Maruti Suzuki Wagon R www.carandbike.com
வணிகம்

Wagon R - 35 லட்சம் கார்கள் தயாரித்து சாதனை; மாருதி நிறுவனம் பெருமிதம்!

இந்திய கார் சந்தையில் மாருதி சுசூகி நிறுவனத்துக்கு அசைக்க முடியாத இடம் உண்டு. தற்போது, இந்தியச் சந்தையில் வெளிநாட்டு கார்கள் ஆக்ரமிக்கத் தொடங்கினாலும் மாருதி தயாரிப்புகளுக்கு கொஞ்சமும் மவுசு குறையவில்லை.

எம். குமரேசன்

இந்திய கார் சந்தையில் மாருதி சுசூகி நிறுவனத்துக்கு அசைக்க முடியாத இடம் உண்டு. தற்போது, இந்தியச் சந்தையில் வெளிநாட்டு கார்கள் ஆக்ரமிக்கத் தொடங்கினாலும் மாருதி தயாரிப்புகளுக்கு கொஞ்சமும் மவுசு குறையவில்லை. அந்த வகையில், இந்த ஆண்டும் சிறந்த காருக்கான விருதை மாருதி நிறுவனமே தட்டிச் சென்றுள்ளது. இந்த ஆண்டுக்கான சிறந்த காருக்கான விருதை மாருதி விக்டோரியஸ் கார் பெற்றுள்ளது. இரண்டாவது இடத்தை ஸ்கோடா கீலாக் காரும் மூன்றாவது இடத்தை Mahindra XEV 9E காரும் பெற்றுள்ளன. முதலிடத்துக்கான விருதை ஜே.கே டயர்ஸ் நிறுவனத்தின் தலைவர் ரகுபதி சிங்கானியா மாருதி நிறுவன அதிகாரிகளிடம் வழங்கினார்.

இதற்கிடையே, வேகன் ஆர் ரக கார் உள்நாட்டில் மட்டும் 35 லட்சம் உற்பத்தியைத் தாண்டியுள்ளதாக மாருதி நிறுவனம் அறிவித்துள்ளது. கடந்த 1993ம் ஆண்டு முதன்முதலில் வேகன் ஆர் கார் ஜப்பானில் உற்பத்தி செய்யப்பட்டது. பின்னர், 1999ம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் இந்தியச் சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டது.

2004ம் ஆண்டு சி.என்.ஜி ரக காரும் அறிமுக்கப்படுத்தப்பட்டது. ஹரியானாவிலுள்ள கிர்கான் மற்றும் மனேசர் பிளாண்டுகளில் இந்த ரக கார் தயாரிக்கப்படுகிறது. கடந்த 25 ஆண்டுகளில் 35 லட்சம் வேகன் ஆர் ரக கார்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. முன்னதாக, ஆல்ட்டோ, ஸ்விப்ட் ரக கார்கள் மட்டுமே 35 லட்சத்தைத் தாண்டியுள்ளன. தற்போது, சந்தையில் இருக்கும் வேகன் ஆர் ரக கார்கள் 5வது தலைமுறையாகும்.

இது குறித்து மாருதி சுசுகி இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி ஹிசாஷி டகேயுச்சி கூறுகையில், "இந்த சாதனை வெறும் உற்பத்தியை மட்டும் பிரதிபலிப்பது அல்ல. வேகன் ஆர் பிராண்டின் மீது தலைமுறை தலைமுறையாக வாடிக்கையாளர்கள் வைத்த நம்பிக்கையையும் பிரதிபலிக்கிறது. அறிமுகப்படுத்தப்பட்டு 25 ஆண்டுகளுக்குப் பிறகும் ஒரு வாகனம் தொடர்ந்து வாடிக்கையாளர்களிடத்தில் வரவேற்பைப் பெறுவது அரிதான விஷயம். புதிய தொழில்நுட்பம் மற்றும் நவீன அம்சங்களை அறிமுகப்படுத்தியதன் மூலம் தொடர்ந்து விற்பனையில் முன்னணியில் உள்ளது. அதே நேரத்தில், அதன் உண்மையான டிஎன்ஏவை அது தக்கவைத்துக் கொண்டுள்ளது.

Wagon R

வேகன் ஆர் ரக கார் அதன் வடிவமைப்பு, விசாலமான உட்புறம், மற்றும் எரிபொருள் சேமிப்புத் திறன் போன்ற அம்சங்களுக்காக வாடிக்கையாளர்களால் அதிகம் விரும்பப்படுகிறது. வாடிக்கையாளர்களின் தேவைகளையும் எதிர்பார்ப்புகளையும் இந்த ரக கார் பூர்த்தி செய்கிறது. அவர்களின் தொடர்ச்சியான ஆதரவிற்கு நாங்கள் மிகவும் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம். மேலும், வரும் தலைமுறைகளுக்கும் வேகன் ஆர் ரக கார்களை வழங்க நாங்கள் தயாராக இருக்கிறோம்'' என்றார்.

வேகன் ஆர் கார்கள் ஓட்டுவதற்கு எளிதானதாக கருதப்படுகிறது. இதனால், பெண்களும் அதிகளவில் இந்த ரக காரை வாங்க விரும்புகின்றனர். இந்தியாவில் 2021ம் ஆண்டு 183,851 கார்களும் 2022ம் ஆண்டு 217,317 கார்களும் 2023ம் ஆண்டு 201,301 கார்களும் 2024ம் ஆண்டு 200,177 கார்களும் 2025ம் ஆண்டு 198,451 கார்களும் விற்பனையாகியுள்ளன. இந்தியாவில் மட்டும் இதுவரை 32 லட்சம் வேகன் ஆர் ரக கார்கள் விற்பனையாகியுள்ளன.

இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் கார்களில் 2022ம் ஆண்டு முதல் 2025ம் ஆண்டு வரை வேகன் ஆர் ரக கார் முதலிடத்தில் உள்ளது. தற்போது, ஜப்பான், ஹங்கேரி, இந்தியா , இந்தோனேஷியா போன்ற நாடுகளில் வேகன் ஆர் ரக கார்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. ஐரோப்பிய நாடுகள் உள்ளிட்ட 75 நாடுகளுக்கு வேகன் ஆர் ரக கார் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

1993ம் ஆண்டு மாருதி வேகன் ஆர் ஜப்பானில் விற்பனைக்கு வந்த பிறகு, 2025ம் ஆண்டு ஜூன் மாதத்தில் வெளிநாடுகளில் மட்டும் 1 கோடி கார்கள் விற்பனையாகி சாதனை படைத்தது. இதற்கு, 31 ஆண்டுகள் 9 மாதங்கள் மட்டுமே தேவைப்பட்டது. அதேபோல, கடந்த 2005ம் ஆண்டு ஜப்பானில் அறிமுகப்படுத்தப்பட்ட மாருதி ஸ்விப்ட் ரக காரும் 20225ம் ஆண்டு ஜூலை மாதத்தில் உலகளவில் 1 கோடி விற்பனையை எட்டியது என்பதும் குறிப்பிடத்தக்கது. அதில், இந்தியாவில் மட்டும் 60 லட்சம் கார்கள் விற்பனையாகியுள்ளன.