கேமிராவைப் பார்த்து ‘ஸ்ப்ரே அடிச்சிப் போட்டுடுவேன்’ என்று ஓவியா செல்லமாகக் கொஞ்சியதை யாராவது மறந்திருக்க முடியுமா? ரவுண்டாக பூசினாற்போல வீட்டுக்கு உள்ளே வந்த ஷெரின் செம ஃபிட்டாக மாறி, தர்ஷனின் சட்டையைப் பிடித்து இழுத்தபடி பார்த்த பார்வையில் இருந்த நிஜமான நேசத்தையையும் மறந்திருக்க மாட்டோம்.
பிக்பாஸ் வீடு ஓர் ஆச்சரியம்தான். இந்த விளையாட்டு நிகழ்ச்சியைப் பற்றி சில மாற்றுக் கருத்துகள் அவ்வப்போது எழுந்துகொண்டிருந்தாலும், இது ஒரு சோஷியல் எக்ஸ்பரிமெண்ட் என்பதை ஒத்துக்கொள்ளத்தான் வேண்டும். இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்வதால் போட்டியாளர்களுக்கு என்ன பயன், நற்பெயரைச் சம்பாதிப்பதை விடவும் பெயரைக் கெடுத்துக்கொள்வதுதானே அதிகமாக நடக்கிறது என்பதெல்லாம் நமக்குத் தேவையில்லாத விசயம். தீதும் நன்றும் பிறர் தர வாரா என்பதற்கேற்ப நடக்கவிருக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்க விதிமுறைகளுக்குட்பட்டு, சம்பளமும் பேசிக்கொண்டுதானே அவர்கள் சம்மதிக்கிறார்கள்? இனி, அவர்களால், இந்த நிகழ்ச்சியால் நமக்கு என்ன கிடைக்கிறது என்பதுதான் முக்கியம்.
அண்டை வீட்டில் நடக்கும் சண்டையை எட்டிப் பார்க்கும் குதூகலமும், புரணி பேசுவதும்தான் முதலாவதான முழு எண்டெர்டெயின்மெண்ட்! இதற்காகத்தானே
ஒவ்வொரு சினிமாவும், ஒவ்வொரு சீரியலும், பிற டிவி நிகழ்ச்சிகளும் போராடிக்கொண்டிருக்கின்றன. அது இங்கே நிச்சயம்! எந்தக் கதையும், எந்தத் திரைக்கதையும் தரமுடியாத பிணைப்பை நிஜ மனிதர்களால் ஏற்படுத்த முடியும்.
அதுதான் இந்நிகழ்ச்சியின் பலம். அதனால்தான் நம்மில் பலரும் இந்நிகழ்ச்சியின் ரசிகர்களாக இருக்கிறோம்
இந்த வீடு, ஒரு மனிதனை பெரும்பாலும் முன்பின்னறியாத புதிய மனிதர்களோடு வாழச்சொல்கிறது. ஒவ்வொரு நாளும் விழிப்போடிருக்கச் சொல்கிறது. விதிமுறைகளை வைத்துக்கொண்டு ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக்கொள்ளும் வாய்ப்புகளை ஏற்படுத்துகிறது. ஒருவருக்கொருவர் முகத்துக்கு நேராக விமர்சித்துக்கொள்ள வைக்கிறது. நாம் மிக நெருங்கிய நண்பர்களுக்குள் கூட
செய்ய முடியாத விமர்சனங்களை இன்னொருவரைப் பார்த்து செய்ய வேண்டியதிருக்கிறது. இது, ஒருவர் அங்கிருக்கும் ஒவ்வொரு நாளையும் இன்னும் சிக்கலுக்குள்ளாக்குகிறது
இத்தனையையும் மீறி ஒருவருக்கொருவர் நட்பு பாராட்டினால், குரூப்பிசம் என்று சொல்லி மொத்துகிறார்கள், சண்டையிட்டுக்கொண்டால் கோபக்காரன் என்று மொத்துகிறார்கள். எப்படியோ மொத்து கன்ஃபர்ம் என்பதை ஒவ்வொருவரும் உள்ளே போன பிறகுதான் உணர்கிறார்கள். ஒரு நல்ல பேச்சாளரும், எழுத்தாளருமான பவா செல்லத்துரையையே நாம் ஒரு டிராப்பில் மாட்டிக்கொண்டு கல்விக்கு எதிராக பேசிக்கொண்டிருக்கிறோம் என்பதை உணரமுடியாமல் செய்திருக்கிறது இந்த வீடு.
தெளிவாகவும், முதிர்ச்சியோடும் நடந்துகொள்ளும் ஒருவருக்குக் கூட ஒரு கட்டத்தில் நாம் ஆடியன்ஸுக்கு முன்னால் எப்படித் தெரிந்துகொண்டிருக்கிறோம் என்ற குழப்பத்தை ஏற்படுத்தி, அவர்களின் இயல்பைத் தொலைக்க வைக்கிறது. அந்த வண்ணங்களும், வெளிச்சமும், உள்கட்டமைப்பும், உள்ளலங்காரங்களும், வைக்கப்படும் டாஸ்க்குகளும் ஒரு மனிதனை உளவியல்ரீதியாகப் பாதிக்கிறது. அதை மீறியும் ஒருவன் தன் கட்டுப்பாடு, முதிர்வு குலையாமலிருக்கிறானா என்பதையே நாம் பார்க்கிறோம். ஒவ்வொரு சூழலிலும் நாம் இருந்திருந்தால், இப்படி நடந்துகொண்டிருக்கலாம், இப்படிப் பேசியிருக்கலாம், இப்படிப் பேசியிருக்ககூடாது எனும் ஒத்திகையை நாம் பார்த்துக்கொண்டே இருக்கிறோம். அவ்வகையில், இது நமக்கொரு அனுபவத்தைத் தருகிறது.
முதல் 7 சீசன்களாக இந்நிகழ்வை சிறப்பாக நடத்திக்கொடுத்த கமல்ஹாசனைப் போலவே, சென்றாண்டு விஜய்சேதுபதியும் இந்நிகழ்ச்சியை சிறப்பாகவேதான் கொண்டு செலுத்தினார். இந்த ஆண்டும் அவரே தொடர்கிறார். நிகழ்ச்சி அக்டோபர்
5ம் தேதி ஆரம்பிக்கிறது. நாமும் ஆவலோடு காத்திருக்கிறோம். தொடங்கட்டும், உள்ளே நடக்கும் கூத்துக்களைப் பற்றி அவ்வப்போது பேசுவோம்.