உலகில் சில நாடுகளே பயணிகள் விமானத்தை தயாரித்து வருகின்றன. அவற்றில், அமெரிக்காவின் போயிங் மற்றும் பிரான்ஸ் நாட்டின் ஏர்பஸ் முக்கியமானவை. சீனாவும் சி-919 என்ற பயணிகள் விமான தயாரிப்பில் கடந்த 2007 ம் ஆண்டு முதல் ஈடுபட்டு வந்ததது. சீனப் பொருட்களைக் கொண்டே வடிவமைக்கப்பட்டுள்ள, இந்த விமானத்தில், சில வெளிநாட்டு நிறுவனங்கள் தயாரித்த பொருட்களும் இடம் பெற்றுள்ளன. கடந்த 2023ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் பெய்ஜிங் - ஷாங்காய் நகரங்களுக்கு இடையே இந்த விமானம் முதன்முதலாக இயக்கப்பட்டது. தற்போது, ஹாங்காங் - ஷாங்காய் நகரங்களுக்கு இடையேயும் இயக்கப்படுகிறது. 192 பயணிகள் பயணிக்கும் இந்த விமானம் குறுகிய உடல் அமைப்பை கொண்டது . இந்த விமானத்தைக் கொண்டு போயிங் மற்றும் ஏர்பஸ் ஆகிய நிறுவனங்களுடன் , அதிக லாபம் தரும் விமான விற்பனை சந்தையில் போட்டியிடலாம் என்று சீனா கருதுகிறது. ஆனாலும், சீன விமானங்களுக்கு இன்னமும் சர்வதேச சந்தையில் பெரிய அளவில் வரவேற்பு இல்லை. அதே போல, ரஷ்யா , பிரேசில் போன்ற நாடுகளும் பயணிகள் விமான தயாரிப்பில் ஈடுபட்டு வருகின்றன.
விண்வெளித்துறையில் பல சாதனைகளை படைத்திருந்தாலும், இந்தியா, பயணிகள் விமானத்தயாரிப்பில் பெரிய அளவில் இதுவரை சாதிக்கவில்லை. சிறிய ரக விமானங்களை மட்டுமே உள்நாட்டில் தயாரித்து வருகிறது. அந்த குறையை போக்கும் வகையில் இந்தியாவும் பயணிகள் விமான தயாரிப்பில் ஈடுபட முடிவு செய்துள்ளது. இந்த விமானத்துக்கு சுகோய் சூப்பர் ஜெட் ( SJ-100)என்று பெயரிடப்பட்டுள்ளது. தேஜாஸ் போல முற்றிலும் உள்நாட்டு பொருட்களை கொண்டே இந்த விமானம் தயாரிக்கப்படுகிறது. இதற்காக, இந்தியாவின் ஹிந்துஸ்தான் ஏரோநாடிக்கல் நிறுவனத்துடன் ரஷ்யாவின் யுனைடெட் ஏர்கிராஃப்ட் கார்பரேசன் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது. இந்த நிறுவனத்திடம் இருந்து இந்தியா ஏற்கனவே மிக்- 21, மிக்-27 ரக விமானங்களை வாங்கியுள்ளது. ஆனால், பயணிகள் விமான உற்பத்தியில் ஈடுபடப் போவது இதுவே முதன்முறை. குறிப்பாக, ரஷ்யாவிடம் இருந்து அதிகளவில் எண்ணெய் வாங்குவதற்காக இந்தியாவுக்கு அமெரிக்க அதிக வரிவிதித்த நிலையில், இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. SJ-100 விமானம் இந்தியாவின் உள்நாட்டுப் பயணத்துக்கு மட்டுமே பயன்படுத்தப்படும்.
இந்த ஒப்பந்தம் குறித்து இந்துஸ்தான் ஏரோநாடிக்கல் நிறுவனம் கூறுகையில், ''இது ஒரு கேம்சேஞ்சர் ஒப்பந்தம் ஆகும். நரேந்திர மோடி அரசின் 'தன்னிறைவு பெற்ற இந்தியா' என்ற லட்சியத்தை நோக்கி நாட்டை கொண்டு செல்லும். அதோடு, இந்தியாவை விமானங்கள் விற்பனை மையமாகவும் மாற்றும். மத்திய அரசின் உடான் திட்டத்தின் கீழ் சிறு நகரங்களில் அமைந்துள்ள விமான நிலையங்களை இணைக்க இந்த விமானம் பயன்படும் ' என்று தெரிவித்துள்ளது.
அடுத்த 10 ஆண்டுகளில் இந்தியாவின் உள்நாட்டு விமானங்களின் தேவை 200 ஆக உள்ளது. தற்போது, இந்திய விமான நிறுவனங்கள் போயிங் நிறுவனத்தின் 737 மற்றும் ஏர்பஸ் 320 ரக விமானங்களை வாங்கி உள்நாட்டு சேவைக்கு பயன்படுத்தி வருகின்றன. வருங்காலத்தில், இந்தியாவிலேயே பயணிகள் விமானம் தயாரிக்கப்பட்டால், இந்திய விமான நிறுவனங்கள் இந்திய விமானத்தை வாங்கவே முன்னுரிமை அளிக்கும். இதன்காரணமாக, வெளிநாட்டு விமான தயாரிப்பு நிறுவனங்களுக்கு சவால் காத்திருக்கிறது.