படத்தின் முதல் காட்சியில் கேமரா சில விசயங்களைக் காண்பித்தவாறே இடப்புறம் நகர்கிறது. ஜெஃப் இடதுகாலில் பெரியகட்டுடன் ஒரு வீல் சேரில் அமர்ந்திருக்கிறான். தூங்கிக்கொண்டிருக்கும் அவனது முகத்தில் வியர்வை.
அந்தப் புழுக்கம், சன்னல் திறந்திருந்தும் காற்றில்லாத அந்த அறையிலேயே சில வாரங்களாக அடைந்து கிடக்கும் அவனது மனப்புழுக்கமும் சேர்ந்ததால் ஏற்பட்டதுதான். மேஜையின்மீது உடைந்து நொறுங்கியிருக்கும் ஒரு கேமரா, அதன் பின்புறம் விபத்துக்குள்ளாகும் ஒரு ரேஸ் காரின் புகைப்படம்,
தொடர்ச்சியாக ரேஸ் ட்ராக்கில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள், அதோடு சம்பந்தமில்லாமல் நெகடிவாகவே பிரிண்ட் செய்யப்பட்ட ஓர் அழகியின் புகைப்படம், அதனருகிலேயே அதே நெகடிவ் அட்டைப்படமாக அச்சிடப்பட்ட இதழ்கள்.
அடுத்த கொஞ்ச நேரத்தில் அந்த இதழில் பிரிண்ட் செய்யப்பட்டிருந்த அந்தப் பேரழகியே அங்கு வருகிறாள். ஜெஃபின் முகத்தோடு மிக நெருங்கத்தில் தோன்றி, இதமான ஓர் இதழ் முத்தம் தந்துவிட்டு, ‘உன் கால் எப்படி இருக்கிறது? பசிக்கிறதா?’ என்றெல்லாம் விசாரிக்கிறாள். பதிலாக அவன் ‘நீ யார்?’ என்று கேட்டதும், கேமரா பின்னே விலகி அவளை முழுதாகக் காண்பிக்கிறது.
அட்டகாசமான கருப்பு வெள்ளை ஆடையில் தன்னை, ‘லிசா’ என்று அறிமுகம் செய்துகொள்கிறாள் அவள். அது ஒரு கேலியான விசாரணை, மற்றும் விளக்கம்தான். சில வாரங்களாகத் தினமும் மாலை வேளையில் வந்து அவருக்கு உணவுகொண்டு வந்துகொடுத்து, பேசி, இருந்துவிட்டுப் போகும் ஜெஃபின் காதலி லிசாதான் அது.
அந்தப் படம் ‘ரியர் விண்டோ’. Alfred Hitchcock -ன் மற்றுமொரு மாஸ்டர் பீஸ் படம்.
லிசா ஒரு மாடல். ஜெஃப் ஒரு தேர்ந்த புகைப்படக்காரன். இருவருக்கும் எவ்வளவு சாலப்பொருத்தம் அல்லவா? ஆனால், அதுதான் இல்லை. ஜெஃப் ஒரு ரேஸ் புகைப்படக்காரன்.மேஜையில் கிடந்த உடைந்த கேமரா அவனுடையதுதான். அது உடைந்த அதே ஆக்சிடெண்டில்தான் அவனது காலும் உடைந்திருந்தது, அதே ஆக்சிடெண்டின் கடைசி விநாடியில் அவன் மீது பாயும், அவன் எடுத்த காரின் புகைப்படம்தான் முன்னர் நாம் பார்த்தது. இருவரும் அவரவர் துறை சார்ந்துபெரும் முரண்பாடு கொண்டுள்ளனர். திருமணத்துக்கே அது தடையாக இருக்கிறது. இருவரும் விவாதித்துக் கொள்கின்றனர். அவர்களுக்கு நடுவில் போய் அமர்ந்துகொண்டு, ’அட விடுங்க, இதுக்குப் போய் ஒருத்தரை ஒருத்தர் வார்த்தை விட்டுக்கிட்டு, நல்லாவா இருக்கு?’ என்று சமாதானம் செய்து வைக்கவேண்டும் என்ற ஆவல் நமக்கு எழுவதை தவிர்க்கவே முடியாது. ஒரு கட்டத்தில் விவாதத்தில் அவனது கோபம், அவளைக் காயப்படுத்துகிறது. நம்மையும்தான்! இரவு தங்கலாம் எனும் நினைப்பில் வந்தவள், மேலாடையையும், கைப்பையையும் எடுத்துக்கொண்டு சொல்கிறாள்,
’குட்பை ஜெஃப்!’
