நடிகர் தனுஷ் இயக்கி, நடித்துள்ள படம், ‘இட்லி கடை’. இதில் ராஜ்கிரண், சத்யராஜ், பார்த்திபன், அருண் விஜய், நித்யா மேனன், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். அக்டோபர் ஒன்றாம் தேதி வெளியாகும் இந்தப் படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. நிகழ்ச்சியில் தனுஷ் பேசும்போது கூறியதாவது, 'ஒரு முறை நான் அஸ்வதா, ஷ்ரேயாஸ் ஆகியோருடன் வெளிநாடு போயிருந்தேன். அவர்கள் இருவரும் வெளியே சென்று விட , அறையில் நான் தனியாக இருந்தேன். எப்போது, நான் தனியாக இருந்தாலும் இளையராஜா பாடல் கேட்பது வழக்கம். அந்த சமயத்தில், 'நான் ஏரிக்கரை மேலிருந்து' பாடலை கேட்டேன். சில பாடல்கள் நம்மை பழைய நிகழ்வுகளுக்கு அழைத்துச்சென்று விடும். இந்தப் பாடலும் அப்படிதான். பள்ளி விடுப்புகளில் எனது அம்மாவின் சொந்த கிராமத்துக்குச் சென்ற நினைவுகளுக்கு இந்தப் பாடல் அழைத்துச் சென்றது.
அப்போது, எனக்கு 8 வயது இருக்கும். எனது பாட்டியின் ஊர் அது. மிகச்சிறிய கிராமம். அந்த கிராமத்தில் ஒரே ஒரு சிறிய இட்லிக்கடை உண்டு. எனக்கு அங்கே சாப்பிடப் பிடிக்கும். ஆனால், கையில் காசு இருக்காது. இதனால், கிராமத்தில் பூக்களை பறிக்கும் வேலைக்கு நானும் எனது கசின்களும் செல்வோம். பூப்பறித்துக் கொடுத்தால், 2 அல்லது 2.50 ரூபாய் கிடைக்கும். காசு வாங்கியதும் கிணற்றில் விழுந்து குளிப்போம். பின்னர், இட்லிக்கடைக்கு சென்று இட்லி சாப்பிடுவோம். பாட்டியின் ஊரில் இருக்கும் 2 மாதங்களும் இதுதான் வாடிக்கையாக நடக்கும். தினமும் காலை 4 மணிக்கெல்லாம் நானும் எனது , சகோதரர்களும் எழுந்து விடுவோம். பூப்பறித்துக் கொடுத்து விட்டு இட்லி சாப்பிடுவோம்.
இன்று நான் புகழ்பெற்ற ஹோட்டல்களுக்கு சென்று இட்லி சாப்பிடுகிறேன். ஆனால், அப்போது கிடைத்த மகிழ்ச்சியும், ருசியும் நமது சொந்த உழைப்பில் சாப்பிடும் திருப்தியும் இல்லை. ‘அதென்ன 'இட்லி கடை'? இதைவிட கேட்ச்சிங்கான தலைப்பை வைத்திருக்கலாமே’ என்று சிலர் கேட்கிறார்கள். சில படங்களில் ஹீரோவின் பெயரையே தலைப்பாக வைப்பார்கள். இந்தப் படத்தின் ஹீரோ, இட்லிக்கடைதான். அதனால்தான் இட்லிகடை என்று வைத்தேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
நடிகர் பார்த்திபன் செய்த காமெடி
இட்லி கடை இசை வெளியீட்டு விழாவில் நடிகர் பார்த்திபனிடம், தொகுப்பாளினி திவ்யதர்ஷினி ஒரு கேள்வி கேட்டார். நடிகர் தனுஷிடம் சேர்ந்து இருக்கக் கூடிய விஷயம், சேரவே கூடாத விஷயம் என்னவென்று பார்த்திபனிடம் கேட்டார். இதற்கு பார்த்திபன், "தனுஷுடன் சேர்ந்திருப்பது அவரது இரு மகன்கள், சேராமல் இருக்க வேண்டியது ஹீரோயின்கள்தான். தனுஷ் பாவம் அப்பாவி, அவருக்கு ஒரு சில்மிஷமும் தெரியாது. ஆனால், தனுஷுடன் போட்டோ எடுக்கிறேன்னு ஒரு சில நடிகைகள் அவரிடம் வந்து நிற்க, அது தேவையற்ற கிசுகிசுக்களை உருவாக்குகிறது. இதனால், நடிகைகள் தனுஷிடம் சேராமல் இருக்க வேண்டும்" என்று பார்த்திபன் பேசி வைக்க அரங்கமே சிரிப்பால் அதிர்ந்து போனது.
டான் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இட்லி கடை படம் கடந்த ஏப்ரல் மாதத்தில் வெளியாவதாக இருந்தது. ஆனால், தவிர்க்க முடியாத காரணங்களால் அக்டோபர் 1ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது.