பெண்கள் இருக்கும் படுக்கையறையில், சட்டை கூட இல்லாமல் படுத்துக்கொண்டு, ’வியானா குட்டி, திவ்யா குட்டி’ என்று தனது வழக்கமான அநாகரீங்களை அரங்கேற்றிக் கொண்டிருந்தான் தர்பூசணி. திவ்யா கடுப்பாகி, ’இந்தக் குட்டிக் கிட்டி என்றெல்லாம் கூப்பிடாதே, ஒழுங்காக பெயரைச் சொல்லிக் கூப்பிடு’ என்று சொன்னார். ஆனால், அதை இப்போது சொல்லி பிரயோஜனமில்லை, இதையெல்லாம் முன்பே செய்திருக்க வேண்டும். அந்தாள், இந்தப் பெண்களிடம் எத்தனை தடவைகள் மூக்குடை பட்டாலும், மானமில்லாமல் அவர்களிடமே போய் சீண்டி விளையாடுவதில் சுகம் கண்டுகொண்டிருக்கிறான்.
திவ்யா திட்டிவிட்ட பிறகும், திவாகர், ’திவ்யா குட்டிதான் எனக்குப் பிடிக்கும். ஏன் திவ்யா, நான் உன்னை விரட்டி விரட்டிக் காதலித்தால் என்ன செய்வாய்?’ என்பது போல ஏதோ கேட்டதற்கு வியானா, ’விரட்டி விரட்டிதான் அடிக்கணும் உன்னை’ என்பது போல பதிலளித்தார். திவாகர் செய்வதெல்லாம் ஈவ் டீஸிங்கில் வருமா என்று விசாரிக்க வேண்டும்.
’பெண்கள் எல்லாரும் இந்த அறையில் படுக்கப் போகிறோம், இன்று ஒரு நாள் மட்டும் இன்னொரு அறையில் போய் படுங்கள்’ என்று திவ்யா முதலில் கேட்டபோது சரி என்று மண்டையை ஆட்டிய தர்பூசணி, என்ன நினைத்தானோ தெரியவில்லை, கொஞ்ச நேரம் கழித்து, போக முடியாது என்று சொல்லிவிட்டு பிடிவாதமாக அங்கேயே படுத்துவிட்டான். திவ்யா கதறிப்பார்த்தும் போகவில்லை. அவனது குறட்டை தாங்காமல், அவனை அங்கேயே படு என்று விக்ரம் ஒரு புளோவில் சொன்னதைப் பிடித்துக்கொண்டு திவ்யா, விக்ரமிடமும் கூட சண்டைக்குப் போனார். ஆனாலும், பயனில்லை! அந்தப் பெண்களுக்கு சப்போர்ட்டாக, பிரவீன் வந்து திவாகரை, ‘வெக்கங்கெட்டவனே, மானங்கெட்டவனே’ என்று கேட்க, பதிலுக்கு அவனும் கொந்தளிக்க ஒரு சிறிய சண்டையாகிப்போனது.
மறுநாள் காலையில், பிரஜினும், கலையரசனும் உள்ளே வந்தார்கள். பிரஜினும், விக்ரமும் கொஞ்ச நேரம் அந்தக்கார் டாஸ்க்கைப் பற்றிப் பேசினார்கள். அடுத்து, அவர்களைத் தொடர்ந்து அமித்தும், துஷாரும் உள்ளே வந்தார்கள். துஷார் ரொம்பச் சீக்கிரமாகவே இந்தப் போட்டியிலிருந்து வெளியேறிப் போய்விட்டாலும், அரோராவின் புண்ணியத்தில் அவரது பெயர் ரொம்ப நாட்களுக்கு வீட்டுக்குள் பேசப்பட்டுக் கொண்டிருந்தது.
துஷார், உள்ளே வந்ததும், அனைவரையும் கட்டியணைத்து ஹாய் சொல்லி முடித்துவிட்டு, அரோராவுக்குக் கடைசியாக வருவதற்குள் கேமரா அரோராவையே காட்டிக் கொண்டிருந்தது. ஒரு சின்ன உணர்ச்சி வசத்தில்தான் இருந்தார் அரோரா. துஷார் தொட்டதுமே, நீண்ட காலம் பிரிந்திருந்த காதலர்களைப் போலவே கட்டியணைத்துக் கொண்டார்கள். அதில் நிஜமான ஒரு ஈடுபாடு தெரிந்தது. எல்லோரும், அவர்களை முன்னிறுத்தி கேலி, கிண்டல் என பாட்டுப் பாடி கலாய்த்துக் கொண்டிருந்தனர்.
பின்னர், உள்ளே போனதும் அரோரா, துஷாருக்காக எழுதிய பாடலைப் பாடிக்காண்பித்தார். நன்றாகத்தான் இருந்தது. அவர்கள் இருவரும் தனியே அமர்ந்து பேசிக்கொண்டிருந்த போது துஷார், ‘நான் வெளியே போனதற்கு நான்தான் முழு காரணம், நான் சரியாக விளையாடவில்லை, அதற்கும் உனக்கும் எந்த சம்பந்தமுமில்லை, அதை மனதில் வைத்துக்கொள்ளாதே’ என்று சொன்னார். துஷாருக்கு அது சரியான புரிதல், மற்றும் அவர் அதை அரோராவிடம் சொல்லி வழிகாட்டியதில் ஒரு நேர்மை, அரோராவுக்கும் ஒரு சின்ன நிம்மதி! இப்படித்தான் இருந்திருக்க வேண்டும், ஒவ்வொருவரின் கடைசி வார மீள்வருகையும்!
அமித், விக்ரமிடம், பாரு, சாண்ட்ரா ஆகியோரின் திருவிளையாடல்களைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தார். ’மொத்த வீடுமே சாண்ட்ராவுக்கு எதிராக இருந்த ஒரு தருணத்தில், அவருக்கு ஆறுதலாக பேசிக்கொண்டிருந்தேன் அல்லவா விக்ரம்? ஆனால், அவர் என்னை நானாக வலிய வந்து பேசினேன் என்று என் மீதே பழி போட்டதையெல்லாம் பார்க்கவே அதிர்ச்சியாக இருந்தது’ என்று வியந்து கொண்டிருந்தார்.
அடுத்து, அனைவரும் ஒரு துண்டுச்சீட்டை எடுத்து அதில் கேட்கப்பட்டிருக்கும் கேள்விக்குப் பதில் சொல்ல வேண்டும் என்றொரு டாஸ்க்கை விளையாடினார்கள். மறக்க முடியாத உணவு, பெருமையாக உணர்ந்த தருணம், நம் தவறுகளோடு நம்மை ஏற்றுக்கொண்ட நபர், கற்றுக்கொண்ட குணம் என பல்வேறு கேள்விகளுக்கும் பலரும் பதில் சொல்லி விளையாடிக் கொண்டிருந்தார்கள்.
இது கடைசி வாரம், வார இறுதியில் ஃபினாலே நடக்கவிருக்கிறது. நாம் பேசுவதற்கும், கருத்து சொல்வதற்கும் இந்த வாரம் பெரிதாக ஒன்றுமிருக்காது, இருப்பினும் பார்க்கலாம்!