Divya Ganesh @jiohotstar
BiggBoss 9

விக்ரமை அழவைத்த கனி, சுபிக்‌ஷா! #Biggboss Day 100

ஓகே, அது என் நியாயமான எதிர்பார்ப்பாக இருந்தாலும், அந்த மாதிரியெல்லாம் உனக்குப் பேச வராது என்பதை நான் புரிந்துகொள்கிறேன்.

ஆதி தாமிரா

இன்றைக்கு முதல்  நேரப்போக்கு டாஸ்க்காக, இறூதிப் போட்டியாளர்கள் நான்கு பேரையும் ’கோப்பையை வென்றால் மேடையில் என்ன பேசுவீர்கள்?’ என்று கற்பனை செய்து பேசச் சொன்னார் பிக்பாஸ்! நான்கு பேரும் வந்து சுமாராகப் பேசிவிட்டுப் போனார்கள்.

அதன் பிறகு, ஆதிரையும், எஃப்ஜேவும் உள்ளே வந்தார்கள். இப்போது எதற்காக இத்தனை பேரையும் உள்ளே திரட்டிக் கொண்டிருக்கிறார்கள் என்று நமக்குப் புரியவில்லை.

வினோத்துக்குக் கிடைத்ததைப் போலவே, அரோராவும் தனக்குக் கிடைத்த திருட்டுப் பேனாவை வைத்து ஏதோ ஒரு அட்டையில், துஷாருக்காக ஒரு கடிதம் எழுதியிருப்பார் போலிருக்கிறது. துஷாரை பெட்ரூமில் கூட்டிக் கொண்டுபோய் உட்கார வைத்துக்கொண்டு அதை எடுத்துக் கொடுத்தார். மஜ்னுவுக்குக் கடிதம் எழுதிய லைலாவின் மனநிலையில் இருந்தார் அரோரா. ஆனால், துஷார் அதை வாங்கிப் பார்த்துவிட்டு முகத்தில் நவரசங்களையும் காண்பிக்க முயற்சித்து, அப்படி ஒன்றும் வெளியாகவில்லை என்பதால், ’சரி, அப்புறம்?’ என்பது போல அரோராவைப் பார்த்தார். கடுப்பான அரோரா,

‘என்னடா இது ரியாக்‌ஷன்?’ என்றதும்,

‘எதுவானாலும் வெளியே போய்ப் பேசிக் கொள்ளலாம்’ என்றார் துஷார்.

‘அதை யாரு வேண்டாம் என்று சொன்னது? அதைப் பிறகு பேசிக் கொள்ளலாம்! ஆனால், இங்கே ஒருத்தி உன்னை எவ்வளவு தூரம் மிஸ் பண்ணியிருக்கிறேன் என்று மனமுருகி ஒரு கடிதம் கொடுத்தால், அதற்கு இதுதானா உனது ரியாக்‌ஷன்?’

என்று கேட்டதும், ‘இப்போது, இதற்கு நான் என்ன சொல்ல வேண்டும்?’

‘மிகவும் சிம்பிளாக, ஐ டூ மிஸ் யூ என்று கூட சொல்லக்கூடாதா? இதைக்கூடவா சொல்லித்தர முடியும்?’ என்றதும், துஷார் வழிந்தபடி,

Tushaar,Aurora Sinclair and Vikkals Vikram

’அதையெல்லாம் சொல்லித்தான் தெரிய வேண்டுமா?’ என்று சமாளித்தாலும், சில விஷயங்களைச் சொல்லித்தான் ஆக வேண்டும். மனதுக்குள் ஆயிரம் விஷயங்கள் ஓடிக் கொண்டிருக்கலாம்… இது என்ன மாதிரியான உணர்வு? காதலா? காதலாக இருந்தாலும் அதை வெளியே போய் தொடர்வோமா? மாட்டோமா? நம் இருவருக்கும் ஒத்துப் போகுமா? போகாதா? காதல் என்றாலும் அதை இங்கே எப்படி வெளிப்படுத்துவது? அப்படியே வெளியே போனபிறகும், எப்படி வெளிப்படுத்தினால் அவன்/அவளுக்குப் பிடிக்கும்? இப்படி என்னென்னவோ சிந்தனைகள் ஓடிக் கொண்டிருக்கலாம். ஆனால், அந்தந்த இடம், பொருள், ஏவலைப் பொறுத்து சொல்லப்படும் கருத்துகளுக்கு, கேட்கப்படும் கேள்விகளுக்குப் பதில் சொல்லித்தானே ஆக வேண்டும்? அதற்குப் பேச்சுத்திறன் வேண்டும். அதுதான் இங்கே நம்மில் பலருக்கும் பிரச்சினையாக இருக்கிறது. துஷாருக்கு கொஞ்சம் அதிகமாகவே இருக்கிறது. மாறாக, அந்த முதிர்ச்சி அரோராவுக்கு இருந்ததால்,

‘ஓகே, அது என் நியாயமான எதிர்பார்ப்பாக இருந்தாலும், அந்த மாதிரியெல்லாம் உனக்குப் பேச வராது என்பதை நான் புரிந்துகொள்கிறேன். போகட்டும்!’

