நடிகர் தேவன், எண்பதுகளில் மலையாளத் திரைப்படத் தயாரிப்பாளராக திரையுலகுக்குள் நுழைந்தார். ஆனால் படத் தயாரிப்புகளில் ஏற்பட்ட தோல்வியின் காரணமாக, படங்களில் நடிக்கத் தொடங்கினார். தமிழில் ஆனஸ்ட் ராஜ் படத்தில் விஜயகாந்துக்கு வில்லனாகவும், பிறகு பாட்ஷா படத்தில் நடிகர் ரஜினிகாந்துக்கு வில்லனாகவும் இவர் நடிப்பு பேசப்பட்டது. தமிழில் வேறு சில படங்களிலும் தேவன் நடித்துள்ளார்.
இவர், சொந்தமாக கேரளாவில் ஒரு அரசியல் கட்சியையும் நடத்தி வருகிறார். நடிகர் தேவனுக்கு சுமா என்ற மனைவியும் லட்சுமி என்ற மகளும் உண்டு. கடந்த 2019ம் ஆண்டு தேவனின் மனைவி சுமா திடீரென்று இறந்து போனார். தனது மனைவியின் திடீர் இறப்புக்கான காரணம் குறித்து நடிகர் தேவன் இப்போது உருக்கமாக சில தகவல்களை கூறியுள்ளார். அவர் சொல்வது என்ன?
"கடந்த 2019 ம் ஆண்டு. அப்போது நான் சென்னையில் வசித்தேன். என் மனைவிக்கு அடிக்கடி ஐஸ்கிரீம் சாப்பிடும் பழக்கம் இருந்தது. இதனால், அவரின் உடல் ஐஸ்கிரீமுக்கு எதிராக மாறியிருந்தது. அதாவது, ஐஸ்கிரீம் சாப்பிட்டால் உடனே அலர்ஜி ஆகிவிடும். ஒரு முறை ஐஸ்கிரீம் சாப்பிட்டவுடன் மூச்சு விட முடியாமல் திணறினார். அப்போது, நான் உடன் இருந்ததால் உடனே, மருத்துவமனைக்குக் கொண்டு சென்று உயிரைக் காப்பாற்றி விட்டேன். மருத்துவர்கள் இனிமேல் தயவுசெய்து ஐஸ்கிரீம் சாப்பிடாதீர்கள் என்று எச்சரித்தனர். அது எந்த பிராண்டாக இருந்தாலும் ஐஸ்கிரீம் வேண்டாமென்று என் மனைவிக்கு அறிவுறுத்தினர்.
சில காலம் அவர் ஐஸ்கிரீம் சாப்பிடாமல் இருந்தார். ஆனால், விதி யாரை விட்டது! ஒருமுறை நான் கேரளாவில் படப்பிடிப்பில் இருந்தேன். அப்போது, எனது மகள் லட்சுமி தனது குழந்தைகளுடன் எனது வீட்டுக்கு வந்துள்ளார். வரும்போது, அவர் தனது குழந்தைகளுக்காக ஐஸ்கிரீம் வாங்கி வந்துள்ளார். அனைவரும் மதிய உணவு சாப்பிட்டுவிட்டு ஐஸ்கிரீமை சாப்பிட்டுள்ளனர். ஆனால், என் மனைவிக்கு கொடுக்கவில்லை.
பின்னர் , எஞ்சிய ஐஸ்கிரீமை ஃப்ரிட்ஜில் வைத்து விட்டு தனது வீட்டுக்கு எனது மகள் சென்று விட்டார். அப்போது, வீட்டில் யாருமில்லாத நிலையில், எனது மனைவிக்கு ஐஸ்கிரீம் சாப்பிடும் ஆசை ஏற்பட்டுள்ளது. டாக்டர்களின் எச்சரிக்கையை மறந்து போனார். உடனே, ஃபிரிட்ஜில் இருந்த ஐஸ்கிரீமை எடுத்து யாருக்கும் தெரியாமல் சாப்பிட்டுள்ளார்.
அடுத்த நிமிடமே அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு, தரையில் மயங்கிச் சரிந்துள்ளார். இதைக்கண்ட வீட்டில் இருந்த பணிப்பெண் உடனடியாக, எனக்கு போன் செய்து தகவலை சொன்னார். பதறிப்போன நான் உடனே சென்னைக்கு ஓடி வந்தேன். ஆனால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த எனது மனைவியின் உயிரைக் காப்பாற்ற முடியவில்லை. அலர்ஜி காரணமாக எனது மனைவியின் நுரையீரலில் பெரிய ஓட்டையே ஏற்பட்டுள்ளது. மூச்சுக் காற்று அது வழியாக வெளியேறி விடவே, அவரால் உயிர் பிழைக்க முடியாமல் போனது" இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
கடந்த 2019ம் ஆண்டு ஜூலை மாதத்தில் நடிகர் தேவனின் மனைவி சுமா இறந்து போனார். அப்போது, அவருக்கு 55 வயது ஆகியிருந்தது. தேவனின் மனைவி சுமா பிரபல மலையாள பட தயாரிப்பாளர் ராமு கரியத்தின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது.