பாலிவுட் சூப்பர்ஸ்டர்ர் அமிதாப் பச்சன் தனது 83வது பிறந்தநாளை அக்.11 அன்று கொண்டாடினார். இந்த வயதிலும் உடல் ஆரோக்கியத்தில் அமிதாப் பச்சன் மிகுந்த கவனம் செலுத்தி வருகிறார். வயதுக்குத் தக்கபடி தனது உணவு முறையை மாற்றிக் கொண்டார். காலையில் சிறிது நேரம் உடற் பயிற்சி, மூச்சுப் பயிற்சி, யோகாவுடன்தான் நித்தமும் அவரின் தினசரி வாழ்க்கை தொடங்குகிறது.
காலையில் எழுந்ததும் சில துளசி இலைகளை எடுத்துக் கொள்வார். காலை உணவாகப் புரத பானம், பாதாம், இளநீர் குடிப்பதை வழக்கமாக வைத்துள்ளார். நெல்லிக்காய் ஜூஸ், பேரீச்சம்பழம் மற்றும் சத்தான பருப்பு வகைகளையும் உணவில் சேர்த்துக் கொள்கிறார். இப்போது அசைவ உணவை விட்டுவிட்டார். இனிப்பு , அரிசி பக்கமும் போவதில்லை. இதனால், உடலையும் பிட்டாக வைத்துக்கொள்கிறார்.
வாழ்க்கையில் ஏற்ற இறக்கங்களை சந்தித்த அமிதாப்பச்சன், 1995 ம் ஆண்டு ஏபிசி என்ற சினிமா கம்பெனியை தொடங்கினார். இந்த நிறுவனம் தயாரித்த அனைத்து படங்களுமே தோல்வியை சந்திக்க, கடனாளியாக மாறினார். பின்னர், கோன் பனேகா குரோர்பத்தி நிகழ்ச்சிதான், அவரை வீழ்ச்சியில் இருந்து மீட்டது. இப்போது, கிட்டத்தட்ட 2 ஆயிரம் கோடிக்கு மேல் அவரிடத்தில் சொத்துக்கள் இருப்பதாக சொல்கிறார்கள். அவற்றில், முக்கியமானவை எவை என்று பார்க்கலாம்.
மும்பை ஜூகு பகுதியிலுள்ள "ஜல்சா" என்ற வீட்டில்தான் அமிதாப் வசிக்கிறார். அற்புதமான கட்டடக்கலைகளை கொண்டது இந்த வீடு. இந்த வீட்டின் மதிப்பு மட்டும் 200 கோடி ஆகும். உண்மையில் அமிதாப்பச்சன் இந்த வீட்டை வாங்கவில்லை. வெற்றிப் படமான "சட்டே பே சத்தா" படத்தில் நடித்ததற்காக சம்பளமாக இயக்குநரும் தயாரிப்பாளருமான ரமேஷ் சிப்பியால் இந்த வீடு பரிசாக அளிக்கப்பட்டது. இந்த வீட்டில்தான் அமிதாப்பச்சன் தனது மனைவி ஜெயா பச்சன், மகன் அபிஷேக் , மருமகள் ஐஸ்வர்யா ராய், மற்றும் பேத்தி ஆராத்யா ஆகியோருடன் வசிக்கிறார். மகள் ஸ்வேதா நந்தா திருமணத்துக்கு முன்பு வரை, இங்குதான் வசித்தார். ஒவ்வொரு , ஞாயிற்றுக்கிழமையும், இந்த வீட்டின் முன்பு ரசிகர்கள் கூடி, அமிதாப்புக்கு வாழ்த்து சொல்வதை காண முடியும்.
இதே ஜூகு பகுதியில் அமிதாப்புக்கு "பிரதீக்ஷா" என்ற மற்றொரு வீடு உள்ளது. மும்பையில் அவர் வாங்கிய முதல் வீடு இதுதான். அமிதாப்பின் தந்தை ஹரிவன்ஸ்ராய் பச்சன், தாயார் தேஜி பச்சன் வாழ்ந்த வீடு இது. அதனால், மிகுந்த சென்டிமெண்டாக இந்த வீட்டை அவர் கருதுவார். பெற்றோர் வாழ்ந்த அறைகளை எந்த மாற்றமும் செய்யாமல் இப்போதும் அப்படியே பராமரித்து வருகிறார். இந்த வீட்டருகேதான், அமிதாப்பின் அலுவலகமான "ஜனக் " அமைந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த வீட்டின் மதிப்பு 50 கோடி என்கிறார்கள்.
இது தவிர, பிரான்ஸ் தலைநகர் பாரீசில் ஒரு சிறிய மேன்ஷன் அமிதாப்புக்கு சொந்தமாக இருக்கிறது. இந்த மேன்ஷனை, அமிதாப்பின் மனைவி ஜெயா பச்சன் வாங்கி பரிசளித்துள்ளார். இதன் விலை 3 கோடி ஆகும்.
அமிதாப்பச்சனுக்கு 260 கோடி மதிப்பிலான ஜெட் விமானமும் சொந்தமாக உள்ளது. அமிதாப்புக்கு, "தாதா பால்கே" விருது, கிடைத்த போது, இந்த ஜெட் விமானத்தின் படத்தை சமூகவலைத் தளங்களில் பகிர்ந்து அபிஷேக் வாழ்த்து தெரிவித்தது குறிப்பிடத்தக்கது. விளம்பரம் மற்றும் சினிமா சூட்டிங்கிற்குச் செல்ல வசதியாக இந்த விமானத்தைதான் அமிதாக் பயன்படுத்தி வருகிறார்.
இன்னாரு விஷயம் அமிதாப்பச்சன் மவுன்ட்பிளாங் பேனாவைதான் பயன்படுத்துவதை வழக்கமாக வைத்துள்ளார். இதன் விலை ரூ.67 ஆயிரம் என்பது குறிப்பிடத்தக்கது.
83 வயதிலும் அமிதாப் "120 பகதூர்" என்ற படத்தில் நடித்து வருகிறார். அதோடு, 'கோன் பனேகா குரோர்பத்தி' நிகழ்ச்சியின் 17வது சீசனையும் சிறப்பாக நடத்தி கொண்டிருக்கிறார்.