Actor Sathyaraj 
சினிமா

சத்யராஜ் எனும் சமூகப்பொறுப்புள்ள மனிதர்! #Sathyaraj

ஒரு நடிகனாக அமைதியாக தம் வேலையை மட்டும் பார்த்துக்கொண்டு, சம்பாதித்துக்கொண்டு, சேஃப் ப்ளே செய்துவிட்டு மட்டுமே போவது சரியல்ல, தமக்கும் ஒரு சமூகப்பொறுப்பு இருக்கிறது என்பதை உணர்ந்தவராக இருக்கிறார்!

ஆதி தாமிரா

போலித்தனம் இல்லாமலிருப்பது, சாதாரண மனிதர்களான நமக்கே பெரும் சவாலான விசயமாகத்தான் இருக்கிறது. ஒரு திருமணத்துக்கோ அல்லது உறவினர் விழாவுக்கோ போக நேர்ந்தால் கூட நம் கௌரவத்துக்காகவோ, வேறு என்ன ஈகோவுக்காகவோ இயல்புக்கு சற்று மீறி, நான் நீங்கள் நினைப்பதை விடவும் பெரிய ஆள் என்பதான எண்ணம் ஏற்படும்படி நடந்துகொள்கிறோம். நம் பேச்சில், உடையில், நடையில் ஒரு மாற்றம் ஏற்படுவதைத் தவிர்க்க முடியவில்லை. அப்படியானால், ஒரு விஐபியாக இருந்துகொண்டு இயல்பாக இருப்பது என்பது உண்மையில் பெரிய விசயம்தான்.

சத்யராஜைக் கவனித்தால் போலித்தனம் சிறிதளவு கூட இல்லாத ஒரு மனிதராகத் தோன்றுகிறது. கேமிராவுக்கு முன்னால், பெரும் சாகசம் நிகழ்த்தும் நடிகர்கள், மேடையில் மைக்குக்கு முன்னால் தத்தக்கா புத்தக்கா டான்ஸ் ஆடுவார்கள். இது இன்று மேடையை வசப்படுத்தியிருக்கும் உச்ச நடிகர்களுக்கும் பொருந்தும். கமல்ஹாசனும், ரஜினிகாந்தும் ஆரம்ப கட்டங்களில் மைக்கில் எவ்வளவு பணிவாக, தன்மையாக, பயத்தோடு பேசியிருக்கிறார்கள் என்பதைக் கவனித்தால் இந்த வித்தியாசத்தை உணரலாம். போலவே சத்யராஜுக்கும் மேடையும், மைக்கும் இதுவரையில் அதிகம் பழக்கமில்லை, அல்லது பழக்கமிருப்பதாக நமக்குத் தெரியவில்லை. ஆனால், சமீப காலமாக திராவிட இயக்க மேடைகளில் தோன்றிப் பேசி வருகிறார். குறிப்புகள் எழுதி வைத்துக் கொண்டாலும், அதை அப்படியே வாசிக்காமல் தன்னியல்பில்தான் பேசுகிறார். ஆனாலும், பேச்சில் ஒரு சிறு தயக்கமும், தடுமாற்றமும் இருப்பதைக் கவனிக்கலாம். அதற்காகத்தான் தொடக்கத்தில் சில விநாடிகள் ஒரு சினிமா டயலாக்கை போட்டுவிட்டோ, தமக்கு முன்னால் பேசியவரைப் பற்றிப் பேசியோ தயக்கத்தைப் போக்கிக் கொள்வதைக் காண முடியும். ஆனால், அடுத்து பேசுவது அனைத்தும் கருத்துச் செறிவுடையதாகவும், நிஜமான சொந்த அனுபவங்களாகவும் இருக்கிறது.

தமக்கொரு ஆபரேஷன் நடந்தபோது, அதைக் கட்டாயப்படுத்தி ராகு காலத்தில் செய்துகொண்டதாகக் கூறுகிறார். ‘உங்களுக்கு நல்ல நேரத்தில் நம்பிக்கையில்லாமல் இருக்கலாம், ஆனால் கெட்ட நேரத்தில்தான் செய்வேன் என்று பிடிவாதம் பிடிப்பது கொஞ்சம் டூ மச், டாக்டருடைய அவைலபிலிடியையும்
பார்க்க வேண்டுமல்லவா?’ என்று டாக்டர் கேட்டதற்கு, ‘சார் புரிஞ்சுக்குங்க சார், மேடையில் பேசுகிறவர்கள் ஏராளமான சொந்த அனுபவங்களையும், அவர்களது படிப்பறிவையும் வெளிப்படுத்துகிறார்கள். எனக்கும் அது மாதிரி ஏதாவது
வேண்டாமா? இப்படி நடந்ததாக நாளை நான் வெளியே சொல்லி கைத்தட்டு வாங்கிப்பேன்ல’ என்று டாக்டரிடம் சொல்லியிருக்கிறார். அந்த உண்மையை இப்போது நம்மிடமும் ஒத்துக்கொள்கிறார்.

