சாகச நாயக / நாயகி... அதாவது சூப்பர் ஹீரோ / ஹீரோயினை மையமாகக் கொண்ட படங்கள் அபூர்வமாகவே வருகின்றன. அப்படி வந்து ஹிட்டடித்த படங்களும் சொற்பம் எனலாம். தமிழில் அண்மையில் வெளியான படம் சிவகார்த்திகேயனின் மாவீரன். ஓர் அசாத்தியத் திறன் கொண்ட நாயகனாக அவர் நடித்திருந்த அப்படம், வெற்றியும் பெற்றது.
அப்படி ஒரு சாகச நாயகியாக கல்யாணி பிரியதர்ஷன் நடித்து மலையாளத்தில் வெளியான படம்தான் லோகா: சாப்டர் 1: சந்திரா. துல்கர் சல்மான் தயாரிப்பில் கல்யாணி பிரியதர்ஷன், நஸ்லின் ஆகியோர் நடித்து கடந்த வாரம் வெளியானது. நம், சாண்டி மாஸ்டருக்கும் அதில் நாச்சியப்பா என்ற ஒரு அருமையான வில்லன் வேடம். வெளியான நாளிலிருந்தே மலையாள ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்ற இந்தப் படம் தமிழிலும் வெளியாகி ரசிகர்களிடையே பரவலாக வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படத்தில் சந்திராவாக வரும் கல்யாணிதான் 'நீலி'. சூப்பர் ஹீரோவாகவும் மர்ம பெண்ணாகவும் தனது உடல்மொழியில் வித்தியாசம் காட்டி, மிரட்டியிருக்கிறார் கல்யாணி பிரியதர்ஷன்.
ஆக்ஷன் காட்சிகளில் அவரது வேகம் பிரமிக்க வைக்கிறது. மொத்தக் கதையும் அவரைச் சுற்றிதான். கல்யாணியின் இளம்பருவ நீலியாக நடித்து அசத்திய சிறுமியும் நடிப்பில் வியக்க வைத்திருந்தார். 11 வயதேயான அந்தச் சிறுமிக்கு இதுதான் முதல் படம் என்றால் நம்பவே முடியவில்லை .அந்தளவுக்கு சிறுமி நடிப்பில் அசத்தியிருந்தார்.
திருச்சூரை சேர்ந்த இந்த சிறுமியின் பெயர் துர்கா சி.வினோத். 6ம் வகுப்பு படித்து வரும் துர்கா, அதிரப்பள்ளியில் காட்டில் சண்டைக் காட்சிகளில் நடித்த போது, காலில் காயமடைந்து வலியால் துடித்துள்ளார். படக்குழு படபிடிப்பை ரத்து செய்து விட முடிவு செய்துள்ளது. ஆனால், படப்பிடிப்பை ரத்து செய்தால் பெரும் இழப்பு ஏற்படும் என்பதை உணர்ந்து , இந்த 11 வயது சிறுமி வலியையும் மறந்து நடித்துக் கொடுத்தார் என்று படக்குழுவினர் கூறுகின்றனர்.
இந்தப் படத்தில் சண்டை காட்சிகளில் பிரமிக்கும் வகையில், துர்கா நடித்துள்ளார். சிறுமி, சண்டை காட்சிகளில் பிரமிக்க வைக்குமளவுக்கு நடித்திருப்பது பலரையும் வியக்க வைத்தது. ஆனால், துர்காவுக்கு இது ஒரு பெரிய காரியமல்ல. சுமார் 3 வயதில் இருந்து துர்கா களரி, கராத்தே, குங்பூ போன்றவற்றைப் படித்தவர். காரணம் இவரது தந்தை வினோத் ஒரு ஸ்ட்ண்ட் மாஸ்டர். துர்காவின் தந்தை வினோத் 'காலிகா களரி சங்கம்' என்ற பெயரில் திருச்சூரில் களரிப் பயிற்சி மையத்தை நடத்தி வருகிறார். இவரது சகோதரர் களரியில் தேர்ச்சி பெற்றவர். தந்தை மற்றும் சகோதரரின் பயிற்சியின் கீழ் அனைத்து சண்டைக்கலைகளிலும் தேர்ச்சி பெற்றவர் துர்கா. எனவே , சண்டைகாட்சிகளில் நடிப்பது அவருக்கு ஒரு பெரிய விஷயமாக தோன்றவில்லை.
இந்த படத்துக்கு பிரெஞ்சு ஸ்டண்ட் மாஸ்டர் யானிக் பென் சண்டை காட்சிகளை அமைத்துள்ளார். ஓரிரு டேக்குகளிலேயே துர்கா சண்டை காட்சிகளை சூப்பராக செய்து விட யானிக் பென் வியந்துபோனார்.
தனது மகள் துர்காவின் திறமை குறித்து வினோத் கூறுகையில், "இப்போதும் காலை 5 மணிக்கு துர்கா எழுந்து விடுவார். களரி மற்றும் தற்காப்புக் கலைகளுக்குப் பிறகு, பள்ளிக்குச் செல்வார். இதற்கு, முன்பு இரு படங்களில் சிறிய வேடங்களில் நடித்துள்ளார் துர்கா. ஆனால், லோகாதான் அவரை உலகுக்கு அடையாளம் காட்டியுள்ளது. இப்போதும், அவரது படிப்புக்குதான் நாங்கள் முக்கியத்துவம் கொடுக்கிறோம். இந்தப் படத்தில் கூட, தனது தேர்வுகளை எழுதிய பிறகே நடிக்க வருவேன் என்று துர்கா கூறி விட்டார். தொடர்ந்து, துர்கா நடிப்பதும் படிப்பதும் அவளின் விருப்பம். நாங்கள் அவளை நடிக்க எந்த விதத்திலும் கட்டாயப்படுத்தவில்லை. லோகா படம் வெளியான பிறகு, உலகின் பல ஊர்களிலிருந்தும் துர்காவுக்கு வாழ்த்து குவிந்து கொண்டிருக்கிறது" என்கிறார்.
இந்தப் படத்தின் இயக்குநர் டொம்னிக் அருணுக்கு துர்காவை அழுகை சீன்களில் நடிக்க வைப்பதுதான் சவாலாக இருந்ததாம். ஏனெனில் களரி, கராத்தே என்று பட்டையை கிளப்பும் துர்காவின் கண்களில் இருந்து கண்ணீரை வரவழைப்பதற்காக பெரும் போராட்டமே நடத்த வேண்டி இருந்ததாம்!