ஹார்லி டேவிட்சன் பைக்  
வணிகம்

இந்தியாவில் ஹார்லி டேவிட்சனுக்கு 200 சதவிகிதம் வரி - டிரம்ப்

கடந்த 2009ம் ஆண்டு ஹரியானாவிலுள்ள கிர்கானில் ஹார்லி டேவிட்சன் பைக்கின் பிளான்ட் அமைக்கப்பட்டது. ஆனால், போதிய வரவேற்பு இல்லாததால் 2020ம் ஆண்டு இந்த பிளான்டை அந்த நிறுவனம் மூடிவிட்டது.

எம். குமரேசன்

இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்கள் மீது 50% வரிகள் விதிக்கப்பட்டுள்ளன. இதனால், ஜவுளி, தோல், இறால், கைவினைப் பொருட்கள் தேங்க தொடங்கியுள்ளன. சில பொருட்களுக்கு விதிவிலக்கு கொடுக்கப்பட்டுள்ளது. எனினும், 60 சதவிகிதத்துக்கும் அதிகமான இந்தியாவின் ஏற்றுமதிகள் 50% வரிகளால் பாதிக்கப்படும் என்றே சொல்கிறார்கள்.

டிரம்பின் நடவடிக்கைக்கு அமெரிக்க பொருளாதார வல்லுநர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். சிலர் இதனை அடக்குமுறைத்தனமானது என்றும் கருத்து வெளியிட்டுள்ளனர். சிலர், இது உலகளாவிய வணிகத்தில் இந்தியா வேறு சிறந்த வாய்ப்புகளைத் தேடத் தூண்டும் என்றும் கூறுகின்றனர். இந்தியாவை ராஜாங்க ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் தண்டிக்கும் அமெரிக்காவின் செயலால் சீனாவுடன் இந்தியா நெருக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. அதற்கேற்றவகையில், சமீபத்தில் தியான்ஜினில் நடந்த ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பிரதமர் மோடி சீன அதிபர் ஜின்பிங்குடன் அதிகமாக நெருக்கம் காட்டினார்.

அதோடு, சீனாவிலிருந்து இந்தியாவிற்கு தொடர்ந்து, ஏற்றுமதி அதிகரித்து வருகிறது மற்றும் இருநாடுகளுக்கும் இடையேயான நேரடி விமான சேவைகள் மீண்டும் தொடங்கப்படவுள்ளது. செப்டம்பர் மாதம் இருநாடுகளுக்கும் இடையே 5 ஆண்டுகள் கழித்து நேரடி விமான சேவை தொடங்க இருக்கிறது. சீனாவிலிருந்து இந்தியாவின் வருடாந்திர இறக்குமதி 118 பில்லியன் டாலர்களை எட்டியுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் இது 13% ஆக அதிகரித்த வண்ணம் இருக்கிறது

அதேவேளையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இந்தியா மீது 50 சதவிகித வரியை விதித்ததற்கு தொடர்ந்து பல காரணங்களை கூறி வருகிறார். இது குறித்து truthsocial பக்கத்தில், தன் கணக்கில்கணக்கில் டிரம்ப் பதிவிட்டுள்ளதாவது, 'இந்தியா தொடர்ந்து, அமெரிக்கப் பொருட்களுக்கு அதிக வரியை விதித்து வருகிறது. இந்திய பொருட்களுக்கு அமெரிக்காவில் குறைந்த வரி விதித்த சமயத்தில் அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் ஹார்லி டேவிட்சன் மோட்டார் சைக்கிளுக்கு இந்தியாவில் 200 சதவிகித வரி விதிக்கப்பட்டது. இதனால், ஹார்லி டேவிட்சன் நிறுவனம் இந்தியாவிலேயே தனது பைக்கை உற்பத்தி செய்யத் தொடங்கியது. வரியை தவிர்ப்பதற்காக, இத்தகைய நடவடிக்கையில் ஹார்லி டேவிட்சன் ஈடுபட்டது.

இத்தகையை அதிக வரியால் ஏராளமான அமெரிக்க நிறுவனங்கள் தங்கள் பொருட்களை இந்திய சந்தையில் விற்க முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டன. ரஷ்யாவில் இருந்தே இந்தியா அதிக ஆயுதங்களையும், கச்சா எண்ணையையும் வாங்குகிறது. அமெரிக்காவிடம் இருந்து குறைவாகவே வாங்குகிறது. அமெரிக்கா இந்தியாவுடன் மிகக் குறைந்தளவே வர்த்தகம் செய்கிறது. ஆனால், இந்தியா எங்களுடன் மிகப்பெரிய அளவில் வர்த்தகம் செய்கிறது. இந்தியாவின் முக்கியமான மிகப்பெரிய வாடிக்கையாளர் நாம். ஆனால், நமக்கு உரிய மரியாதையை அந்த நாடு அளிக்கவில்லை.

தற்போது, இந்தியா வரியை குறைக்க கோருகிறது. ஆனால, இப்போது காலம் கடந்து விட்டது . இப்போது ஆயிரக்கணக்கான நிறுவனங்கள் குறிப்பாக கார் நிறுவனங்கள் சீனா, மெக்சிகோ மற்றும் கனடாவிலிருந்து அமெரிக்காவில் தொழிற்சாலைகளை அமைக்கின்றன. நீங்கள் உங்கள் கார்களை அமெரிக்காவிலேயே அமைக்கும்போது, வரி விதிப்பு எதுவுமில்லை' என்று தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் ஹார்லி டேவிட்சன் பிளான்ட் திறக்கப்பட்டதா?

கடந்த 2009ம் ஆண்டு ஹரியானாவிலுள்ள கிர்கானில் ஹார்லி டேவிட்சன் பைக்கின் பிளான்ட் அமைக்கப்பட்டது. ஆனால், போதிய வரவேற்பு இல்லாததால் 2020ம் ஆண்டு இந்த பிளான்டை அந்த நிறுவனம் மூடிவிட்டது. தற்போது, ராஜஸ்தானில் நீம்ரானாவிலுள்ள ஹீரோ மோட்டார் சைக்கிள் நிறுவனத்தின் ஒத்துழைப்புடன் ஹார்லி டேவிட்சன் பைக்குகள் இந்தியாவில் தயாரிக்கப்பட்டு வருகின்றன. எனவே, அந்த நிறுவனம் இந்தியாவில் நேரடி உற்பத்தியில் ஈடுபடவில்லை.

இதற்கிடையே அமெரிக்க அரசின் முன்னாள் ஆலோசகரான மேரி கீசல் ஃபாக்ஸ் நியூஸ் சேனலிடத்தில் பேசுகையில், 'இந்தோ பசிபிக் பகுதியில் அதிகரித்து வரும் சீனாவின் செல்வாக்கை அமெரிக்காவால் தனியாக கட்டுப்படுத்த முடியாது. இந்தியாவின் ஆதரவு இல்லாமல் சீனாவை கட்டுப்படுத்துவது கடினமானது. சீன கம்யூனிஸ்ட் நாடு அமெரிக்காவுக்கும் நமது வாழ்வியல் முறைக்கும் உண்மையான அச்சுறுத்தல் என்று நீங்கள் நினைத்தால், இந்தியாவை தவிர்த்து விட்டு சீனாவுடன் தனியாக போராட முடியாது ' என்று தெரிவித்துள்ளார்.