Top 4 Finalist @jiohotstar
BiggBoss 9

திவ்யாவின் வெற்றி ஏற்புடையதா? #Biggboss Day 105 - Finale

டிப்ளமேடிக்காக பேசுகிறேன் பேர்வழி என்று திவ்யாவைப் புகழ்ந்தும், செய்யாத தவறுக்கு அவரிடம் மன்னிப்புக் கேட்டுமே திவ்யாவை இந்த இடத்துக்குக் கொண்டு வந்துவிட்டார் விக்ரம். அந்த வகையில் திவ்யாவின் வெற்றிக்கு, விக்ரமும் ஒரு காரணமே!

ஆதி தாமிரா

அலங்காரமான இறுதி மேடைக்கு வந்த விஜய் சேதுபதி, முதல் வேலையாக வெளியேறிய அத்தனைப் போட்டியாளர்களையும் வரவழைத்து அவர்களுடைய இருக்கையில் உட்கார வைத்தார். நந்தினி, கமரு, பாரு மூவரும் மிஸ்ஸிங்! அடுத்து, ’எதிர்பாராத விருந்தாளியை அழைக்கிறேன்’ என்ற பில்டப்புடன் கமருவை வரவழைத்தார். ‘எங்களுக்கு உள்ளே இருப்பவர்கள், வெளியே வந்தவர்கள், ரெட் கார்டு வாங்கியவர்கள் என எல்லோருமே சமம்தான். பாருவையும் அழைத்தோம், அவர் பிசியாக இருந்ததால் வரமுடியவில்லை’ என்று விஜய் சேதுபதியே காரணமும் சொல்லிக் கொண்டார். ஆனால், நிகழ்ச்சியின் பிற்பகுதியில் பாருவும் வந்து இணைந்துகொண்டார். 

கமருவும், பாருவும் ஃபார்மாலிடிக்கு மேடையில் மன்னிப்புக் கேட்டுக்கொண்டார்கள். அப்போது கூட நீட்டி முழக்கத்தயாராக இருந்த பாருவைக் கஷ்டப்பட்டு பாதியில் நிறுத்தி உட்கார வைத்தார் விசே! முன்னதாக நடிப்பு அரக்கி சாண்ட்ரா மேடைக்கு வந்து, பாருவைக் கட்டிப்பிடித்து அவருக்கு வேண்டிய டிராமாவை நடத்திக் கொண்டார். அதாவது, ’தமக்கின்னா செய்தாருக்கு, அவர் நாண நன்னயம்’ செய்கிறாராம்! நந்தினி, பிக்பாஸ் நிகழ்ச்சியின் மீதே ஏதோ கேஸ் போட்டிருப்பதாகச் செய்தி. அதனால், அவரை மட்டும் அழைக்கவில்லை போலிருக்கிறது.

Sabarinadhan

பின்பு அவர்களிடம், ’வெளியே வந்த பிறகு உங்களுக்கு கிடைத்த விமர்சனங்களில் இருந்து நீங்கள் எதை ஏற்றுக் கொண்டு கொண்டிருக்கிறீர்கள்?’ என்று ஒரு கேள்வியை கேட்டார் விசே. ஒரு சிலர் எழுந்து வழக்கம் போல கடமைக்கு எதையோ சொல்லிவிட்டு உட்கார்ந்தார்கள்.

அடுத்து வீட்டுக்குள் போய், இறுதிப் போட்டியாளர்கள் நால்வரிடமும், ’மற்ற போட்டியாளர்களிடம் இருந்து எந்த ஒரு நல்ல குணத்தை நீங்கள் கற்றுக் கொண்டீர்கள்?’ என்று கேள்வியைக் கேட்டார்.

விக்ரம் எழுந்து திவ்யாவைச் சொல்லி ’யார் என்ன சொன்னாலும் அதை மனதுக்குள் எடுத்துக் கொள்ளாமல், தன்னை விட்டுக் கொடுக்காமல், அவருடைய பர்ஸ்பெக்டிவில் உறுதியாக இருந்தார்’ என்று சொன்னார். அடப்பாவி விக்ரம், அதன் பெயர் வறட்டுப் பிடிவாதம்! அடுத்தவருடைய கோணத்தில் சிந்திக்கத் தயாராக இல்லாத முதிர்ச்சியின்மை. இதையா அவரிடமிருந்து கற்றுக் கொண்டீர்கள்? இப்படித் தேவையேயில்லாமல், டிப்ளமேடிக்காக பேசுகிறேன் பேர்வழி என்று திவ்யாவைப் புகழ்ந்தும், செய்யாத தவறுக்கு அவரிடம் மன்னிப்புக் கேட்டுமே திவ்யாவை இந்த இடத்துக்குக் கொண்டு வந்துவிட்டார் விக்ரம். அந்த வகையில் திவ்யாவின் வெற்றிக்கு, விக்ரமும் ஒரு காரணமே!