என்று தன்னைத்தானே சமாதானப் படுத்திக்கொண்டு, அவரை அணைக்க முற்பட்ட போது, ‘இப்போது என்னை முட்டாள் என்று அர்த்தம் வரும்படி ஏதாவது சொல்லிவிட்டாயா? இதற்கு நான் கோபப்பட வேண்டுமா? அல்லது அப்படி நீ ஏதும் சொல்லவில்லையா?’ என்ற குழப்பம் துஷாரின் முகத்தில் தெரிந்தது. இந்த உரையாடல் முழுதும் புரிந்துகொள்ளப்படாத ஒரு காதல் கவிதை மாதிரி இருந்தது நமக்கு.

அடுத்து கனியும், சுபியும் உள்ளே வந்தார்கள். கனியுடைய வருகையை ரொம்ப நாட்களாகவே விக்ரமும், சபரியும் எதிர்பார்த்துக் கொண்டிருந்தது நமக்குத் தெரியும். உள்ளே வந்த அவர்களும் மிக உற்சாகமாக எல்லா போட்டியாளர்களிடமும் போய்க் கூடிக் குலாவி, கட்டியணைத்து எல்லா நலவிசாரணைகளையும் முடித்துக் கொண்டு, கடைசியாக விக்ரமிடம் வந்து கை கொடுத்தபடி, ’ஹாய், நன்றாக இருக்கிறீர்களா?’ என்று முகம் கூட கொடுக்காமல் சிம்பிளாகப் பேசி முடித்துக் கொண்டார்கள். நமக்கே கொஞ்சம் வியப்பாகத்தான் இருந்தது. விக்ரமும், மண்டை குழம்பி, மனதுடைந்து போய் பெட்ரூமில் போய் அமர்ந்துவிட்டார்.

Vikkals Vikram

சபரி, அரோரா இருவரும், கனியிடம், ‘விக்ரம் தவறே செய்திருந்தாலும், இப்படி நீங்கள் செய்யக்கூடாது, இது நியாயமில்லை. உங்களுக்காக அவர் எவ்வளவு ஆவலாகக் காத்திருந்தார் தெரியுமா?’ என்று சொன்ன பிறகுதான், அது பிராங்க் என்பதை வெளிப்படுத்தினார் கனி. ‘அடப்பாவிகளா! நான் அழுதே விட்டேன்’ என்று சொன்ன அரோராவின் கன்னத்தைப் பிடித்து, ‘அதனால்தான் நீ தங்கம்!’ என்று கனி பாராட்டியது அழகு! ஆனால், அவர்கள் அந்த பிராங்கை இன்னும் கொஞ்சம் நீட்டித்திருந்தால், நாம் பார்க்காமல், இந்த விக்ரம் அவர்களைப் பற்றி ஏதாவது பேசி, அதை அவர்கள் பார்த்துவிட்டு வந்திருக்கிறார்களோ, இந்த வியானா நினைத்ததை போலவே விக்ரம் ஏதோ தவறுதான் செய்திருக்கிறார் போலிருக்கிறது என்று நமக்கே கூட சந்தேகம் தோன்றியிருக்கும். அதன் பின், விக்ரமிடம் பேசி சமாதானம் செய்தார்கள்.

அடுத்து, சுபி, வியானாவைச் சுத்துப் போட்டுப் பிடித்து, அவர் சொன்ன ஒரு கருத்துக்கு விளக்கம் கேட்டபோதுதான் ஒரு விஷயம் நமக்குத் தெளிவானது. அதாவது, வியானா வெளியே போன பிறகு எந்த எபிஸோடையுமே பார்க்கவில்லை, சமூக வலைத்தளங்களில் வந்த மீம்ஸைத்தான் பார்த்துவிட்டு வந்திருக்கிறார் என்பதுதான் அது! மீம்ஸைப் பார்த்துவிட்டு வந்துதான் இவ்வளவு அலப்பறைகளைச் செய்துவிட்டிருக்கிறது இந்த அரைவேக்காடு! லேசாக அவரது மூக்கை உடைத்துவிட்டார் சுபி!

அடுத்தொரு ஸ்பான்ஸர் டாஸ்க் நடந்தது. அதன்பின், நூறு நாள் கொண்டாட்டமாக உள்ளே கேக் அனுப்பப்பட்டது!