Hollywood Action Movies pxfuel
சினிமா

எவர்க்ரீன் ஆக்‌ஷன் படங்கள்! #Hollywood

புதிய பாதைகளை வகுத்த நான்கு OG ஆக்‌ஷன் படங்களை இங்கே காண்போம்.

ஆதி தாமிரா

வியட்நாம் போரிலிருந்து திரும்பிய ராணுவ வீரன் ஒருவன் ஒரு சின்ன ஊருக்குள் நுழைகிறான். நல்ல உயரமான அவன், லாங் ஷாட்டில் சாலையில் நடந்து வரும் காட்சியும், அதன் பின்னணி இசையும் நம்மை ஓர் இனம்புரியாத காட்சியின்பத்துக்குள் தள்ளுகிறது. அவன் அமைதியாக தனது நண்பனைத் தேடிச் செல்கிறான். ஆனால், அந்த ஊரின் போலீஸ் ஷெரிப் அவனை சந்தேகத்துக்குரிய ஒரு நபராகப் பார்த்து, அவமதிக்கிறான். இதனால், அவனுக்கும் அந்த ஷெரிப்புக்கும் இடையே ஒரு மோதல் ஏற்படுகிறது.

தொடர்ந்து போலீஸ் ஸ்டேஷனில் நடக்கும் நிகழ்வுகள், அவனது மனதில் போர்க்காலத்தில் அனுபவித்த கொடுமைகளை நினைவூட்டி, அவனை மனதளவில் உடைத்து விடுகிறது. இதனால், அவன் அவர்களைத் தாக்கிவிட்டு போலீஸ் ஸ்டேஷனிலிருந்து தப்பித்து அருகில் உள்ள காட்டுப் பகுதிக்குள் ஓடிவிடுகிறான். அவனை வேட்டையாட ஷெரிப் தலைமையில் ஒரு பெரிய போலீஸ் படையே ஹெலிகாப்டர் சகிதம் தயாராகிறது. அப்போதுதான் அந்தப் புகழ்பெற்ற காட்சியும், வசனமும் வருகிறது, அந்த வீரனின் முன்னாள் இராணுவ கமாண்டர் அங்கே வருகிறார். ஷெரிப், அவரிடம், ‘அவனைக் காப்பாற்ற வந்தீர்களா? உங்கள் செல்வாக்கெல்லாம் இங்கு செல்லுபடியாகாது’ என்றதும் அவர் பதில் சொல்கிறார்,

‘நான் காப்பாற்றத்தான் வந்தேன், அவனை அல்ல, அவனிடமிருந்து உங்களை!’

ஹீரோவின் மீதான இப்படியான ஒரு பில்டப் காட்சியை அதற்கு முன்பாக யாருமே பார்த்ததில்லை. அதன் பின்பு வந்த ஆயிரக்கணக்கான ஹீரோ பில்டப் காட்சிகளின் ஊற்றுக்கண் இந்தக் காட்சிதான்! இப்படியான பாத்பிரேக்கிங் படங்கள்தான் OG சினிமாக்கள் என்று அழைக்கப்படுகின்றன.புதிய பாதைகளை வகுத்த அப்படியான சில OG ஆக்‌ஷன் படங்களை இங்கே காண்போம்.

Rambo First Blood Poster

1.First blood (1982) :-

மேலே நாம் பார்த்தது First blood படத்தின் கதையும், காட்சியும்தான். இந்தப் படத்தை இயக்கியிருந்தது டெட் கோட்செப். ராணுவ வீரனாக நடித்திருந்தது சில்வஸ்டர் ஸ்டாலோன். அவரை ஒரு மிகப்பெரிய ஸ்டாராக்கியது இந்தப் படம்தான். படத்தின் உச்சக்கட்டத்தில், ராம்போ உணர்ச்சிவசப்பட்டு அழும் போது, அவன் போரில் அனுபவித்த வலிகளையும் சொல்கிறான். வீடு திரும்பியதும் இயல்பான சமூகவாழ்வை மேற்கொள்ள முடியாதபடி எப்படி உளவியல் சிக்கல்களால் போர் வீரர்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்பதையும் நாம் உணர்கிறோம். அந்த இடத்தில்தான் இந்தப் படம் ஒரு ஆக்‌ஷன் படம் என்ற இடத்திலிருந்து கல்ட் கிளாஸிக் இடத்துக்கு நகர்கிறது. இன்றளவும் அமெரிக்கக் கலாச்சாரத்தின் அடையாளமாகவே ராம்போ பார்க்கப்படுகிறான்.

The-terminator - Poster

2. Terminator (1984) :-

டெர்மினேட்டர், ஹாலிவுட்டின் சைஃபை ஆக்‌ஷன் திரில்லர் கதைகளின் வரலாற்றில் ஒரு முக்கியமான மைல்கல் படமாகும்! ’டெர்மினேட்டர் 2- ஜட்ஜ்மெண்ட் டே’ படத்தை அனைவரும் பார்த்திருப்பீர்கள். அதன் தொடக்கமே இந்தப் படம். இயக்குநர் ஜேம்ஸ் கேமரூனையும், அர்னால்டு ஸ்வாஷ்நெகரையும் மிகப்பெரிய ஐகான்களாக ஆக்கியது இந்தப் படம்தான். 2029ல் ஒரு பெரும் அணு ஆயுதப் போருக்குப் பின்பாக இந்த உலகமும், மனிதர்களும் ஸ்கைநெட் எனும் ஓர் ஏஐ அமைப்பின் கட்டுப்பாட்டுக்குள் வருகிறார்கள். அதை எதிர்த்து ஜான் கானர் எனும் ஒருவன், புரட்சி செய்து மீண்டும் மெஷின்களை மனிதர்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருகிறான். இதைத் தடுக்க நினைக்கும் ஸ்கைநெட், காலப்பயணம் செய்து ஜான் கானர் பிறக்கும் முன்பாகவே அவனது தாயைக் கொலை செய்துவிட ஒரு ரோபாட்டை அனுப்பிவைக்கிறது. அதன் பின் நடப்பவைதான் பரபரப்பான இந்தப் படத்தின் திரைக்கதை!Tech-noir படங்களின் முன்னோடியாக இது கருதப்படுகிறது.

