Big Boss House Season 9 @vijaytelevision - X
சினிமா

கையை நீட்டிப்பேசாமல் ஆவேசப்படுவது எப்படி? #BiggBoss9 Day1

தூங்கப்போன தர்பூசணி ஸ்டாரின் தூக்கத்தில் ஒரு லோடு மண்ணை அள்ளிப்போட்டு முதல் பிரச்சினையை ஆரம்பித்து வைத்தார் மொரட்டு பிரவீன்.

ஆதி தாமிரா

அறிமுக நாள் நிகழ்ச்சியெல்லாம் முடிந்து விசே வீட்டுக்குக் கிளம்பிய பிறகு, மற்ற ஃபார்மாலிடிஸெல்லாம் முடித்துவிட்டு முதல் நாள் அதிகாலை 2 மணிக்கு மேல்தான் வீட்டுக்குள் போட்டியாளர்கள் படுக்கப் போயிருப்பார்கள் போலிருக்கிறது.

தூங்கப்போன தர்பூசணியின்... அதாங்க வாட்டர்மெலனின் தூக்கத்தில் ஒரு லோடு மண்ணை அள்ளிப்போட்டு முதல் பிரச்சினையை ஆரம்பித்து வைத்தார் மொரட்டு பிரவீன். அதிகாலை 3 மணிக்கெல்லாம் நாம் நேற்று பேசிய 'டாக்டர்' பிரச்சினையை எடுத்தார். தர்பூசணி ஸ்டார் திவாகரைப் பார்த்து, ’BPTயெல்லாம் டாக்டர்னு போடக்கூடாதுய்யா, உள்ள தூக்கி வைச்சிருவானுங்க, ஜாக்கிரதை’ என்று சொல்ல, ’அதெல்லாம் சட்டத்தில் இடமிருக்கு, உங்களுக்கெல்லாம் சொன்னா விளங்காது. அதெல்லாம் மெடிகல் டெர்மினாலஜி’ என்று தர்பூசணி திவாகர் பதிலுக்குப் பிரவீனைப் பார்த்துச் சொல்லாமல், பக்கத்தில் தேமேயென்று துணி மடித்து வைத்துக் கொண்டிருந்த கெமியைப் பார்த்துச் சொல்லிவிட, கெமி டென்சனாகி, ‘அதென்ன மருந்து மாத்திரை விசயமா எங்களுக்கு புரியாமல் போவதற்கு? என்னை என்ன முட்டாள்னு நினைச்சியா?’ என்று தர்பூசணி ஸ்டாரை ஒரு குத்துவிட்டார்.

Clash between Praveen and Diwakar - Tamil Big Boss Season 9

அடுத்த கொஞ்ச நேரத்துக்கெல்லாம், எஃப்ஜே (FJ) வந்து, தூங்கிக் கொண்டிருந்த பூசணியை எழுப்பி, ‘குறட்டை விடாம தூங்குய்யா, இல்லைன்னா, குப்புற படுத்து மூச்சைப் பிடித்துக்கொண்டு தூங்கு’ என்று சொல்லிவிட்டுப்போனார்.

காலையில் எழுந்த தர்பூசணி, குறட்டை பிரச்சினையை எழுப்பினவன் எவன், டாக்டர் பிரச்சினையை எழுப்பினவன் எவன் என்று தெரியாமல் கன்ஃப்யூஸ் ஆகி, மொரட்டு பிரவீனுடன் ’நீயும்தாண்டா குறட்டை விட்டு தூங்கினே... என்னைய எப்படிடா குறட்டை விட்டேன்னு சொல்லலாம்’  என்று இடம் தெரியாமல் மல்லுக்குப் போனார். ரெண்டு பேரும் கையை நீட்டி ஆவேசப்பட்டுக் கொண்டார்கள். ‘எதுவானாலும் கையை இறக்கிப் பேசு’ என்று ஒருவரையொருவர் எச்சரித்துக்கொண்டு, கையை நீட்டாமல் ஆவேசமாகப் பேச முயற்சித்தார்கள். சில சீசன்களாக, இதுவொரு பாரெழவு பிரச்சினையாக இருக்கிறது. அதெப்படி கையை நீட்டாமல் ஆவேசப்பட முடியும், கோபப்பட முடியும், சண்டை போட முடியும்? இதற்கு பிக்பாஸ் ஒரு பைசல் பண்ணினால்தான் இந்தச் சிக்கல் ஓய்ந்து நிம்மதியாக சண்டை போட முடியும் போலிருக்கிறது.

வெளியே ப்ரவீண் காந்தி, விக்ரம், துஷார் இருவரையும் கூட்டிவைத்துக்கொண்டு பூமர் தத்துவங்களை உதிர்க்க ஆரம்பித்தார், ‘பெண்கள் பொறாமையும், பேராசையும் பிடித்தவர்கள். ஆண்கள் அப்படிக் கிடையாது, தன்னை நிரூபிக்கத்தான் போராடுவார்கள். இது இறைவனின் படைப்பு’ என்றொரு அரிய தத்துவத்தை உதிர்த்தார். அதுவும் எப்படி? பக்கத்தில் நந்தினி எனும் ஒரு பெண்ணை வைத்துக்கொண்டே! நந்தினி பக்கென பற்றிக்கொண்டு அவரை வாயைத் திறக்கவிடாமல் போட்டுத் தாக்கவும், வேறு வழியின்றி ’பெண் ஒரு இயக்க சக்தி, ஆக்க சக்தி’ என்று சமாளித்து சரண்டராகிவிட்டார்.

