Still from Mugamoodi (2012) imdb
சினிமா

புகழ் போதையில் இருப்பவர்களுக்கு நாசர் சொல்லும் பாடம்!

"எனது மனைவிக்கும், பிள்ளைகளுக்கும் உணவு வாங்க நான் வந்திருக்கிறேன். இதில் ஆச்சரியப்படுவதற்கு என்ன இருக்கிறது? புகழற்ற காலத்திலும் நான் இருந்திருக்கிறேன்."

ஆதி தாமிரா

நாசர் இப்போதும் பிசியாகத்தான் இருக்கிறார். ஆனால், அவர் நடிப்பில் மிக உச்சத்தில் இருந்தது 1990லிருந்து 2010 வரையிலான சமயத்தில். ஹீரோவாக, வில்லனாக, முக்கியக் கதாபாத்திரங்களில் என வருடத்துக்கு 10 படங்கள் நடித்துக்கொண்டிருந்த காலகட்டம் அது. அப்போதுதான் இப்படி ஒரு சம்பவம் நடந்திருக்கிறது.

நாசர், அவர் வாழும் சென்னை கேகே நகர் நகர் பகுதியிலிருந்த ஓர் ஓட்டலில், உணவு வாங்குவதற்காக கையில் தூக்கு வாளியுடன் வரிசையில் நின்றுகொண்டிருந்திருக்கிறார். விஐபியானாலும், எனது கடையில் வரிசையில் நின்றுதான் வாங்க வேண்டும் என்ற ஏதோ ஒரு கொள்கைக் குன்று நடத்திய ஓட்டல் போலிருக்கிறது.

’நீங்க என்ன சார் லைனில் நின்றுகொண்டு?’ என்று கரு.பழனியப்பன் அவரைக் கேட்டபோதுதான்,

‘எனது மனைவிக்கும், பிள்ளைகளுக்கும் உணவு வாங்க நான் வந்திருக்கிறேன். இதில் ஆச்சரியப்படுவதற்கு என்ன இருக்கிறது? புகழற்ற காலத்திலும் நான் இருந்திருக்கிறேன். புகழற்ற காலம் இனியும் வரலாம். அப்போதும் என் இயல்பு பாதிக்கப்படாமலிருக்க வேண்டுமானால் இதெல்லாம் நான் செய்யத்தானே வேண்டும்!’

என பதில் சொல்லியிருக்கிறார் நாசர்.

புகழும், அதிகாரமும் என்ன செய்யும்?

அடேங்கப்பா! உறவினர்களில் யாராவது உயர் அரசுப் பதவியிலிருந்தால் அவர்களைக் கவனித்திருக்கிறீர்களா? பதவியிலிருக்கும்போது மனைவி, பிள்ளைகள் கூட இரண்டாம் பட்சம்தான். பிற உறவினரைப் பற்றிக் கேட்கவே வேண்டாம். தூரத்திலிருந்து திருப்பதி வெங்கடாஜலபதி போல ஒரு தரிசனம் கிடைக்கும். அவ்வளவுதான், அதற்கே உறவினர்கள் லிட்டரலாக துண்டை இடுப்பில் கட்டிக்கொண்டிருப்பதைப் பார்த்திருக்கிறோம். அரசுக் கார், ஓட்டுனர், உதவியாளர்கள், கீழ்நிலை ஊழியர்கள் என எப்போதும் பணிந்து நின்றுகொண்டிருக்க ஒரு கும்பலே இருந்துகொண்டிருக்கும். திடீரென இவர்கள் ஒரு நாள், பணி ஓய்வு பெறுகையில், இந்தக் கூட்டம் சட்டென காணாது போய்விடும். அப்போது இவர்கள் சந்திக்கும் வெறுமை சாதாரணமானதல்ல! 

Still from the movie - The Ghazi Attack (2017)

சமீபத்தில் அப்படியான ஒரு மனிதரைக் காணச் சென்றிருந்த போது சில விசயங்களைக் கவனிக்க முடிந்தது. தனிமை, முதுமை, நோய்மை! நினைத்த நேரத்தில் கழிவறைக்கு, கைத்தாங்கலாக அழைத்துச்செல்லக்கூட ஆட்கள் தேவைப்படுகிறது அவருக்கு! நல்லவேளையாக அவரது மனைவி அவற்றையெல்லாம் முகம் சுளிக்காது செய்கிறார். அதுகூட சிலருக்குக் கிடைக்காமல் போகும் நிலையை நினைத்துப் பாருங்கள்! பெரும் துயர்தான்! 

என்னென்ன பேச ஆசைப்படுகிறார், யார் யாரைச் சந்திக்க ஆசைப்படுகிறார் என்பதைக் கூட புரிந்துகொள்ள முடியவில்லை. ‘நல்லாருக்கியா’ என்பதை, ‘ந்ல்ல்.க்க்.இ.ஆஆ’ என்று கேட்பதற்குள் அவருக்குள் ஒரு போராட்டமே நடந்து முடிகிறது. குரல் எங்கோ கிணற்றுக்குள் இருந்து ஒலிப்பதைப் போல அத்தனை மெலிந்தும், குறைந்துமிருந்தது. ஞாபகத்திலும் பிழை. ‘நல்லாயிருக்கியா?’ என்று கேட்க நினைத்து, அந்த ஒரு வார்த்தையை முடிப்பதற்குள்ளாகவே, ‘சாப்பிட்டியா?’ என்று கேட்கத் தொடங்கியதாய் எண்ணிக் குழப்பமாய்ப் பேசினார். மனிதர்களைச் சம்பாதிக்காது போய்விட்டோமோ என்ற கவலைதான் அதிகமிருந்தது. மனிதர்களோடு பேச வேண்டும் என்பதான வேட்கையைதான் இருந்தது. ஆனால், புகழும், அதிகாரமும் இருக்கையில் அது அவருக்குத் தோன்றியிருக்கவில்லை. அவை நிரந்தரமானது என எண்ணிக்கொண்டிருந்திருக்கிறார்.

புகழ் போதை மனிதனுக்கு மிகப்பெரிய மிதப்பை உண்டாக்கவல்லது! ஆள், அம்பு, சேனை, பரிவாரமெல்லாம் நம்மைச் சுற்றிக் களைகட்டும் போதும் நாம் ஒரு நார்சிஸிஸ்டாக மாறிக்கொண்டிருக்கிறோமா என்ற சுய பரிசோதனை செய்து கொள்ளும் முதிர்ச்சி வேண்டும். தரையில் கால் பாவி நிற்க வேண்டும்! இல்லாவிட்டால், புகழும், அதிகாரமும் நம்மை விட்டுப் போகும் போது ஏற்படும் அதிர்ச்சியை நம்மால் தாங்கிக்கொள்ளவே முடியாது.

மாறாக, நாசரிடம் இருக்கும் தெளிவை நாம் அனைவருமே கைக்கொள்ளுவது நல்லது!