Actor Sathyaraj Speech

ராகு காலத்தில் ஆபரேஷன் நடந்ததாக நம்மிடம் பொய் சொன்னாலும் நமக்கு அது தெரியப்போவதில்லை. ஆக, தாம் பேசுவது முதலில் தமக்கு உண்மையாக இருக்க வேண்டும் என நினைக்கிறார். பின்பு, அதன் உள்நோக்கம் என்ன என்பதையும்
சொல்லிவிடுகிறார்.

சமீபத்திய பேச்சு ஒன்றில், ‘Unity in diversity’ என்று சொல்வதற்குப்
பதிலாக ‘University in diversity’ என்று சொல்லிவிடுகிறார். பின்பு,
தவறாகச் சொல்லியதை எந்தத் தயக்கமுமின்றி ஒப்புக்கொண்டுவிட்டு, ‘எனக்குத் தாய்மொழி தமிழ் தவிர வேறு மொழி ஏதும் தெரியாது, டாம் க்ரூஸ்க்கு அவரது தாய்மொழி ஆங்கிலம் வேற ஏதும் தெரியாதாம், அவர் என்ன அதற்காக வருத்தப்பட்டுக்கொண்டா இருக்கிறார்? நான் மட்டும் ஏன் வருந்த வேண்டும்? கருத்துதான் முக்கியம்’ என்கிறார். சபாஷ்!

திருப்பூரில் நவீன மனிதர்கள் சார்பில் நடைபெற்ற 'மதத்தால் பிரிந்தாலும் மனதால் இணைவோம்' என்ற நிகழ்வில் பேசும்போதுகூட, ‘நாம் யாருக்கு வாக்களிக்கிறோம், நம்மை யார் ஆள்கிறார்கள் என்பது ரொம்ப முக்கியம். சிந்தித்துச் செயல்படுங்கள். இந்தக் கவலையெல்லாம் என்னை மாதிரி பணக்காரனுக்கு அவசியமில்லை, நான் சினிமாவில் நடித்து நிறைய சம்பாதித்து வைத்திருக்கிறேன், எனக்கு எவர் ஆண்டாலும் ஒரு பிரச்சினையும் இல்லை. ஆனால், உங்களுக்கும், நம் சமூகத்துக்கும் அது நல்லதில்லை, சிந்தியுங்கள்’ என்று உண்மைகளை பொதுவில் உடைக்கிறார்.

Actor Sathyaraj

தொடர்ச்சியாக 20 ஆண்டுகள் ஹீரோவாக தமிழ் சினிமாவில் ஹீரோவாக நடித்துவிட்டு, பின்பு ஒரு சரிவைச் சந்திக்கிறார். அதை ஏற்க மனமில்லாமல் கஷ்டப்பட்டதாக பேட்டிகளில் ஒத்துக்கொள்கிறார். நடித்தால் ஹீரோவாகத்தான்
நடிப்பேன், இல்லையென்றால் வீட்டில் இருந்துகொள்ளலாம், இப்போ என்ன கெட்டுப்போச்சு என்று ஈகோவுடன் நினைத்ததாகச் சொல்கிறார். அதன் பின்னர்தான், இது ஒரு போலியான சிந்தனை… நடிப்பு என்பது ஒரு வேலை, அதுவும் நல்ல சம்பளம் கிடைக்கிற வேலை, அதைச் செய்யாமலிருப்பது முட்டாள்தனம் என்ற அறிவு ஏற்பட்டு நல்ல கதாபாத்திரங்களைச் செய்யலாம் என்று முடிவெடுத்ததாகச் சொல்கிறார்.

தொடக்கத்திலிருந்தே தன்னை ஒரு பெரியார் ஃபாலோயராகவும், பகுத்தறிவுச் சிந்தனை உள்ளவராகவும் வெளிப்படையாகவே காட்டி வந்திருக்கிறார். ஒரு நடிகனாக அமைதியாக தம் வேலையை மட்டும் பார்த்துக்கொண்டு, சம்பாதித்துக்கொண்டு, சேஃப் ப்ளே செய்துவிட்டு மட்டுமே போவது சரியல்ல,
தமக்கும் ஒரு சமூகப்பொறுப்பு இருக்கிறது என்பதையும் இப்போது உணர்ந்திருப்பது புரிகிறது. அதனாலேயேதான் காசா மீதான இஸ்ரேலின் இனப்படுகொலையைக் கண்டித்து நடைபெற்ற பேரணியில் பேசிய போது, "இந்த மாதிரி மனித நேயத்திற்காகவும் மனித விடுதலைக்காகவும் பயன்படாவிட்டால் நாங்கள் பிரபலமான நடிகர்களாக இருந்து ஒரு பிரயோஜனமும் இல்லை" என்று பேசினார். தொடரட்டும் சத்யராஜின் சமூகப்பணி!