Discussion Between Gandhi,Vikram,Tushar and Ramya

ஏதாச்சும் ஆரம்பிச்சு வைப்போம் என பிக்பாஸ் இரண்டு பிரச்சினைகளோடு வந்தார். முதல் பிரச்சினை: வீடு, சாதா, சூப்பர் டீலக்ஸ் என இரண்டாக பிரிக்கப்படுகிறது (சமூக ஏற்றத்தாழ்வுகளை புரியவைக்கிற கான்செப்டாம்!) என்று சொல்லி டீலக்ஸ் ஆட்களுக்கு பல சலுகைகளை வழங்கி அவர்களுக்கு தேவையான எல்லா வேலையையும் மற்றவர்கள் செய்ய வேண்டும். மற்றது, ‘வெளியுலகில் தண்ணி பிரச்சினை எவ்வளவு இருக்கு தெரியுமா? நீங்களும் அனுபவிச்சித் தெரிஞ்சுக்கோங்க. லைட்டு எரியும் போது மட்டும்தான் தண்ணி வரும், ஓடிப் போய் டேங்குல பிடிச்சி வைச்சுக்கணும்’னு ஒரு டாஸ்க்கை ஆரம்பிச்சு வைத்து... அதுக்கு தலைவர் மற்றும் உதவியாளரைத் தேர்ந்தெடுக்கச் சொன்னார். ’தண்ணிவண்டி இழுக்க வேண்டும், ஆகவே பெண்கள் வேண்டாம்’ என்று பூமர் காந்தி ஆரம்பிக்கவும், ‘அதெப்படி அதை நீங்க சொல்லலாம்? நாங்க என்ன வீக்கா?’ என்று பாய்ந்துவிட்டு கூடிப்பேசினார்கள். பிறகு வந்து, ‘தண்ணி வண்டில்லாம் எங்களால இழுக்க முடியாது, ஆம்பளைங்களே இருந்துக்கோங்க’ என்று சொல்லிவிட்டார்கள். இறுதியாக அதன் தலைவராக கமருதீன், உதவியாளராக சபரி நியமிக்கப்பட்டார்கள்.

அவர்கள்தான் அதற்கு இன்சார்ஜ் என்றதும், வழக்கம் போல அவர்கள்தான் எல்லா வேலையையும் செய்ய வேண்டும் என்று முடிவாயிற்று. லைட் எரியும் சில நொடிகளில் டேங்க் வைத்த வண்டியை இழுத்துப்போய் தண்ணி பிடிக்க வேண்டுமாம். இனி அடுத்தக் கட்டமாக மற்றவர்கள் குளிக்கக்கூட இவர்கள்தான் தண்ணீர் கொண்டுபோய் கொடுக்க வேண்டும் என்று சொல்லப் போகிறார்கள். அதற்கும் அடுத்து அவர்கள்தான் எல்லோரையும் குளிப்பாட்டிவிட வேண்டும் என்றும் சொல்லப் போகிறார்கள். அதையும் இந்த இன்சார்ஜ் பக்கிகள் செய்தாலும் செய்வார்கள்.

அடுத்து நாமினேசன் ஆரம்பித்தது. டீலக்ஸ் பிரிவினரிலிருந்து மூவருக்கு விலக்கு கிடைக்க மற்றவர்கள் மாற்றி மாற்றிக் குத்திக்கொண்டார்கள். எதிர்பார்த்தபடியே பரவலான ஓட்டுக்களை கலை, தர்பூசணி ஸ்டார் திவாகர், ப்ரவீண் காந்தி ஆகியோர் பெற கூடுதலாக ரியானா, ஆதிரை, அப்சரா, ப்ரவீன் உட்பட ஏழு பேர் நாமினேஷன் ஆனார்கள். கலையை நம்மால் பார்க்க முடியவில்லை, அதேதான் போட்டியாளர்களுக்கும் தோன்றியிருக்கிறது போல! ஆனால், அடுத்த நேரடி மோதல் விளையாட்டான, ‘ஒரு நாள் கூத்து’ ஆரம்பித்த போது அதை கலை ஸ்போர்டிவாக எடுத்துக்கொண்டதாகத் தோன்றியது. ஆனால், அந்த விளையாட்டில் வழக்கம்போல பெண்கள் உள்ளுக்குள் சூடாவதைக் கவனிக்க முடிந்தது. ஸ்டிக்கர் தந்தவர்கள் மீதான அவர்களின் பதில் நடவடிக்கைகளை அடுத்தடுத்த நாட்களில் எதிர்பார்க்கலாம்.