கடந்த சில ஆண்டுகளாக, தமிழ் மற்றும் மலையாள சினிமாக்கள் தங்களுக்கேயுரிய தனித்துவமான பாதையில் பயணித்துக் கொண்டிருக்கின்றன. கோலிவுட், மல்லுவுட் என்றழைக்கப்படும் இரு மாநிலங்களின் திரைத்துறையும் கதை சொல்லும் முறையிலும், டெக்னிகல் உருவாக்கத்திலும் குறிப்பிடத்தக்க மாற்றங்களைச் சந்தித்துள்ளன. இவ்விரண்டின் பலம், பலவீனங்களை சற்று ஒப்பிட்டுப் பார்க்கலாம்.
பிரமாண்டம்:
பல்லாண்டுகளாகவே, தமிழ் சினிமா இந்திய அளவில் விரிந்து பரந்த வரவேற்பைக் கொண்டிருந்தாலும், இப்போது அதற்காகவே மெனக்கெடுவது ‘பான் இந்தியப் படங்கள்’ எனும் பெயரில் இன்னும் அதிகமாகியிருக்கிறது. கதைகளுக்கு முக்கியத்துவம் தருவதை விடவும் 'பான்-இந்தியா' திரைப்படங்களை உருவாக்குவதில் அதிக ஆர்வம் காட்டுகிறது. பெரிய நட்சத்திரங்கள், அதிக பட்ஜெட், மற்றும் பிரமாண்டமான செட்கள் கொண்ட திரைப்படங்களாக ’பொன்னியின் செல்வன்’, 'ஜெயிலர்', ‘கங்குவா’, ‘தக் லைஃப்’, ‘கூலி’ போன்ற படங்களைக் குறிப்பிடலாம். இப்படியான படங்களில் ஒரு சில தவிர்த்து மற்ற பெரும்பாலானவை மக்களின் வரவேற்பின்றி வீழ்ச்சியடைந்திருக்கின்றன.
மலையாள சினிமாவும் இந்த முயற்சிகளுக்குத் தப்பவில்லை. ‘மரக்கார்’, ‘எம்புரான்’, ’தி கோட் லைஃப்’, ’பாரோஸ்’, ‘மார்கோ’ போன்ற படங்கள், ‘பான் இந்திய’ கனவுகளோடு எடுக்கப்பட்டு அனைத்து பெரிய மொழிகளிலும் மொழியாக்கம் செய்யப்பட்டு வெளியிடப்பட்டன. ஆனால், குறிப்பிடத்தக்க வெற்றியை எந்தப் படமும் பதிவு செய்யவில்லை. இரண்டிலுமே நட்சத்திர செல்வாக்கு அதிகமாகத்தான் இருக்கிறது.
புதிய முயற்சிகள்:
ஆனால், உள்ளடக்கத்தில் புதிய முயற்சிகள் செய்வதில், எப்போதும் போலவே தமிழ் சினிமாவை மலையாள சினிமா முந்திக்கொண்டுதான் போய்க் கொண்டிருக்கிறது, இப்போதும்! அதில் புதிய நடிகர்கள், பெரிய நடிகர்கள் என்ற பாகுபாடு மலையாள சினிமாவில் இல்லை. பிரேமலு, மஞ்ஞுமல் பாய்ஸ், ஞான்தான் கேஸ் கொடு, ஹ்ருதயம், நயாட்டு, உடல் போன்ற வித்தியாசமான படங்களோடு புதிய நடிகர்கள், இயக்குநர்கள் வரும்போது, பிரம்மயுகம், துடரும், ஆவேசம், நேரு என ஸ்டார் நடிகர்களும் களமிறங்கத் தயங்குவதில்லை. இந்த படங்கள் அனைத்துமே ஏதோ ஒரு வகையில் ரசிகர்களுக்கு விருந்தளித்த படங்களாகவே இருக்கின்றன.
