ஒரு தொழில்நுட்ப ஆச்சரியம்: 1961-ல் சாத்தியமான அந்த ஷாட்
பாடல் தொடங்கும் போது, சாவித்ரியை நோக்கி கேமிரா நகரும் ஒரு அகேலா கிரேன் ஷாட் வருகிறது. ஆனால், அகேலா அறிமுகப்படுத்தப்பட்டது 1997 ல் டைட்டானிக் படத்தில்தான். இந்தியாவுக்கு வந்ததும் அதே ஆண்டு தொடங்கப்பட்ட, மருதநாயகம் படத்துக்காகத்தான்!
ஆனால், பாசமலர் படம் வெளியானது 1961ல்! ஒளிப்பதிவு செய்தது விட்டல்ராவ்! என்ன செய்து அதைச் சாத்தியப்படுத்தினார்களோ, தெரியவில்லை. ஆனால், அதுதான் கலைத்தாகம் எனப்படுகிறது. சாவித்திரி தொட்டிலில் பிள்ளையைக் கிடத்தும் போதும், முழங்கைகளில் பிள்ளைகளை ஏந்திக்கொண்டு சிவாஜி இடது வலதாக நகரும் போதும், அந்தக் காலத்துப் படங்களில் பொதுவாக காணப்படும் காமிரா கான்சியஸ் அறவே இல்லாத அற்புதமான படமாக்கம்! சினிமா பார்க்கிறோம் எனும் உணர்வையே போக்கடித்து, நம்மையும் உள்ளே இழுத்துவிடும் தன்மை வாய்ந்தவை இப்படியான ஷாட்டுகள்!
கண்ணதாசனின் வரிகளில் நிறைந்த கவிதை
பாடல் வரிகள், குரல், இசை, கதை, நடிப்பு, இயக்கம், ஒளிப்பதிவு, டெக்னாலஜி என எல்லா துறைகளும் அதனதன் உச்சத்தைத் தொடுவது என்பது அரிதிலும் அரிதான நிகழ்வு. ஆனாலும், அதெல்லாமும் நிகழத்தான் செய்யும். அப்படி ஒரு படம்தான் பாசமலர். அந்தப் பாடல்: ‘மலர்ந்தும் மலராத பாதி மலர் போல’
அண்ணனும், தங்கையும் தங்கள் பிள்ளைகளை வாழ்த்தித் தாலாட்டுகிறார்கள். கண்ணதாசனின் வரிகள் இப்படி வாழ்த்துகின்றன.
‘வளர் பொதிகை மலை தோன்றி, மதுரை நகர் கண்டு பொலிந்த தமிழ் மன்றமே…’
தமிழ் மன்றமே அவர்தம் பிள்ளைகள்தானாம்! இதை விடவும் எப்படித்தான் பெற்றோர் தம் பிள்ளைகளை உயர்த்திப் பிடித்துவிடமுடியும்?
'நதியில் விளையாடி கொடியில் தலைசீவி நடந்த இளந்தென்றலே...' - இவ்வரிகளை காட்சியாகக் கற்பனை செய்து பாருங்கள். தென்றல், நதியில் விளையாடியபடியே வர, அதன் கரைகளில் இருக்கும் செடிகொடிகளில் தென்றல் தலை வாரிக்கொண்டே வருகிறதாம். அப்படியான இளந்தென்றலை, தன் குழந்தையோடு ஒப்பிடுகிறார் நாயகன். கண்ணதாசனைத் தவிர வேறெந்தக் கவிஞனால் இப்படி எழுதமுடியும். அதனால்தான், அவர் நிரந்தரமானவர்!
உணர்ச்சிப் பெருக்கம் : சிவாஜி, சாவித்திரி மற்றும் பீம்சிங்
இன்னொரு புறம் நடிகர்கள்! அற்புதமான நடிப்பு சிவாஜி மற்றும் சாவித்திரியிடமிருந்து. சிவாஜியைத் தங்கையின் பிரிவு நெகிழ்த்தியிருக்கிறது. முகமெங்கும் பிரிவின் ஆற்றாமை, ‘அத்தை மகளை மணம் கொண்டு’ எனும் வரிகளில் கண்ணீர் சிந்துகிறார். ஆனால், சாவித்திரி உற்சாகமாக, புன்னகை முகமாக இருக்கிறார். எப்படியும் அண்ணனைப் பார்க்கும் ஓர் நாள் வரும், அதுவரைக்கான காத்திருப்பு என் தவம் என்பதான உணர்வு. ‘தங்கக் கடியாரம், வைர மணியாரம் தந்து மணம் பேசுவார்’ என்று பாடுவதற்குள் அந்த உணர்வு உடைந்துவிடுகிறது, பொங்கி அழுகிறார். அப்போது, அங்கே சிவாஜியின் ஆளுயர ஒரு ப்ளோ அப் இருக்கிறது. நிச்சயமாக அப்படியொரு புகைப்பட அமைப்பை அதற்கு முன்னர் வீடுகளிலோ, சினிமாவிலோ நம் மக்கள் பார்த்திருக்க வாய்ப்பில்லை.
படத்தை இயக்கியிருப்பது பீம்சிங். 2025லேயே கண்ணில் நீர் வரவைத்துவிட்டது. 1960ல் எப்படியிருந்திருக்கும் என நினைத்துப்பாருங்கள்! தமிழ்நாடே இந்தப் பாடலுக்கு கதறி அழுததில் என்ன ஆச்சரியம்?! கலையில் அப்படியே கடைக்கோடி மனிதனைக்கூட ஒருநாள் ஊறப்போட்டு துவைத்துத் தொங்கப்போடுகிற விஷயம்! அதைச் செவ்வனே செய்திருக்கிறது பீம்சிங்கின் குழு. 60 வருடமில்லை, 600 வருடமானாலும் டெக்னாலஜிதான் மாறும், உணர்வுகள் அதேதான், கலை அதே உணர்வுகளுக்காகத்தான் என்பதை நிறுவி நிற்கிறது இந்தப் பாடல்!
’இந்த மண்ணும், கடல் வானும் மறைந்து முடிந்தாலும், மறக்க முடியாதடா..’ – என்று அந்த அண்ணன் தங்கையை நினைத்து பாடுகிறார். நம் மனதிலும் இந்தப் பாடல் அப்படியான இடத்தில்தான் இருக்கிறது.
என்றைக்காவது மனம் பாரமாக இருக்கும் இரவு நேரத்தில் இந்தப் பாடலைக் கேளுங்கள், நான் சொல்வதன் முழு அர்த்தத்தையும் உங்கள் கண்ணீர் விளக்கும்!