'அக்கா, இங்க பாருங்களேன் அக்கா, அக்கா! திவ்யாவும், ரம்யாவும் காபியைக் குடித்துக் கொள்வது, வேண்டியவர்களுக்குக் கொடுப்பது என்று குரூப்பாக செய்துகொள்கிறார்கள் அக்கா. நமக்கு ஒன்றும் தருவதில்லை’ என்று சாண்ட்ராவிடம் வந்து கம்ப்ளைண்ட் செய்து கொண்டிருந்தான் வாட்டர்மெலன்! பொம்பளைங்க பின்னால் சுற்ற வேண்டியது, அல்லது சோற்றுக்கு அடித்துக்கொள்வது, இதை விட்டால் இவனுக்கு வேறு ஒன்றும் தெரியாது. இன்னும் இரண்டு நாட்களில் மொத்த ஆட்டமுமே முடியப்போகிற கடைசி வாரத்தில் வந்தும் இவன் இந்த சோற்றுப் பிரச்சினையை விடுவதாக இல்லை. அதற்கு சாண்ட்ரா எதுவும் ரியாக்ட் செய்யாமல் அமைதியாக அமர்ந்திருக்க, பக்கத்திலிருந்த பிரஜின், ’இப்படி எதையாவது ஏற்றிவிட்டு ஏற்றிவிட்டுதானேய்யா, எங்களை இந்த நிலைமைக்குக் கொண்டு வந்திருக்கீங்க, இன்னுமாய்யா?’ என்பது போல அவரைப் பார்த்தார்.
அடுத்து எல்லோரும் வேட்டி, சேலையில் தயாராகி, லானில் பொங்கல் வைக்க ஆரம்பித்தனர். ஸ்பாண்டேனியஸாக ஒரு பொங்கல் பாடலை வினோத் பாடியது நன்றாக இருந்தது. பால் பொங்கியது. பொங்கலோ பொங்கல்!! என எல்லோரும் வாழ்த்துகளைப் பகிர்ந்துகொண்டு ஆளாளுக்கு ஒரு கைப்பிடி அரிசியைப் போட்டு பொங்கல் வைத்து முடித்தார்கள். அனைவருக்கும் விருந்து அனுப்பப்பட்டிருந்தது. வட்டமாக அமர்ந்து சாப்பிட்டார்கள்.
அடுத்து, வினோத் ஏதோ கேலி செய்ததற்கு ம்யூட் போடுமளவுக்கு ஏதோ திட்டிக் கொண்டிருந்தான் வாட்டர்மெலன். பிரவீன் கேலி செய்தமைக்கும் அப்படியேதான் தகாத வார்த்தைகளில் பேசிக்கொண்டிருந்தான். இந்த சீசனில் ரெட் கார்டு கொடுத்துத் துரத்தப்பட்டிருக்க வேண்டிய மூன்றாவது நபர் இவன்தான். எப்படியோ எஸ்கேப்பாகிவிட்டான்.
அடுத்து, பொங்கல் விளையாட்டுகளாக, மாட்டுப்பொங்கல் தீமில் கோலப்போட்டி, கயிறு இழுக்கும் போட்டிகளை நடத்தினார்கள். சில நாட்டுப்புறக் கலைஞர்கள் உள்ளே வந்து ஆடிப்பாடிவிட்டுச் சென்றனர்.
நேற்று இந்த சீசனின் நிகழ்வுகளை நட்பு தீமில் தொகுத்துக் காண்பித்தது போல, நகைச்சுவை தீமில் இன்றொரு தொகுப்பு காண்பிக்கப்பட்டது. இதிலேயே இன்றைய நேரம் ஓடிவிட்டது. அது முடிந்ததும், அனைவரும், இந்த வீட்டில் தன்னை சிரிக்க வைத்த ஒரு நபரைக் குறிப்பிட்டுச் சொன்னார்கள். பெரும்பாலும், வினோத்தைச் சொன்னார்கள். ஓரிரு ஓட்டுகள் சபரிக்கும், அரோராவுக்கும் கூட கிடைத்தன.
கடைசியில் திவ்யா வந்து, வினோத்தைச் சொல்லிவிட்டு, அதற்கு வாட்டர்மெலனும் ஒரு காரணம்தான் என்று இழுத்துச் சொன்னதுதான் தாமதம், வாட்டர்மெலன் திவ்யா பின்னாலேயே போனான். ‘அதற்காகவெல்லாம் என்னோடு பேச வராதே’ என்று சொல்லிவிட்டு விலகிப்போனார் திவ்யா. அப்போதும் அவர் பின்னாலேயே போனான். ‘ச்சீ, தூரப்போ’ என்று விரட்டிய பிறகும்கூட ஒருமனிதனுக்கு முள்முனையளவு மானமாவது இருக்காதா என்று நமக்கே ஒரு வியப்பு ஏற்பட்டதுதான் மிச்சம்!