Vj Paaru and Sandra Amy @jiohotstar
BiggBoss 9

ப்ரேக்கப் முடிந்து பேட்ச் அப் ஆன ஜோடி! #Biggboss Day 87

ஆட்டம் முடிந்ததும், கமரு, பாருவிடம் ஸ்போர்டிவாக ‘குட் கேம்’ என்று பாராட்ட, இருவரும் சிரித்தபடி கைகொடுத்துக் கொண்டனர். இதைப் பார்த்துக்கொண்டிருந்த விக்ரம், ‘என்ன பாரு, கவனமாக இருந்துகொள்’ என்று எச்சரித்தார்.

ஆதி தாமிரா

வழக்கம்போல காலை நீட்டி உட்கார்ந்து கொண்டு, ஊர்க்கிழவிகள் புறணி பேசுவது போல, பாருவும், சாண்ட்ராவும் கனியைப் பற்றிப் பேசிக்  கொண்டிருந்தனர். இப்படிப் புறணி பேசாமல் பாருவால் ஒரு நாளைக்கூட கழிக்க முடியாது. போலவே, இதற்காக அவருக்கு சரி ஜோடியாக ஒரு ஆள் எப்போதும் கிடைத்துக் கொண்டேதான் இருக்கிறார்கள்.

’கனி போன பிறகு சபரி, விக்ரம் உள்ளிட்ட அனைவரும் நம்மிடம் நன்றாகப் பேசுகிறார்கள். கவனித்தாயா பாரு?’

’ஆமாம், அவர்கள் இவ்வளவு நாளாக நம்மோடு பேசாமலிருந்ததற்குக் காரணமே கனிதான். அவர்தான் எல்லோரையும் பிடித்து வைத்துக் கொண்டிருந்திருக்கிறார்’

‘ஆமாம், பாரு! என்ன அநியாயம்!’

’அது மட்டுமல்ல சாண்ட்ரா, இந்த அரோரா இருக்கிறாளே அவள் இன்னொரு குட்டி கனி. பேசுவது மிக இனிமையாக இருக்கும், ஆனால், உள்ளுக்குள் பெரிய வன்மமும், வில்லத்தனமும் எப்போதும் இருந்து கொண்டே இருக்கும்.’

கனியிடமும் அரோராவிடமும் வில்லத்தனமும், வன்மமும் இருக்கிறதாம். இவர்களிடம் பண்பும், கண்ணியமும் கொட்டிக் கிடக்கிறதாம்! முடியல!

உள்ளே, இன்னும் மேக்கப் போடாமிருந்த அரோரா, ‘தம்பிகளா, அக்கா மேக்கப் போடாமலிருக்கிறேன். அதனால், அடையாளம் தெரியாமல் ஓட்டை மாற்றிக்குத்தி அக்காவை வெளியே தள்ளிவிடப்போகிறீர்கள், கவனம்’ என்று கேமராவைப் பார்த்து சுயபகடி செய்து கொண்டிருந்தது ரசனை.

Ticket to finale task

அடுத்து, ஃபினாலே டிக்கெட்டுக்கான நான்காவது டாஸ்க் நடந்தது. அனைவரும் ஒரு கடிகாரச் சுற்று போல வட்டமாக, ஒரு சிறிய மேடையில் நிற்க வேண்டும். சுற்றி வரும் கடிகாரக் கரத்தில், கால் படாமல் தாவிக்கொள்ள வேண்டும். இதை ஒருவராவது ஸ்ட்ரேடஜிக்காக விளையாடியதைப் போல தெரியவில்லை. முதலில் விக்ரம் வெளியேற, ’அவர் கடிகாரக் கரத்தை ஆட்டிவிட்டதால்தான் நானும் அவுட் ஆகிவிட்டேன்’ என திவ்யா அவர் அவுட் ஆனதற்கு, விக்ரமின் மேல் பழியைப் போட்டு அழுது கொண்டிருந்தார்.

அடுத்து ஒவ்வொருவராக வெளியேற, இறுதியில் சபரி இந்தப் போட்டியில் வென்றார். ஆட்டம் முடிந்ததும், கமரு, பாருவிடம் ஸ்போர்டிவாக ‘குட் கேம்’ என்று பாராட்ட, இருவரும் சிரித்தபடி கைகொடுத்துக் கொண்டனர். இதைப் பார்த்துக்கொண்டிருந்த விக்ரம், ‘என்ன பாரு, கவனமாக இருந்துகொள்’ என்று எச்சரித்தார்.

இந்த விக்ரமுக்கு என்னவாயிற்று என்று தெரியவில்லை, பாருவின் புதிய பாதுகாப்பாளராக மாறியிருக்கிறார். பாரு- கமரு காதல் விஷயம் இப்படி நாறிப்போனதில், ஒரு பெண்ணாக பாருவுக்கு இனிமேலாவது எந்தச் சரிவும் வந்துவிடக்கூடாது என்று தன்னிச்சையாக களத்தில் இறங்கிருப்பது போலத் தெரிகிறது. இதை யாருக்கு வேண்டுமானாலும் செய்யலாம், ஆனால், பாருவுக்கு செய்வது என்பது தேவையில்லாத ஆணியைப் பிடுங்குவது போலத்தான் அமையும். அதுவும் இந்த பாருதான், விக்ரம் மீது கடந்த பல வாரங்களாக வன்மத்தோடு சுற்றிக் கொண்டிருந்த நபர் என்பது குறிப்பிடத்தக்கது. விக்ரமுக்கு இது வேண்டாத வேலை!

