Shanthi Williams and Mohanlal 
சினிமா

மோகன்லாலும் கிருஷ்ணர் சிலையும்: சாந்தி வில்லியம்ஸ் 'பகீர்'!

இத்தனைக்கும் பிறப்பால் நான் மலையாளி. ஆனால், கேரளாவில் இருந்து யாரும் எனக்கு உதவவில்லை.

எம். குமரேசன்

நடிகை சாந்தி வில்லியம்ஸ் 12 வயதில் இருந்து திரைத்துறையில் நடித்து வருபவர். இவரது ,கணவர் ஜே.வில்லியம்ஸ் மலையாள பட ஒளிப்பதிவாளர். நடிகர் மோகன்லால் மீது சாந்தி வில்லியம்ஸ் அடிக்கடி , பல எதிர்மறையான விஷயங்களை கூறி வருவது அனைவரும் அறிந்ததே. தற்போது, சாந்தி வில்லியம்ஸ் மோகன்லால் மீது வைத்த குற்றச்சாட்டு முன்பை விட மிகவும் அதிர்ச்சி அளிக்கும் விதத்தில் அமைந்துள்ளது.

மோகன்லால் குறித்து மாஸ்டர் பின் தளத்துக்கு சாந்தி வில்லியம்ஸ் அளித்துள்ள பேட்டியில் கூறியுள்ளதாவது, 'சினிமாவில் வளர்ந்து வரும் போது, மோகன்லால் இன்னாசென்ட் போலத்தான் இருந்தார். எங்கள் வீட்டுக்கு வருவார் . பேசுவார், சாப்பிடுவார், போவார். ஆனால், சூப்பர்ஸ்டாராக மாறியதும் அவரின் முகமே மாறி விட்டது. எனது கணவர் உடல் நிலை சரியில்லாமல் இருந்த போது, எங்களுக்கு எந்த மலையாள நடிகரும் உதவவில்லை. 2005ம் ஆண்டு எனது கணவர் இறந்தும் போனார். உடல் நலம் சரியில்லாமல் எனது கணவர் இருந்த போதும் மோகன்லால் வந்து பார்க்கவில்லை. அவ்வளவு ஏன் இறப்புக்கு கூட மோகன்லால் வரவில்லை. அப்போதெல்லாம், நாம் இந்தப் பையனுக்கு எவ்வளவு செய்தோம் என்று எனக்குள் கோபம் ஏற்பட்டது உண்டு.

எனது கணவர் இறந்த உடனே, தகவல் கேள்விப்பட்டு இயக்குநர் சங்கர் 25 ஆயிரம் அனுப்பி வைத்தார். 'போன் செய்து." எப்போது எந்த உதவி வேண்டுமென்றாலும் கேளுங்கள்' என்றார். இயக்குநர் திருமுருகன் போன் செய்து ஆறுதல் கூறினார். என் கணவர் இறந்த சமயத்தில் தமிழ்நாடுதான் எனக்கு ஆறுதலையும் சக்தியையும் தந்தது. இத்தனைக்கும் பிறப்பால் நான் மலையாளி. ஆனால், கேரளாவில் இருந்து யாரும் எனக்கு உதவவில்லை. கேரளாவில் பிறந்தது எனக்கு அவமானத்தை தருகிறது. என் தாய் மண் என்னை கைவிட்டு விட்டதாகவே நினைக்கிறேன். நான் யாரிடமும் அங்கு பணம் கேட்டதில்லை. ஆனால், வில்லியமசுக்கு என்ன ஆச்சு என்று ஒரு போன் கூட அந்த மாநிலத்தில் இருந்து எனக்கு வரவில்லை. இதுதான் எனக்கு கோபத்தை ஏற்படுத்துகிறது 'என்று வேதனை தெரிவித்துள்ளார்.

Shanthi Williams and WIlliams

அதோடு, மோகன்லால் குறித்து மற்றொரு அதிர்ச்சிக்கரமான தகவலையும் சாந்தி வில்லியம்ஸ் கூறியுள்ளார். அது ஒரு கிருஷ்ணர் சிலை பற்றியது. சாந்தி சொன்னது என்ன?

"எனது கணவர் வில்லியம்ஸ் உடல் நிலை சரியில்லாமல் இருந்த போது, குடும்பம் வறுமையில் வாடியது. இந்த சமயத்தில் எங்கள் வீட்டில் பல லட்சம் மதிப்புள்ள கிருஷ்ணர் சிலை இருந்தது. அந்த சிலை 12 அடி உயரம் கொண்டது. அப்போது , எங்கள் வீட்டில் ஏசி மாட்டுவது அவசியமாக இருந்தது. கையில் பணம் இல்லை. இதை, அறிந்து கொண்ட மோகன்லால் 12 அடி கிருஷ்ணர் சிலையை எடுத்துக் கொண்டு, தனது அலுவலகத்தில் பயன்படுத்தி வந்த பழைய ஏசியை எனது வீட்டில் மாட்ட வைத்தார். 10 நாட்கள் கூட அந்த ஏ.சி இயங்கவில்லை. அடிக்கடி, ரிப்பேர் ஆனது. இதையடுத்து, வெடித்து விடுமென்று சிலர் கூறியதால் அந்த ஏ.சியை 2 ஆயிரம் ரூபாய்க்கு விற்றேன். ஆனால், எங்கள் வீட்டில் இருந்து மோகன்லால் கொண்டு சென்ற சிலை, அவரின் வீட்டில் இப்போதும் உள்ளது. கடினமான சூழலில் எனது குடும்பம் இருந்தபோது, அப்படி ஒரு அட்வான்டேஜ் எடுத்து கொண்ட மனிதர் இந்த மோகன்லால். எனது , கணவரின் உடல் நிலை காரணமாக, நான் வேலைக்கு போக வேண்டிய சூழல் ஏற்பட்டது. டப்பிங் பேசுவேன், நடிக்கச் சென்றேன். அப்படிதான், எனது குழந்தைகளை நான் வளர்த்தேன்."

இவ்வாறு அவர் கூறியுள்ளார். இதற்கு ஒரு சாரார் சாந்தி வில்லியம்ஸுக்கு ஆதரவு தெரிவித்தும், மற்றொரு சாரார் 'எப்போதுதான் இந்தச் சர்ச்சை ஓயும்' என்றும் பதிவிட்டு வருகின்றனர்.