நடிகர் சல்மான்கான் பாடிபில்டராகவும் வலம் வருபவர். 60 வயதாகும் அவர் தனது உடலை இப்போதும் கட்டுமஸ்தான முறையில் வைத்துள்ளார். தினமும் உடற்பயிற்சி மேற்கொள்பவர். அப்படியிருந்தாலும், ஒரு நோய் அவரை பாடாய்ப்படுத்தியுள்ளது. சில ஆண்டுகளுக்கு முன்பு அவர் trigeminal neuralgia என்ற நோயால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார். முகத்தில் வலியை ஏற்படுத்தும் நாள்பட்ட நரம்பு நோய் இதுவாகும்.
'டூ மச்' என்ற நிகழ்ச்சியில் சமீபத்தில் சல்மான்கான் பங்கேற்றார். அப்போது, அந்த நோயால் தனக்கு ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து உருக்கமாக பேசினார். சல்மான் கூறியதாவது, கடந்த 2007ம் ஆண்டு பார்ட்னர் படத்தில் நடித்து கொண்டிருந்தேன். லாரா தத்தா எனக்கு ஜோடியாக நடித்தார். அப்போது, அவரின் கூந்தல் எனது முகத்தில் பட்ட போது, கரெண்ட் ஷாக் அடிப்பது போல ஒரு வலி எனது முகத்தில் ஏற்பட்டது. "என்ன லாரா, கரண்ட் போல தாக்குகிறீர்களே" என்று ஜாலியாக அப்போது, நான் கேட்டேன். இதுதான் , எனக்கு அந்த நோய் காட்டிய முதல் அறிகுறி. அப்போது, பல் பிரச்னை காரணமாக அந்த வலி ஏற்பட்டிருக்கலாம் என்று நான் நினைத்துக் கொண்டேன். பின்னர்தான், இது நரம்பு சம்பந்தப்பட்ட நோய் என்பது தெரிய வந்தது.
இது முகத்தில் மிக மோசமான வலியை கொடுக்கும். உயிரை மாய்த்துக்கொள்ளக் கூடிய எண்ணத்தை தரக் கூடிய அளவுக்கு அந்த வலி இருக்கும். இந்த நோயால் பாதித்த பலரும் உயிரை மாய்த்துக் கொள்வார்கள். உங்கள் முக்கியமான எதிரிக்கு கூட அத்தகைய வலி வரக்கூடாது என்றுதான் நினைக்கக்கூடிய அளவுக்கு அதன் வலியும் வேதனையும் இருக்கும். கிட்டத்தட்ட 7 ஆண்டுகளாக அந்த வலியை நான் அனுபவித்தேன். அன்றாட வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டது. ஒவ்வொரு 4-5 நிமிடங்களுக்கும் ஒரு முறை வலி ஏற்படும். எப்போது, வலி வரும் போகுமென்று தெரியாது. காலை உணவை சாப்பிட எனக்கு ஒன்றரை மணி நேரம் பிடிக்கும். ஒரு ஆம்லெட்டை கூட என்னால் மென்று சாப்பிட முடியாது. இதனால், பல சமயங்களில் உணவு சாப்பிடவே பிடிக்காது. இல்லையென்றால், அந்த வலியுடன்தான் சாப்பிட வேண்டியது இருக்கும். பெயின் கில்லர் மாத்திரைகள் கூட வலியை குறைக்க உதவாது.
பல வருட வலிக்குப் பிறகு, காமா கத்தி அறுவை சிகிச்சையை மருத்துவர்கள் எனக்கு செய்தனர். எனது முகத்தில் திருகுகளைப் பொருத்தி 8 மணி நேரம் அறுவை சிகிச்சை செய்தனர். முதலில் 30 முதல் 40 சதவிகிதம் வலியை குறைக்கலாம் என்றுதான் மருத்துவர்கள் என்னிடத்தில் கூறினார். ஆனால், அதிர்ஷ்டவசமாக எனக்கு இந்த சிகிச்சை நல்ல நிவாரணத்தை கொடுத்தது. இப்போது, வலி இல்லையென்றாலும், இதே வலியுடன் வாழும் மற்றவர்களைப் பற்றி நினைத்து பார்க்கிறேன். இந்தத் தாங்க முடியாத வலியை அனுபவிக்கும் அவர்களுக்கு என்னால் முடிந்த உதவியை செய்ய முடிவு செய்துள்ளேன். இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள், காமா கத்தி சிகிச்சை முறையை செய்து பார்க்கலாம்."
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
உலகில் பிரச்னைகள் இல்லாத மனிதர்களே இல்லை. பணம் இருந்தாலும் பணம் இல்லையென்றாலும் ஒவ்வொருவருக்கும் ஒருவிதமான பிரச்னை இருப்பதைதான் சல்மானின் இந்த பேட்டி காட்டியுள்ளது. தனக்கு இருந்த உடல் நல பிரச்னைகளைத் தாண்டித்தான் பாலிவுட்டில் சூப்பர் ஹீரோவாக அவர் வலம் வந்து கொண்டிருந்துள்ளார். முன்பு, 2011லும் தனக்கு இப்படி ஒரு நோய் இருப்பதை சல்மான்கான் வெளிப்படையாக அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.