லூலூ குரூப் தலைவர் யூசப் அலி  Welco
வணிகம்

லூலூ குரூப்பின் சிங்கிள் பேமென்ட்: அதிர்ந்த அகமதாபாத்

கடந்த 2021ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் கேரளாவில் கொச்சி அருகே இவர் பயணித்த ஹெலிகாப்டர் திடீரென்று விபத்தில் சிக்கியது.

எம். குமரேசன்

உலகின் மிகப் பெரிய ஹைபர்மார்க்கெட், மால்கள் வரிசையில் லூலூ குரூப்புக்கு நிச்சயமாக இடமுண்டு. கடந்த 1989ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த நிறுவனம் அபுதாபியைத் தலைமையிடமாக கொண்டு இயங்கி வருகிறது.1995ம் ஆண்டு முதல் பிரமாண்ட மால்களையும் நடத்தி வருகிறது. குவைத், கத்தார், சவுதி , ஓமன், போன்ற வளைகுடா நாடுகளில் இந்த மால்கள் பிரபலம். இந்தியாவிலும் கோவை, கொச்சி, திருவனந்தபுரம் உள்ளிட்ட நகரங்களில் லூலூ மால்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த குழுமத்தின் தலைவரான யூசப் அலி பல்வேறு அறக்கட்டளைகளை நடத்துகிறார். சமுதாய பணிகளிலும் தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர். பல்லாயிரம் கோடிக்கு அதிபதியாக இருந்தாலும், மிக எளிமையான மனிதரும் கூட. இதற்கு உதாரணமாக ஒரு சம்பவத்தை கூறலாம்.

கடந்த 2021ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் கேரளாவில் கொச்சி அருகே இவர் பயணித்த ஹெலிகாப்டர் திடீரென்று விபத்தில் சிக்கியது. இதையடுத்து, அங்குள்ள கிராமத்தில் ஹெலிகாப்டர் தடுமாறியபடி தரையிறங்கியது. தங்கள் வீட்டருகே ஹெலிகாப்டர் ஒன்று தடுமாறியபடி தரையிறங்கியதை பார்த்த போலீஸ் தம்பதியரான ராஜேஷ் கண்ணா அவரின் மனைவி பிஜி ஆகியோர் ஓடி சென்று ஹெலிகாப்டரில் இருந்த பயணிகளை மீட்டனர். அந்த ஹெலிகாப்டரில் பயணித்தது வேறு யாருமல்ல லுலு குழுமத்தின் சேர்மன் யூசப் அலியும் அவரின் மனைவியும்தான்.

அந்த தம்பதி இருவரையும் மீட்டு, பத்திரமாக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து நடந்த தருணத்தில் அவர்கள் இருவருக்கும் நன்றி கூறிவிட்டு, யூசப் அலி சென்று விட்டார். ஆனால், இந்த தம்பதி செய்த உதவியை யூசப் அலி மறுக்கவில்லை. தொடர்ந்து, அதே ஆண்டு டிசம்பர் மாதத்தில் திடீரென்று ராஜேஷ் கண்ணா வீட்டுக்கு சர்ப்ரைசாக விசிட் செய்து நன்றி தெரிவித்தார் யூசப் அலி. சிறந்த பிசினஸ்மேன் மட்டுமல்ல, மனிதநேயமிக்கவர் என்பதை இந்த சம்பவம் எடுத்துக் காட்டியது.

இந்த யூசப் அலிக்கு சொந்தமான லூலூ குரூப்தான் இப்போது அகமதாபாத் நகரையே மறறொரு விஷயத்தில் அதிர வைத்துள்ளது. இந்தியாவிலேயே மிகப்பெரிய LuLu மாலை திறக்க எம்.ஏ.யூசுப் அலி முடிவு செய்திருந்தார். இதற்காக குஜராத் மாநிலம் அகமதாபாத் தேர்வு செய்யப்பட்டது.

இந்தியாவில் நிலம் அதிக மதிப்புள்ள மெட்ரோ நகரங்களில் அகமதாபாத்தும் ஒன்று. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் சொந்தத் தொகுதியான காந்தி நகரிலுள்ள சந்த்கேடா என்னும் பகுதி அகமதாபாத்தில் அதிக நில மதிப்பு கொண்டது. இந்த பகுதியில்தான் லூலூ குரூப் 16.35 ஏக்கர் நிலத்தை வாங்கியுள்ளது. இதன் மதிப்பு 519.41 கோடியாகும். அதாவது, ஒரு சதுர அடி நிலம் 78 ஆயிரம் ஆகும். கடந்த 2024ம் ஆண்டு ஜூன் மாதத்தில் இந்த நிலத்தை அகமதாபாத் மாநகராட்சியிடம் இருந்து லூலூ குரூப் ஏலம் எடுத்தது.

இந்த நிலத்தை சபர்மதி பத்திரப்பதிவு அலுவலகத்தில் பதிவு செய்துள்ளனர். ஸ்டாம்ப் டூட்டியாக மட்டும் 31 கோடியை லூலூ குரூப் செலுத்தியுள்ளது. அகமதாபாத் நகரில், இதற்கு முன்னர், 300, 400 கோடி மதிப்பில் நிலங்கள் விற்பனையாகியுள்ளன. ஆனால், 500 கோடி மதிப்புக்குஅதிகமாக நிலம் வாங்கப்பட்டதும் , இதனால் அரசுக்கு 31 கோடி வருவாய் கிடைத்ததும் இதுவே முதன்முறை ஆகும்.

குஜராத்தில் தங்கள் வர்த்தகத்தை தொடங்கும் வகையில், இந்த நிலத்தை லூலூ குரூப் வாங்கியுள்ளது. இந்த இடத்தில் கிட்டத்தட்ட 4 ஆயிரம் கோடி மதிப்பில் இங்கு பிரமாண்டமான மால் அமையவுள்ளதாக கூறப்படுகிறது.