அடுத்து, சூப்பர் சிங்கர் குழுவினர் வந்து பாட்டுக் கச்சேரி நடத்தினர். நன்றாகவே இருந்தது. அதன்பின், எல்லா சீசனிலும் செய்வது போல கண்ணாடி அறைக்குள் வரவழைத்து, நால்வரையும் செண்டிமெண்ட் டயலாக் பேசச் சொல்லி, நெகிழ்ச்சியை பிழிய முயற்சி செய்தார் பிக்பாஸ்! ஆனால், அப்படி ஒன்றும் தேறவில்லை!

அடுத்து ஒரு டாஸ்க் வைத்து, அரோராவை வெளியேற்றினார்கள். இந்த நால்வரை ஒப்பிட்டால், அரோரா நிச்சயம் கோப்பைக்கே தகுதியானவர் என்றுதான் நமக்குத் தோன்றுகிறது. மக்களை ஓட்டுப் போட்டுத் தேர்ந்தெடுக்கச் சொன்னால், அது இப்படி முன்னப்பின்ன இருக்கத்தான் செய்யும். சீசன் 6ல் அசீம் வென்றதையெல்லாம் கூட பார்த்திருக்கிறோம் நாம்!

Actor Vijaysethupathi enters in Biggboss house

அடுத்து, கொஞ்ச நேரம் வெற்றிக்கோப்பையைக் காண்பித்து நேரத்தை ஓட்டினார்கள். நடுநடுவே போட்டியாளர்களின் ஸ்டேஜ் பர்ஃபார்மென்ஸும் காட்டப்பட்டது. தர்பூசணியின் டான்ஸெல்லாம் கூட நாம் பார்த்துத் தொலைய வேண்டியதாயிருந்தது. ஆனால், அமித்தும், அவரது குழந்தையும் பாட்டுப் பாடியது உண்மையில் பிரமாதமாக இருந்தது.

அதன்பின், விஜய் சேதுபதியிடம் போட்டியாளர்கள் கேள்வி கேட்டார்கள். குறிப்பாக ‘விமர்சனத்தை எப்படி எதிர்கொள்கிறீர்கள்?’ என்பது பிரதானமாக இருந்தது. அதற்கு விசே, ‘யார் வேணா என்ன வேணா சொல்லிட்டுப் போங்கடா’ என்பது போல தெனாவெட்டாகத்தான் பதில் சொன்னார். 

அடுத்து, மாகாபா தலைமையில், முந்தைய சீசன் போட்டியாளர்கள் சிலர் வந்து காமெடி பட்டிமன்றம் நடத்துகிறேன் பேர்வழி என்று காட்டுமொக்கை போட்டுவிட்டுப் போனார்கள். மாகாபா ஏனோ தானோவென்று வாய்க்கு வந்ததைப் பேசிவிட்டுப் போனார்.

ஒருவழியாக, இறுதிப் போட்டியாளர்கள் மூவரையும் மேடைக்கு அழைத்து வந்தனர். அவர்களிடமும் அவர்களது குடும்பத்தினரிடம் சில கேள்விகளைக் கேட்டு நேரத்தைப் போக்கினார்கள். அதன் பின்னர் விக்ரமை வெளியேற்றினார்கள். இதையும் நாம் எதிர்பார்க்கவில்லை.

Title Winner Divya Ganesh

அடுத்த கொஞ்ச நேரத்தில், திவ்யாவை வெற்றியாளராக அறிவித்து நிகழ்ச்சியை முடித்துக்கொண்டார்கள். 

நிச்சயம், திவ்யாவை விட விக்ரம், சபரி, அரோரா இவர்களில் யாராவது ஒருத்தர் வென்றிருந்தால் அது பொருத்தமாகவும், சரியானதாகவும், தகுதியானதாகவும் இருந்திருக்கும் என்பது நம் கருத்து. ஆனால், கோப்பையெல்லாம் ஒரு நாள் கூத்து. அதை வென்றவர்களை விடவும் நம் மனதில் யார் இடம் பிடித்திருக்கிறார்கள், அவர்கள் எப்படி தங்களைத் தொடர்ந்து கொண்டு செலுத்தப் போகிறார்கள் என்பதுதான் முக்கியமானது. ஓவியா, ஹரீஷ், கவின், சாண்டி போன்று கோப்பையைத் தவறவிட்ட நபர்கள்தான் இன்று பெரிய அளவில் ஜொலித்துக் கொண்டிருக்கிறார்கள். 

106 நாட்களாக நம்மோடு, இக்கட்டுரைத் தொடர் குறித்தும், பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்தும் கருத்துகளைப் பகிர்ந்துகொண்டு, உடன்பயணித்த வாசக நண்பர்களுக்கு நம் நன்றியும், அன்பும்!

மீண்டும் சந்திப்போம்!