மலர்விழி  
வணிகம்

ஒற்றைப்பசு தந்த வாழ்க்கை : ஐஸ்கிரீம் பிராண்டை உருவாக்கிய தமிழச்சி!

ஒரு பசுவுடன் தொடங்கிய வர்த்தகம் ஆண்டுக்கு ஒன்றரை கோடி டர்ன் ஓவராக உயர்ந்துள்ளது.

எம். குமரேசன்

பிசினஸ் தொடங்குவதும் அதை சக்ஸஸாக நடத்திக் காட்டுவதும் சாதாரண விஷயம் அல்ல. அதுவும், பெண் ஒருவர் தனியாக சாதித்துக் காட்டுவது மலையைப் புரட்டுவது போல. பல ஏளனங்கள், அலட்சியங்கள், அவமானங்களைக் கடந்துதான் பிசினஸில் பல பெண்கள் சாதித்திருப்பார்கள். பெண்கள் பலர் பிசினஸ் வெற்றி பெற்ற கதையைக் கேட்டால் கண்ணீரே வந்துவிடும். அந்தளவுக்கு , போராட்டங்களை சந்தித்துதான் சக்ஸஸான தொழில் முனைவோர்களாக மாறியிருப்பார்கள். அந்த வகையில், தமிழகத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் கேரளாவில் மிகச்சிறந்த ஐஸ்கிரீம் பிராண்டை பல கட்டப் போராட்டங்களுக்கு பிறகு உருவாக்கி சாதித்துள்ளார். இந்த பெண்ணின் பெயர் மலர்விழி. இவர் 10ம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ளார்.

தற்போது, 58 வயதாகும் மலர்விழி போடிநாயக்கனுரை சேர்ந்தவர். ஓரளவுக்கு வசதியான குடும்பத்தைச் சேர்ந்த மலர்விழியை சிறு வயதிலேயே மனோகரன் என்பவருக்குத் திருமணம் செய்து கொடுத்து விட்டனர். கணவர் மனோகரன் சென்னையில் பிசினஸ் செய்து கொண்டிருந்தார். வாழ்க்கை நன்றாகப் போய்க் கொண்டிருந்த சமயத்தில் கணவர் மனோகரனுக்கு பிசினஸில் பெருத்த அடி விழுந்தது. குடும்பம் கடனில் விழுந்தது. மலர்விழிக்கு விழி பிதுங்கியது. என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்துக் கொண்டிருந்தார்.

தொடர்ந்து , சென்னையில் இருந்து 37 ஆண்டுகளுக்கு முன்பு இடுக்கி மாவட்டம் உடும்பன்சோலையில் குடியேறினார் மலர்விழி. அப்போது ஒரே ஒரு பசு மட்டும் அவரிடம் இருந்தது. தனது நகைகளை விற்று 10 ஏக்கரில் நிலத்தை வாங்கி மாடுகளை வளர்க்க முடிவு செய்தார். ஒன்றிலிருந்து படிப்படியாக பசுக்களின் எண்ணிக்கையை அதிகரித்தார். அதன் விளைவாக பால் உற்பத்தி பெருகியது. சிறு துளியாக சம்பாதிக்கத் தொடங்கி, மாதம் ஒரு லட்சம் வரை சம்பாதிக்கும் அளவு உயர்ந்தார்.

அதுமட்டுமல்லாமல், தனது பண்ணையில் கருஞ்சீரகம், காளான் போன்றவற்றையும் வளர்க்கத் தொடங்கினார். பின்னர், தனது பிசினஸை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்ல மலர்விழி விரும்பினார். அப்போது, உருவானதுதான் Rafeo Ice cream Brand. தற்போது, இந்த ஐஸ்கிரீம் கேரளா மற்றும் தமிழகத்தில் சக்கை போடு போடத் தொடங்கியுள்ளது. ஆண்டுக்கு ஒன்றரை கோடிக்கு டர்ன் ஓவர் கொண்ட பிசினஸாக மாறியுள்ளது. இப்போது, மலர்விழியின் ஐஸ்கிரீம் ஃபேக்டரியில் 40 ஊழியர்கள் பணி புரிகின்றனர்.

Ice Cream Cups

தனது பண்ணையில் பயிரிடப்பட்ட பழங்கள், தனது பண்ணையிலுள்ள நாட்டு மாடுகளில் இருந்து கிடைக்கும் சுத்தமான பாலைக் கொண்டு ஐஸ்கிரீமை தயாரிக்கிறார். இதனால்,ரேஃபியோ ஐஸ்கிரீம் தனிச் சுவையுடன் இருப்பதால், வாடிக்கையாளர்கள் ஆர்வத்துடன் வாங்கி சாப்பிடுகின்றனர். ஐஸ்கிரீம் மட்டுமல்லாமல் மில்க் ஷேக், மில்லட் பொருட்களையும் மலர்விழியின் ரேஃபியோ நிறுவனம் தயாரிக்கிறது. இதுதவிர, தனது பண்ணையில் மீன் வளர்ப்பு, மலர்கள் வளர்ப்பு போன்றவற்றிலும் மலர்விழி ஈடுபடுகிறார். இதனால், பல துறைகளிலும் அவரின் நிறுவனம் கால் பதிக்க தொடங்கியது. வர்த்தகம் பெருகி பணம் கொட்ட தொடங்கியது.

தனது ரேஃபியோ பிராண்ட் ஐஸ்கிரீம் குறித்து மலர்வழி கூறுகையில், 'வாடிக்கையாளர்களின் டேஸ்ட் அறிந்து ஐஸ்கிரீம்களை வெண்ணிலா, ஸ்ட்ராபெரி என ஆறு வகைகளில் விற்பனை செய்கிறாம். தரத்திலும், சுவையிலும் சமரசம் செய்து கொள்வதே இல்லை. எந்த ஒரு பிசினசுக்கும் இடையூறுகள் வரத்தான் செய்யும். அதை, தாண்டித்தான் நாம் பயணிக்க வேண்டும். அப்போதுதான், வெற்றி பெற முடியும். பெண்களாலும் சிறந்த தொழில் முனைவோர்களாக மாற முடியும். அதற்கு, சமூகத்தில் நிலவும் ஏற்றத் தாழ்வுகளை கடந்து வர நாம் தயாராக இருக்க வேண்டும். 3 ஆண்டுகளில் நான் இத்தகைய சிறந்த பிராண்டை உருவாக்கியுள்ளேன். படிப்பைப் பற்றி நான் பயம் கொள்ளவில்லை. ஆனால் முன்னேற்றத்துக்கு கல்வி மிக அவசியம் என்பது மிகவும் உண்மை. மேலும் உழைப்பும், நீண்ட காலத் திட்டமிடலும் அடுத்த கட்டத்துக்கு நமது வர்த்தகத்தை எடுத்து செல்லும் திறனும் வெற்றிக்கு முக்கியமானது ' என்கிறார்.