Predator movie poster

3. Predator (1987) :-

அமெரிக்கப் புலனாய்வுத் துறையால் ஓர் ஆபத்தான மீட்புப் பணியை மேற்கொள்வதற்காக ஒரு சிறப்பு கமாண்டோ படை மத்திய அமெரிக்காவின் அடர்ந்த காட்டுக்குள் அனுப்பப்படுகிறது. அந்தப் படைக்குத் தலைமை தாங்குபவர் மேஜர் டட்ச் (அர்னால்டு). ஆனால், அவர்கள் அந்த இடத்திற்குச் சென்றதும்தான், அங்கு நடந்த, நடக்கும் விபரீதங்கள் தெரிய வருகின்றன. அங்குள்ள சடலங்கள், சாதாரண மனிதர்களால் கொல்லப்பட்டவை அல்ல என்பதை டட்ச் குழு உணர்கிறது. பின்னர், அவர்கள் ஒரு பயங்கரமான, கண்ணுக்குத் தெரியாத எதிரியால் வேட்டையாடப்படுவதை அறிகிறார்கள். தனது மிகச்சிறந்த குழு உறுப்பினர்களைக் கண்முன்னால் இழக்கும் டட்ச் அதிர்ந்து போகிறான். அந்த எதிரி, கண்களுக்குத் தெரியாமல் மறையும் சக்தியையும், நவீன ஆயுதங்களையும் தாங்கியிருக்கும் ஒரு வேற்றுகிரகவாசி (Predator), அதை தனியாளாக டட்ச் எப்படி வெல்கிறான் என்பதுதான் படத்தின் கதை! இந்தப் படத்தை இயக்கியது ஜான் மெக்டயர்னன். இது படமாக்கப்பட்ட விதம், இதில் வந்த ஏலியனின் தோற்றம், சண்டைக் காட்சிகள் என அனைத்தும் உலகளாவிய வகையில் ரசிகர்களுக்கு ஒரு புதிய அனுபவத்தைக் கொடுத்தது.

Die Hard - Bruce Willis

4. Die hard (1988) :-

இந்தப் படத்தின் கதை ஒரு கிறிஸ்துமஸ் மாலை அன்று தொடங்குகிறது. நியூயார்க் நகர போலீஸ் துப்பறிவாளர் ஜான் மெக்லேன், தனது மனைவியை சந்திப்பதற்காக லாஸ் ஏஞ்சல்ஸுக்கு வருகிறார். மனைவி, ஒரு பெரிய கார்பரேட் நிறுவனத்தில் உயர் பதவியில் இருக்கிறார். மெக்லேன், மனைவியின் அலுவலகக் கட்டிடடத்தில் நடைபெறும் கிறிஸ்துமஸ் பார்ட்டியில் கலந்து கொள்கிறார். அப்போது, ஹான்ஸ் க்ரூபர் தலைமையிலான தீவிரவாதக் குழு ஒன்று அந்த கட்டிடத்தை ஆக்கிரமிக்கிறது. அவர்கள் கட்டிடத்தில் உள்ள அனைவரையும் பணயக் கைதிகளாகப் பிடித்து வைத்துக்கொண்டு, பல மில்லியன் டாலர்கள் மதிப்பிலான பத்திரங்களைத் திருடத் திட்டமிடுகிறார்கள். முழு கட்டிடமும் தீவிரவாதிகள் கட்டுப்பாட்டில் இருக்க, வெளியிலிருந்து எந்த உதவியும் கிடைக்காமல், மெக்லேன் தனி ஆளாகவே அந்தக் குழுவை எப்படி எதிர்த்துப் போராடி வீழ்த்தினார் என்பதுதான் கதை. புரூஸ் வில்லிஸ், மெக்லேன் கதாபாத்திரத்தில் தோன்றினார். உலகிலுள்ள எந்த மொழியானாலும், அங்கே ஹீரோவாக நடிக்கும் ஒவ்வொரு நடிகனுக்கும், தம் வாழ்நாளில் இப்படி ஒரு பாத்திரத்தில், ஒரு படத்திலாவது நடித்துவிட வேண்டும் எனும் ஆவலை ஏற்படுத்தியது மெக்லேன் கதாபாத்திரம். ஆலன் ரிக்மேன், ஹான்ஸ் பாத்திரத்தில் வில்லன்களுக்கென ஒரு ஸ்டைலிஷான பாணியை உருவாக்கினார். ஜான் மெக்டயர்னன் இயக்கிய இந்தப்படம், அதன் பின்பான கமர்ஷியல் ஆக்ஷன் படங்களுக்கான வரையறையையே மாற்றி எழுதியது.