விஜய் சேதுபதி வந்ததும் முதலில் வெள்ளிக்கிழமை நிகழ்வுகளைக் காண்பித்தார். சாண்ட்ராவை நாட்டாமையாக உட்கார வைத்துக்கொண்டு பாருவும், கமருவும் பேசிக் கொண்டிருந்தார்கள்.
’அக்கா, நான் இவளை ஓவர் ஷேடோ செய்வதாகச் சொல்கிறார்கள். அதனால், நான் இனி தனியாகவே விளையாடிக் கொள்கிறேன்’
’இவன் என்னவோ தனியாக முடிவு செய்தது மாதிரி சொல்கிறான். ஆனால், இது நாங்கள் இரண்டு பேரும் சேர்ந்து எடுத்த மியூச்சுவலான முடிவு.’
’செட் ஆகவில்லை அக்கா, போதும், முடித்துக் கொள்கிறேன்’
’உன் மேல எனக்கு ஒரு கிரஷ் இருந்ததால், தப்பு அனைத்தையும் நான்தான் பண்ணி இருக்கிறேன்…’
’பாயிண்ட் நோட் பண்ணுங்க அக்கா. எனக்கும், அதற்கும் சம்பந்தம் இல்லாத மாதிரி சொல்லி, தியாகி மீட்டர் போடப் பார்க்கிறாள் பாருங்கள்’
’அதை, நான் சொல்லவில்லை, என் அம்மாவே அதுதான் சொல்கிறார்கள்’
’அப்படி வா வழிக்கு! உங்கள் அம்மாதான் அதைச் சொல்லி இருக்கிறார்கள். நீயாக எதையும் யோசிக்கவில்லை. அதுதானே பார்த்தேன், என்னடா சம்பந்தமே இல்லாமல் என்னென்னவோ உளறிக் கொண்டிருக்கிறாளே என்று!’
’பாருங்கக்கா, பேசவே விட மாட்டேன் என்கிறான். இப்படித்தான் அந்த பலூன் டாஸ்க்கில்..’
’சுபி மேட்டர்லயும், ஜூஸ் டாஸ்க்கிலும், இவளால் நான் பட்ட பாடு கொஞ்சம் நஞ்சம் கிடையாது. அந்த வாரத்தில் நாமினேஷனில் எனக்கு பத்து ஓட்டு போட்டுக் குத்தித் தள்ளினார்கள். அப்போது உன் வாயை வைத்துக்கொண்டு நீ சும்மா இருக்காமல், பிரச்சினையை கிளப்பிவிட்டுவிட்டாய், அதற்கு நானா காரணம் என்று சொல்லிவிட்டு ஒதுங்கி போனவள்தான் இவள் அக்கா!’
’இல்லக்கா, எனக்கு இவன் மேல் ஒரு ஃபீலிங் இருக்கிறதால்…’
’ஆமாம் அக்கா, அவளுக்கு என் மேல ஒரு ஃபீலிங் இருக்கிறதால் விட்டுக்கொடுத்து அவளோட விளையாட்டு ஸ்பாயில் ஆகிவிட்டதாக இப்போது ஒரு புதிய கதையைப் பரப்பிக்கொண்டிருக்கிறாள்’
அவர்கள் இருவரும்தான் பேசிக் கொண்டிருந்தார்களே தவிர, நாட்டாமைக்குப் பேச எந்த வாய்ப்பையும் தரவில்லை. கொட்டாவி விட்டுக் கொண்டிருந்த சாண்ட்ரா ஒரு கட்டத்தில், முடியாமல் எழுந்து போய்விட்டார். அதன் பிறகும் அவர்கள் இருவரும் பேசிக்கொண்டுதான் இருந்தார்கள்.
அடுத்து, வினோத்தையும், அமித்தையும் உட்கார வைத்துக் கொண்டு அதே விஷயத்தை புலம்பிக் கொண்டிருந்தார் கமரு. அதற்கு வினோத்,
’இன்னுமாடா இந்த நமத்துப் போன பஞ்சாயத்தையே ஓட்டிக்கொண்டிருக்கிறீர்கள்? வெளியே போனால், அவள் அவளது வேலையில் பிசியாகி விடுவாள். நீ வாய்ப்புத் தேடும் வேலையில் இறங்கி விடுவாய். இங்கே வேலை வெட்டி இல்லாமல் இருவரும் ஒரே பிரச்சினையைப் போட்டு உருட்டிக் கொண்டிருக்கிறீர்கள். நடுவில், எங்களுக்கு மண்டை காய்கிறது. விட்டுத்தொலைக்கிறாயா கொஞ்ச நேரம்?’ என்று கமருவின் வாயை அடைத்துவைத்தார்.
அப்படியும் போதாமல், கமருவைப் பிடித்து வைத்துக்கொண்டு, இரவு நேரத்தில் லானில் வைத்து முட்டிக் கொண்டிருந்தார் பாரு!
‘நாம் இரண்டு பேரும் இனிமேல் தனித்தனியாக விளையாட வேண்டும்’
’சரி’
’அதை எப்படி விளையாடுவது என்று நாம் இப்போது திட்டமிட வேண்டும். அதே நேரம், நம்முடைய ரிலேஷன்ஷிப்பை மேற்கொண்டு எப்படி எடுத்துக் கொண்டு போக வேண்டும் என்பதையும் சிந்திக்க வேண்டும்’
’அதைத்தான் வெளியே போய் பேசிக் கொள்ளலாம் என்று முடிவு செய்தாயிற்றே! இங்கே, நாம் தனித்தனியாக விளையாடலாம்! உன் வேலையை நீ பார், என் வேலையை நான் பார்க்கிறேன்!’