சட்டென உடைந்துபோகும் ஜெஃப் கேட்கிறான், ‘அது குட்நைட் லிசா!’
‘நான் அர்த்தம் தெரிந்துதான் சொல்கிறேன்’
இன்னும் பரிதாபமாகக் கேட்கிறான், ‘நாம் மீண்டும் எப்போது சந்திப்பது?’
‘எனக்குத் தெரியாது. நான் உன்னை சந்திக்க விரும்பவில்லை, குறைந்தபட்சம் நாளை மாலை வரைக்காவது’ என்று சொல்லிவிட்டு கதவை அறைந்து சாத்திவிட்டுக் கிளம்புகிறாள்.
எத்தனைக் காதல்! எவ்வளவு நிம்மதி! ஆனால், அந்தப் படத்தில் அதன் பின் நடக்கப் போவதெல்லாம் வேறு கதை.
இந்த ஓரங்கம் மட்டுமே எவ்வளவு இதமாக இருக்கிறது இல்லையா? ரோப், டயல் எம்
ஃபார் மர்டர் போன்ற படங்களைப் பார்த்துவிட்டு Alfred Hitchcock-ஐ ஸ்டேஜ் டிராமாவைப் போல சினிமா எடுத்தவர் என்று சிலர் சொல்வதுண்டு. ஆனால், சினிமா மொழியை முழுதுமாக உள்வாங்கி, சினிமாவின் நிஜமான வீரியத்தை உலகுக்கே
கற்றுத்தந்த மேதைதான் ஹிட்ச்காக். ’சைக்கோ’ வின் ஒவ்வொரு ஃபிரேமிலும் சினிமாவின் புதிய வீச்சைக் காண்பித்து உலகைக் கட்டிப்போட்டவர் ஹிட்ச்காக். Dial M for Murder உட்பட அவரது ஒவ்வொரு படமும், பட்டுக் கத்தரித்தது போல எப்படி ஒரு படத்தை எடிட் செய்யவேண்டும் என்பதற்கான படங்களாகும். தேவையற்ற ஒரு காட்சி, ஒரு ஷாட் கூட அவரது படங்களில் இருக்காது. மார்டின் ஸ்கார்சஸி, ஸ்டீவன் ஸ்பீல்பெர்க், பிரையன் டி பால்மா, க்வெண்டின் டாரண்டினோ போன்ற ஆளுமைகளை பாதித்த மாபெரும் ஆளுமை ஹிட்ச்காக்.
இன்றைக்கும் நம்மை வியக்கவைக்கும் கதைகள், மேக்கிங் என அவருடைய படங்கள் ஒவ்வொன்றும் காலத்தை விஞ்சியவை. புதிய தலைமுறையினர் அவரை அறிமுகப் படுத்திக்கொள்ள சில படங்களைச் சொல்ல வேண்டுமென்றால்… ரியர் விண்டோ (1954), வெர்டிகோ (1958), டயல் M ஃபார் மர்டர் (1954), ரோப் (1948), சைக்கோ (1960) முதலானவற்றைச் சொல்லலாம்.
இவற்றைப் பார்க்க நேர்ந்தால், உங்களால், அவரது பிற படைப்புகளைக் காணும் ஆவலிலிருந்தும் தப்ப முடியாது.