிரதான நோக்கம், கிரியேடிவ் தலைமையின் தேவை, பட்ஜெட், நேரம் போன்ற பல விஷயங்கள் காரணங்களாக இருக்குமே தவிர, நமது டெக்னிகல் போதாமை காரணமாக இருந்திருக்காது என்பதைக்கூட நம்மால் உணரமுடிகிறது.

துரோணர் படைக்களத்தில் அர்ஜுனனுக்கு எதிராக நிற்கையில் அவரது வேஷ்டியின் மடிப்புகள் காற்றில் படபடப்பது கூட அத்தனைத் துல்லியமாக இருந்தது! ஏற்கனவே, ஹாலிவுட் படங்களில் பகுதி பகுதியாக பங்கேற்பது, இந்தியப் படங்களில் அற்புதமான சிஜி வேலைகள் செய்வது என Prime focus, Makuta VFX, PhantomFx  போன்ற இந்திய நிறுவனங்களின் வரிசையில் Hi-tech Animation-னும் ஓர் இடத்தைப் பிடித்திருக்கிறது என உறுதியாகச் சொல்லலாம். எதிர்காலத்தில் இன்னும் ஆச்சரியங்கள் பல இவர்களிடமிருந்து வரும் என்றும் நம்பலாம்!