மிதுன் மான்ஹாஸ்  
சினிமா

BCCI தலைவராகிறார் சென்னை சூப்பர் கிங்ஸ் முன்னாள் வீரர்?

BCCI தலைவராகிறார் காஷ்மீரை சேர்ந்த முன்னாள் வீரர்... யார் அவர்?

எம். குமரேசன்

இந்தியாவில் கிரிக்கெட்டை நிர்வகிக்கும் மிகப்பெரிய அமைப்பு BCCI (Board of Control for Cricket in India). தேசிய மற்றும் சர்வதேசப் போட்டிகளை திட்டமிடுவது, வீரர்களைத் தேர்வு செய்வது ஆகியவை இதன் பணி. உலகிலேயே மிகப் பெரிய மற்றும் செல்வாக்கு மிக்க கிரிக்கெட் நிர்வாக அமைப்பாக BCCI திகழ்கிறது. அதன் தலைவராக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் வீரர் மிதுன் மான்ஹாஸ் தேர்வு செய்ய வாய்ப்பிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

தற்போது பி.சி.சி.ஐ தலைவராகவுள்ள ரோஜர் பின்னியின் பதவி காலம் முடிவடைந்தது. இதையடுத்து, பி.சி.சி.ஐயின் புதிய நிர்வாகிகளுக்கான தேர்தல் வரும் 28ம் தேதி நடைபெறவுள்ளது. இதில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் வீரர் மிதுன்மான்ஹாஸ் போட்டியின்றி தேர்வு செய்ய வாய்ப்புள்ளதாக தெரிகிறது. தற்போது, 45 வயதான இவர் ஜம்மு காஷ்மீரை சேர்ந்தவர். 1979ம் ஆண்டு பிறந்த இவர் 1997- 98 ம் ஆண்டு முதல் முதல்தர கிரிக்கெட் போட்டியில் 18 ஆண்டுகள் விளையாடியுள்ளார்.

மிடில் ஆர்டர் வலது கை பேட்ஸ்மேனான இவர், சச்சின், ராகுல் டிராவிட், கங்குலி, சேவக், வி.வி.எஸ். லட்சுமணன் போன்றவர்கள் ஆடிய காலக்கட்டத்தில் கிரிக்கெட் களத்தில் புகுந்ததால், இந்திய அணியில் விளையாட வாய்ப்பு கிடைக்காமல் போய் விட்டது. ஒரு சர்வதேச ஆட்டங்களில் கூட ஆடியதில்லை. 157 முதல் தர கிரிக்கெட் போட்டியில் ஆடியுள்ள இவர் 9,714 ரன்களை அடித்துள்ளார். இவற்றில், 27 சதம் 49 அரைசதங்களும் அடங்கும். பந்து வீச்சில் ஆஃப் ஸ்பின், கீப்பிங் என ஆல்ரவுண்டராகத் திகழ்ந்தார். இதனால், உள்நாட்டு கிரிக்கெட் தொடர்களில் அசைக்க முடியாத வீரராக வலம் வந்தார்.

கடந்த 2007 - 08 ம் ஆண்டு ரஞ்சி டிராபியில் காம்பீர் தலைமையிலான டெல்லி அணி நீண்டகாலத்துக்குப் பிறகு, கோப்பையை வென்றது. இந்தத் தொடரில் மட்டும் மிதுன் 921 ரன்களை எடுத்து அசத்தினார் . விராட் கோலியை பட்டை தீட்டிய வீரர்களில் இவரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. டெல்லி அணியில் இவரது தலைமையின் கீழ் விராட் கோலி விளையாடியுள்ளார்.

Mithun Manhas for Chennai Super Kings

ஐ.பி.எல் தொடரை பொறுத்தவரை மிதுன் 7 சீசன்களில் டெல்லி டேர் டெவில்ஸ், புனே வாரியர்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்காக விளையாடியவர். ஐ.பி.எல். தொடரில் 55 ஆட்டங்களில் 514 ரன்களையும் இவர் எடுத்துள்ளார். கடந்த 2017ம் ஆண்டு கிரிக்கெட்டில் இருந்து முற்றிலும் ஓய்வு பெற்றார். குஜராத் டைட்டன்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகளுக்கு துணை பயிற்சியாளராக இருந்த அனுபவமும் கொண்டவர். ஜம்மு காஷ்மீர் கிரிக்கெட் சங்கத்தின் ஆபரேஷன் பிரிவு தலைவராக இருந்து வழி நடத்திய அனுபவமும் உண்டு. சிறந்த கிரிக்கெட் அனுபவமும் நிர்வாக அனுபவமும் இருப்பதால், இவரை பி.சி.சி.ஐ தலைவராக போட்டியின்றித் தேர்வு செய்ய முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பி.சி.சி.ஐ தலைவராக மிதுன் தேர்வு செய்யப்படும் பட்சத்தில், சர்வதேச ஆட்டத்தில் விளையாடாத ஒரு இந்திய வீரர் பி.சி.சி.ஐ தலைவராக ஆனார் என்கிற வரலாற்றை படைப்பார்.

பி.சி.சி.ஐ துணை தலைவர் பதவிக்கு ராஜீவ் சுக்லாவும், துணைப் பொதுச்செயலாளர் பதவிக்கு பிரப்தேஜ்சிங் பாட்டியாவும் பொருளாளர் பதவிக்கு ரகுராம் பட்-டும் மனுத்தாக்கல் செய்துள்ளனர். தற்போது, ஐ.சி.சி. தலைவராக உள்ள ஜெய்ஷா பி.சி.சி.ஐ பொதுச் செயலாளராக இருந்தார். ஜெய்ஷா ஐ.சி.சி. தலைவரானதும் பி.சி.சி.ஐ பொதுச் செயலாளர் பதவிக்கு தேவ்ஜித் சைகா தேர்வு செய்யப்பட்டார். எனவே, அவர் மட்டும் தொடர்ந்து பி.சி.சி.ஐ பொதுச்செயலாளராக தொடருவார். மற்ற பதவிகளுக்கு தேர்தல் நடத்தப்படும். யாரும் போட்டியிடவில்லை என்பதால், மனு அளித்தவர்களே போட்டியின்றி தேர்வு செய்யப்பட வாய்ப்புள்ளது.

மும்பையில் வரும் 28ம் தேதி நடைபெறவுள்ள பி.சி.சி.ஐ பொதுக்குழுக் கூட்டத்தில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்படுவார்கள்.