இந்த ஏரியாவில் தமிழில் சினிமாக்கள் ஒப்பீட்டளவில் குறைவுதான் என்றாலும் மலையாளத்தோடு போட்டி போடவில்லை என்று சொல்லிவிடமுடியாது. ஜெய்பீம், மண்டேலா, கடைசி விவசாயி, மாநாடு, லவ்டுடே, அயலான், சார்பட்டா பரம்பரை, விடுதலை, கார்கி என குறிப்பிடத்தகுந்த படங்கள் புதிய களங்களில் வெளியாகியிருக்கின்றன. இவற்றில் பலவும் வெற்றிப்படங்கள். பெரும் பொருட்செலவில் வெளியாகும் வணிகப்படங்கள் பெறும் வெற்றியை விடவும், இப்படியான வித்தியாசமான அனுபவங்களைத் தரும் படங்களின் வெற்றி வாய்ப்பு அதிகமாகவே இருக்கிறது. இருப்பினும், பெரிய நடிகர்கள் இந்த ஏரியாவைக் கண்டுகொள்ளாமலிருப்பது சற்று வியப்பேற்படுத்தத்தான் செய்கிறது.
ஓடிடியின் தாக்கம்:
ஓடிடி தளங்கள் மலையாள சினிமாவுக்கு சர்வதேச அளவில் பார்வையாளர்களைப் பெற்றுத் தந்திருக்கின்றன. இதனால் உலகளாவிய அளவில் அவர்களின் தனித்துவமான கதைகள் வரவேற்பைப் பெறுகின்றன. சிறிய படங்கள் கூட தனித்துவமான உள்ளடக்கத்துக்காக பெரும் ரசிகர் கூட்டத்தின் வரவேற்பைப் பெறுகிறது. இது மலையாள சினிமாவின் புதிய பலமாக அமைந்திருக்கிறது. வருங்காலத்திலும், இது படைப்பாளிகளுக்கும், ரசிகர்களுக்கும் நன்மையான விசயமாகவே தொடரும் என்று நம்பலாம்.
இந்த விசயத்தில் தமிழ் சினிமாவின் நிலைமை சற்றுக் கவலைக்கிடமாகத்தான் இருக்கிறது என்று சொல்ல வேண்டும். ஸ்டார் வேல்யூ, பெரிய மார்க்கெட் என்று ஆரம்பத்தில் ஓடிடிகள் தமிழ்ப் படங்களை போட்டிபோட்டுக்கொண்டு வாங்கினாலும், மோசமான உள்ளடக்கத்தால் ரசிகர்களின் ஆதரவைப் பெறாமல் தொடர்ச்சியாக படங்கள் ஓடிடியிலும் வீழ்ச்சியடைந்து இப்போது தமிழ்ப் படங்களை வாங்கவே ஓடிடிகள் தயங்கும் நிலைதான் நிலவுகிறது. இது தமிழ் சினிமா துறைக்கும், ரசிகர்களுக்கும், படைப்பாளிகளுக்கும் நல்லதல்ல. இந்நிலை மாற தமிழ்ப் படைப்பாளிகள் உள்ளடக்கத்தின் மீதான நம்பிக்கையை அதிகரித்துக்கொண்டு களமிறங்க வேண்டும் என்பது நமது எதிர்பார்ப்பு.
தமிழ் சினிமா பிரமாண்டத்தையும், நட்சத்திரங்களின் கவர்ச்சியையும் நம்பிப் பயணிக்கிறது. அதே நேரத்தில் மலையாள சினிமா யதார்த்தமான கதைகளுக்கும், கதை சொல்லும் ஆழத்திற்கும் முன்னுரிமை தருவது தொடர்ந்தாலும், இரண்டும் ஒன்றையொன்று பாதிப்பதும் தொடர்ந்து நடந்துகொண்டுதான் இருக்கிறது. இந்தப் போட்டி ஒட்டுமொத்தமாகத் தென்னிந்தியத் திரைப்படங்களின் தரத்தை வணிக ரீதியாகவும், உள்ளடக்க ரீதியாகவும் உயர்த்தினால் நமக்கு மகிழ்ச்சியே!