பொழுதுபோக்கு மற்றும் மீடியாவைப் பொறுத்த வரை, ஒரு காலத்தில் ஹாலிவுட் படங்கள் மற்றும் அமெரிக்க செய்தி நிறுவனங்கள்தான் மிக அதிக விளம்பர வருமானத்தைப் பெறும் சூழல் இருந்தது. தற்போது, பொழுதுபோக்கு அம்சங்கள் பெரிய திரையில் இருந்து மொபைல் ஸ்கிரீனுக்கு மாறி விட்டன. கூகுளின் யூடியூப் பாரம்பரிய சினிமா தயாரிப்பு நிறுவனங்களுக்கு மிகப் பெரிய சவாலாக மாறியுள்ளது. யூடியூப் மூலம் கூகுள் நிறுவனத்துக்கு கோடி கோடியாக விளம்பர வருவாய் கொட்டுகிறது. ஆண்டுக்கு யூடியூப் மூலம் கூகுள் பெறும் விளம்பர வருவாய் டிஸ்னி, என்.பி.சி யூனிவர்சல், பராமவுன்ட், வார்னர் பிரதரஸ் டிஸ்கவரி போன்ற நிறுவனங்களின் ஒட்டு மொத்த விளம்பர வருவாயை விட அதிகம்.
MoffettNathanson என்ற மீடியா ஆய்வு நிறுவனம் நடத்திய ஆய்வின்படி, கடந்த 2025ம் ஆண்டு மட்டும் கூகுள் நிறுவனம் 40.4 பில்லியன் அமெரிக்க டாலர்களை யூடியூப் வழியாக வருவாயாக ஈட்டியுள்ளது (இந்திய மதிப்பில் 3.75 லட்சம் கோடி). இதே காலக்கட்டத்தில், டிஸ்னி, என்.பி.சி யூனிவர்சல், பராமவுன்ட், வார்னர் பிரதரஸ் டிஸ்கவரி நிறுவனங்களின் ஒட்டு மொத்த விளம்பர வருவாய் 37. 8 பில்லியன் அமெரிக்க டாலர்கள்தான். பல ஆண்டுகளாக யூடியூப் சீராக வளர்ந்து வருவதால், கடந்த ஆண்டு யூடியூப்பின் விளம்பர வருவாய் தாறுமாறாக எகிறியுள்ளது. இதனால், யூடியூப் பாரம்பரியமான ஹாலிவுட் மற்றும் மீடியா நிறுவனங்களை விட அதிக வருவாயைப் பெறத் தொடங்கியுள்ளதாக அந்த ஆய்வு நிறுவனம் தெரிவிக்கிறது.
வருவாய் மட்டுமல்ல, யூடியூப்பில் பார்வையாளர்களின் எண்ணிக்கையும் சீராக அதிகரித்து வருகிறது. கடந்த ஜனவரி மாதத்தில் அமெரிக்க தொலைக்காட்சி நிறுவனங்களின் பார்வையாளர்களின் எண்ணிக்கையில் யூடியூப் 12.5 சதவீதத்தைக் பெற்றிருந்ததாக நீல்சன் ஆய்வு நிறுவனத்தின் தரவுகள் கூறுகிறது. இது டிஸ்னி, என்பிசி யுனிவர்சல், பாரமவுண்ட் மற்றும் வார்னர் பிரதர்ஸ் டிஸ்கவரி நிறுவனங்களின் ஒருங்கிணைந்த ஸ்ட்ரீமிங் பார்வையாளர்களை விட அதிகமாகும். யூடியூபுக்கு அடுத்ததாக, நெட்ஃபிக்ஸ் உள்ளது. இது, ஸ்ட்ரீமிங் தளங்களில் முன்னணியில் உள்ளது. ஆனால் , ஒட்டுமொத்த டிவி பங்களிப்பில் யூடியூப்பை விட பின்தங்கியுள்ளது.
யூடியூப்பின் விளம்பர வருவாய் அதிகரிக்க முக்கிய காரணம், படைப்பாளர் சார்ந்த வணிக யுத்தி ஆகும். மற்ற நிறுவனங்கள் தங்களது சொந்தத் தயாரிப்புகளை வெளியிடுகின்றன. ஆனால், யூடியூப் கண்டென்ட் கிரியேட்டர்களை நம்பியுள்ளது. கொரோனா காலக்கட்டத்துக்கு பிறகு, கண்டென்ட் கிரியேட்டர்களின் எண்ணிக்கை உலகம் முழுக்க கோடிக்கணக்கில் அதிகரித்துள்ளது. இவர்களுக்கு எல்லாம், யூடியூப்தான் பிரதான தளமாக அமைந்துள்ளது. லட்சக்கணக்கானோர் வித விதமான கண்டென்டுகளை கொடுப்பதால், யூடியூப் நிறுவனத்துக்கே விளம்பரம் அளிக்க பெரிய நிறுவனங்கள், விளம்பர ஏஜன்சிகள் விரும்புகின்றன.
வீடியோ உள்ளடக்கத்தை அதிகரிக்க, கூகுள் ச்ச்விளம்பர வருவாயில் கணிசமான பகுதியை படைப்பாளர்களுடன் பகிர்ந்து கொள்கிறது. பொதுவாக, நல்ல தரமான வீடியோக்களிலிருந்து கிடைக்கும் விளம்பர வருவாயில் சுமார் 55 சதவீதத்தை கண்டென்ட் கிரியேட்டர்களுக்கே யூடியூப் வழங்குகிறது.
அதே வேளையில், விளம்பரம் மட்டுமே யூடியூப் நிறுவனத்தின் வருமான ஆதாரமல்ல. இந்த தளம் 2025 ம் ஆண்டில் கிட்டத்தட்ட 22 பில்லியன் அமெரிக்க டாலர்களை சந்தா வருவாயாக ஈட்டியுள்ளது . இது, யூடியூப் டி.வி, யூடியூப் பிரிமியம், யூடியூப் மியூசிக் போன்றவற்றை உள்ளடக்கியதாகும்.
தற்போது, ஏ.ஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கண்டென்ட் கிரியேட்டர்கள் அதிக வீடியோக்களை கொடுக்க தொடங்கியுள்ளனர். இதனால், தரம் மற்றும் வருவாய் வரும் ஆண்டுகளில் இன்னும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
கூகுள் வியோ, ஓபன் ஏ.ஐ சோரா, சீடன்ஸ் மற்றும் கிளிங் போன்ற வீடியோவை உருவாக்கும் தளங்கள் உட்பட புதிய ஏஐ கருவிகள் சந்தையில் உள்ளன. இந்த கருவிகள் படைப்பாளிகளை மிக வேகமாக வேலை செய்ய உதவுவது மட்டுமல்லாமல், தரமான வீடியோக்களை குறைந்த செலவில் தயாரிக்கவும் உதவுகின்றன. இதன் காரணமாக, வருங்காலத்தில் யூடியூப் இன்னும் அசைக்க முடியாத மீடியாவாக மாறக் கூடும்.
யூடியூப் நிறுவனத்தின் மிகப் பெரிய மார்க்கெட் எந்த நாடு தெரியுமா? சந்தேகமே இல்லாமல் நமது இந்தியாதான். நமது நாட்டில், கிட்டத்தட்ட 50 கோடி பேர் ரொகுலராக யூடியூப் பக்கத்தை பார்வையிடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர் என்பது கவனத்தில் கொள்ளத்தக்கது.