’ஆனால், நீ இப்போதெல்லாம் என்னிடம் ரொமான்டிக்காக மட்டும்தான் பேசுகிறாய். கேம் பற்றி எதுவுமே பேசுவதில்லை’
’அதைத்தான் நானும் சொல்கிறேன். நம்முடைய உறவையும் கொண்டு போக வேண்டும் என்பதற்காகத்தான் நான் பேசிக் கொண்டிருக்கிறேன். ஆனால், கேமைத் தனித்தனியாக விளையாட வேண்டும் என்பதற்காகத்தான் கேமைப் பற்றி உன்னிடம் பேசுவதில்லை! சரியாகத்தானே இருக்கிறது?’
கமரு சொல்வது சரிதான். ஆனால், பாருவின் வாய்தான் தனியாக விளையாடுவோம் என்று சொல்கிறதே தவிர, அவரால், கமரு போல் ஓர் அடிமை இல்லாமல் தனியாக விளையாட முடியாது என்பதுதான் உண்மை! அதனால்தான் அதைத் திட்டமிட வேண்டும் என்று மீண்டும் மீண்டும் அதைப் பிடித்துத் தொங்கிக் கொண்டிருக்கிறார்.
’ஆனால், மற்றவர்களிடம் கேமைப் பற்றி நிறைய பேசுகிறாய், என்னிடம் பேச மாட்டாயா?’
’உனக்குப் பைத்தியமா? நாம் ரெண்டு பேரும் தனித்தனியாக கேம் விளையாட வேண்டும் என்று முடிவு செய்தாயிற்று. பிறகு ஏன் என்னிடம் கேம் பற்றிப் பேசுவதில்லை என்று கேட்கிறாய்? இப்போது உனக்கு என்ன வேண்டும்? மற்றவர்கள் பற்றி உனக்குப் புறணி பேச வேண்டும், அதுதானே? அதை என்னால் செய்ய முடியாது!’
என்று சரியாக பாயிண்டுக்கு வந்து நின்றார் கமரு. பரவாயில்லை, கமருவின் மூளையும் சற்று வேலை செய்யத்தான் செய்கிறது. அது மட்டுமல்லாமல், திவாகரை ஆபாசக் குறியீடு விசயத்தில் போட்டுக்கொடுத்தது, கமருவை பேட் டச் விசயத்தில் பழிபோட்டது என்று பல விசயங்களையும் எடுத்துச் சொல்லி, ‘நீ ஜெயிக்க வேண்டும் என்றால் யாரை வேண்டுமானாலும், என்ன வேண்டுமானாலும் செய்துவிடுவாய் பாரு, நீ ஒரு பெரிய வில்லன்’ என்று முக்கியமான விசயத்துக்கே வந்து விட்டார். வேறு யாரென்றாலும் பாரு, சண்டையிட்டோ, உழப்பிவிட்டோ இதை எளிதாகச் சமாளித்திருப்பார். கமருவே இப்படிச் சொன்னதில் சற்றுக் குழம்பித்தான் போனார். இவ்வளவு நாளாக அத்தனை பேரையும் வைத்துச்செய்த பாருவை, கமரு ஒரு காட்டு காட்டிவிட்டார்! இதை நாமே எதிர்பார்க்கவில்லை!
எதிர்பார்த்தது போலவே இந்த வாரம் பஞ்சாயத்துகள் இல்லாததால், விஜய் சேதுபதி வந்ததும், ’உள்ளே இருக்கும் போட்டியாளர்களுக்குப் பதிலாக அவர்களைப் பார்க்க வந்த எந்த உறவினர்கள் உள்ளே வந்திருக்கலாம்?’ என்று ஒரு நேரப்போக்குக் கேள்வியை கேட்டார். கொஞ்ச நேரம் ஓடியது!
இரண்டாவது கேள்வியாக, ’உறவினர்களின் அறிவுரையைக் கேட்ட பிறகு யாரிடம் உடனடியாக ஒரு பெரிய மாற்றம் தெரிகிறது?’ என்று கேட்டார். அதில் கொஞ்ச நேரம் ஓடியது! இந்த ஆட்டத்தில், நேற்று இரவு பாருவுக்கும், கமருக்கும் நடந்த விவாதத்தைக் கமரு பொதுவில் போட்டுக் கொடுத்து விட்டார்! அதற்குப் பதில் சொல்கிறேன் என்று எழுந்த பாரு, கமருவை முடிந்தவரை டேமேஜ் செய்தார். ஆனால், அவர் ’வேலை செய்யும் லட்சணத்தை’ வைத்து மடக்கி, முடிந்தவரை பாருவை ஊமைக்குத்தாகக் குத்தி உட்கார வைத்தார் விஜய் சேதுபதி!
அடுத்து, எவிக்சன்! இந்த வாரமும் டபுள் எவிக்சன் போலிருக்கிறது. இன்று, முதல் ஆளாக அமித்தை வெளியே துரத்திவிட்டார்கள்! அடுத்து யாரென்பதை நாளை பார்ப்போம்!