அசுரன் படத்தின் தினத்தந்தி முதல் பக்க விளம்பரம் இன்னும் நன்றாக நினைவில் உள்ளது. அழுக்கான பிரவுன் சட்டை, வேட்டி, தலையில் கட்டப்பட்ட பச்சைத் துண்டு, பெரிய மீசையுடன் நல்ல உயரமான ஆஜானுபாகுவான ஓர் ஆள், கையில் வேல் கம்புடன் நடந்து வருவதைப் போன்ற காட்சி அது. பொல்லாதவன், ஆடுகளம் போன்ற படங்களைத் தந்த வெற்றிமாறன், யாரோ புது நடிகருடன் இன்னொரு படம் பண்ணுகிறார் என்று நினைத்துவிட்டு பெயரைப் பார்த்தப் போதுதான் வியந்தோம், அது தனுஷ் என்று. இத்தனைக்கும் அது பிராஸ்தடிக் மேக்கப் போன்ற வித்தையுமல்ல. ஒரு நடிகன் தன் உடல் மொழியால் மட்டுமே இப்படி வேறொரு ஆளாக மாற முடியுமா என்று வியக்க வைத்த ஸ்டில் அது!
மேடையில் கொஞ்சம் அப்படி இப்படிப் பேசினாலும், ஒரு நடிகராக, திரைக்கலைஞராக தனுஷ் தனித்துவமானவர் என்பதில் நமக்குச் சந்தேகமேயில்லை.
முதலிரண்டு படங்களான, ‘துள்ளுவதோ இளமை’, ‘காதல் கொண்டேன்’ படங்களிலேயே நடிப்புக்காக தனித்துக் கவனிக்கப்பட்ட தனுஷ், புகழ் வந்தவுடன் சட்டென கமர்ஷியல் கதைகளின் பக்கம் ஒதுங்கிவிடவில்லை. மிகச்சிறிய வயதிலேயே மற்றவர்கள் செய்யத் தயங்கும், ‘கொக்கி குமாரு’ வேடத்தில் புதுப்பேட்டையில் தம்மைக் கூர் தீட்டிக்கொண்டார்.
தொடர்ந்து படிக்காதவன், உத்தமபுத்திரன், மாரி என்று கமர்ஷியலாகத் தன்னைக் காண்பித்துக் கொள்ளும் அதே நேரம், நடுநடுவே, பொல்லாதவன், வேலையில்லா பட்டதாரி போன்ற வித்தியாசமான கமர்ஷியல் கதைகளையும் தேர்ந்தெடுத்தார். கமர்ஷியலாக இருந்தாலும் அதில் ஒரு தனித்துவம் இருந்தது. வெற்றிமாறன் தமக்கு ஒரு பலம் என்பதை கண்டுகொண்டு அவரோடு இணைந்து ஆடுகளம், வடசென்னை, அசுரன் போன்ற தரமான படங்களிலும் தன்னை ஒரு முழு நடிகனாக நிலைநிறுத்திக்கொண்டார்.
அதே நேரம் கொரோனாவுக்குப் பின்பாக சினிமா, மொழி எல்லைகளைக் கடந்து க்ளோபலாகிக் கொண்டிருப்பதை உணர்ந்து தன்னை ஹிந்திக்கும், ஹாலிவுட்டுக்கும் கொண்டு செல்லும் வழிகளைக் கண்டறிந்து அதிலும் வெற்றிகரமாகப் பயணித்துக் கொண்டிருக்கிறார். போலவே, இந்தத் தொடர் வேலைகளுக்கு நடுவில் தமது ஆரம்பத் தேடலான இயக்குநர் கனவை, அவர் விட்டுக்கொடுக்கத் தயாராக இல்லை. அது ஒரு பேஷனாகவே அவருக்கு இருக்கும் என்று உணர முடிகிறது.
முதல்முறையாக 2017ல் ‘பவர் பாண்டி’ எனும் படத்தை இயக்கிய தனுஷ், அடுத்து சென்ற ஆண்டு ‘ராயன்’ எனும் படத்தைத் தந்தார் தனுஷ். அது சரியான வரவேற்பைப் பெறாமல் போனதாலோ என்னவோ தம்மை நிரூபிக்க அடுத்த ஆண்டே இதோ ‘இட்லிக்கடை’ எனும் படத்தோடு வந்திருக்கிறார்.
இட்லிக்கடை என்றதும்தான் நினைவுக்கு வருகிறது, 2021ல் ஒரு பேட்டியில், சினிமா தவிர்த்து, சமையல் தமக்குப் பிடித்த பொழுதுபோக்கு எனவும், அப்பா உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்களுக்கு சமைத்துக்கொடுப்பது தமக்கு மகிழ்வான விஷயம் என்றும் குறிப்பிட்டுள்ளார். அப்போதுதான் தன் பெயர்க்காரணம் குறித்தும் ஒரு தகவலை வெளியிட்டுள்ளார். அது கமல்ஹாசன் நடித்த, ‘குருதிப்புனல்’ எனும் படத்தில், தீவிரவாதிகளைப் பிடிக்க டிசிபி ஆதியாக நடிக்கும் கமல், அவர் தலைமையில் நடத்தப்படும் இரகசியத் திட்டத்துக்கு ‘ஆபரேஷன் தனுஷ்’ என்று பெயர் வைப்பார். அந்தப் பெயரில் ஈர்க்கப்பட்ட 'வெங்கடேஷ் பிரபு'தான், தன் முதல் படமான ‘துள்ளுவதோ இளமை’ படத்துக்காக புதிய பெயர் தேவைப்பட்ட போது தனுஷாக மாறியிருக்கிறார்.
’இட்லிக்கடை’ டிரெயிலரைப் பார்க்கும் போது, அவரது ஆர்வமான அந்தச் சமையலை முன்னிறுத்தி அவர் எழுதிய கதையைத்தான் படமாக்கியிருக்கிறார் என்று தெரிந்துகொள்ள முடிகிறது. தனுஷின் இயக்கத்தோடு ராஜ்கிரண், பார்த்திபன், அருண்விஜய் போன்ற நடிகர்களும் படத்தின் மீதான எதிர்பார்ப்புகளை அதிகப் படுத்தியுள்ளனர். காத்திருப்போம்!