Ticket to finale Points table

அடுத்து, ஐந்தாவது டாஸ்க் ஆரம்பித்தது. முதல் டாஸ்க்கைப் போலவே ஒரு மேடை மீது நின்று கொண்டு, தலைக்கு மேல் இருக்கும் பலகையை பிடித்துக் கொண்டிருக்க வேண்டும். நழுவ விடுபவர்கள் தோற்பார்கள். இதுவும், உடல் வலிமையை, ஸ்டாமினாவை சோதிக்கும் போட்டிதான். முதல் போட்டியில், கடுமையாக டஃப் கொடுத்த அரோரா, முதல் ஆளாக இதில் வெளியேறியது ஆச்சரியம். ஒருவேளை முதல் டாஸ்க்கில் ஏற்பட்ட வலியாகவும் இருக்கலாம். அடுத்து, ஒவ்வொருவராக வெளியேற இறுதிவரை மேடையில் நின்று வென்றது பாரு என்பது இன்னொரு ஆச்சரியம்.

இந்த ஆட்டத்தில், இன்னொரு கூத்தும் நடந்தது. ஆட்டத்தில் இருந்து வெளியேறிய ஒவ்வொருவரும் ஸ்மைலி பந்தைக் கொண்டு மற்றவர்கள் மீது எறிந்து, அவர்களை இடைஞ்சல் செய்யலாம் என்று பிக்பாஸ் சொல்லியிருந்தார். அதனால், ஆட்டத்தில் இருந்து வெளியே வந்தவர்கள் நாக்குத்தள்ள, ஸ்மைலி பந்தைக் கொண்டு மற்றவர்கள் மீது எறிந்து கொண்டிருந்தனர். ஆரம்பத்திலேயே சபரிக்குப் படக்கூடாத இடத்தில் பந்து பட்டுவிட்டதால், அனைவரும் முதுகை காட்டி திரும்பி நின்று கொள்ளுங்கள் என்று சொன்னார்கள். ஆனாலும், இந்தக் காரணத்தாலேயே பந்தை சரியாக எறியமாட்டார்கள், பந்து பட்டால் விக்டிம் கார்டும் கிடைக்கும் என்ற ரகசியத் திட்டத்தோடு, பாரு, திவ்யா, சாண்ட்ரா ஆகியோர் திரும்பாமல், வேண்டுமென்றே முன்னோக்கி நின்று கொண்டிருந்தார்கள். திவ்யா, கூடுதலாக ‘முகத்தில் மட்டும் எறியாதீர்கள்’ என்று கூடுதல் விதியை வேறு போட்டு வெறுப்பேற்றிக் கொண்டிருந்தார். முடிந்தவரை, எல்லோரும் பாருவை குறி வைத்து எறிந்து, சற்று கோபத்தைத் தணித்துக் கொண்டார்கள். திவ்யாவின் வாய்க்குப் பயந்து அவர் மீது யாரும் பந்தை எறிவதில் ஆர்வம் காண்பிக்கவில்லை! அப்படியும் சின்னதாக முயற்சித்ததிலேயே திவ்யாவுக்கும், விக்ரமுக்கும் முட்டிக்கொண்டது.

Ticket to Finale task 5

அப்புறம்தான், ஒரு முக்கியமான நிகழ்ச்சியே நடந்தது. பத்து வாரங்களாக நடந்த காதல் கன்டென்ட்டை கடந்த வாரத்தில் நாறடித்து, ஒருவரை ஒருவர் தகாத வார்த்தைகள் பேசி, சண்டை போட்டு, டொமஸ்டிக் வயலன்ஸ் வரை இழுத்துக்கொண்டு போய் முச்சந்தியில் நிறுத்திவைத்த பாருவும், கமருவும் தனியே ஒரு விளையாட்டை ஆடிக் கொண்டிருந்தனர். ஒருவர் மீது ஒருவர் மாவை எறிந்து, ஓடிப்பிடித்து ஆடும் ஹோலி ஆட்டம்தான் அது. பார்க்கிற நமக்கே, ‘இதெல்லாம் என்னது?’ என்று மண்டை குழம்பிக் கொண்டிருந்தது. அதைப் பார்த்த விக்ரம், சும்மா இருப்பாரா? பாருவைக் கூட்டிப் போய், ‘என்னது இது?’ என்று கேட்டார். அதற்குப் பாரு, ‘என்னோட மொத்தக் கோபத்தையும் அவன் மீது மாவைக் கொண்டு எறிந்து பழி வாங்கிக் கொண்டிருந்தேன், எப்படி என் பழிக்குப்பழி?’ என்று பதில் சொல்லி, விக்ரமைக் கிறுக்குப் பிடிக்க வைத்தார்.

விக்ரமாவது நடந்ததைப் பார்க்கவில்லை, நம்புவதா வேண்டாமா என்று மையமாகத் தலையசைத்தார். நாம் நடந்ததைப் பார்த்தோமல்லவா... கிட்டத்தட்ட ஊடல் போல செல்ல விளையாட்டு விளையாடிக்கொண்டிருந்துவிட்டு, 'நீ வேற.. கோவமா பண்ணினேன்' என்று விக்ரமிடம் சொன்னதைக் கேட்ட நமக்குத்தான் கிறுகிறுவென்றிருந்தது!