Vj Paaru and her Mom @jiohotstar
BiggBoss 9

அனிதாவின் கருத்துகள் விக்ரமின் காதில் ஏறியதா? #Biggboss Day 82

அரோராவின் ஃபிரண்டு ரியா என்று ஒருவர் வந்தாரல்லவா? அவர் பெரிய லார்ட் லபக்கு தாஸ் மாதிரி என்னிடம் வந்து, நீ அப்படி நீ இப்படி என்று சொல்கிறாள் அம்மா! எவ்வளவு மோசம் பாருங்கள்

ஆதி தாமிரா

பாருவும், அவரது அம்மாவும் வெளியில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள். பாருவின் அம்மா பொதுவாக ஒன்றைச் சொல்ல, பாரு அதற்குச் சம்பந்தமில்லாமல், கமரு விசயத்தைப் பற்றியே பேசிக்கொண்டிருந்தார்.

‘சித்தி, பெரியம்மா எல்லோரும் நீ சிறப்பாக விளையாடுவதாக சொல்லச் சொன்னார்கள். எந்த நேரமும் கேம், கேம் என்று நீ சிந்தித்து விளையாடுவது நன்றாக இருக்கிறது, அதே மாதிரி தொடர்ந்து விளையாடச் சொன்னார்கள்’

‘ஆமாம்மா, நாம் வேறு எதுவாக இருந்தாலும் வெளியில போய் பேசிக்கொள்ளலாம். இங்கே தனித்தனியாக விளையாண்டால்தான் நன்றாக இருக்கும். இல்லம்மா?!’

’எல்லாருடனும் சேர்ந்து விளையாட வேண்டும், அதே நேரம் மற்றவர்கள் உன்னை இன்ஃப்ளூயன்ஸ் பண்ணாமலும் பார்த்துக்கொள்ள வேண்டும்’

’தனித்தனியாக விளையாடுவதென்றால் எப்படி, பக்கத்துல பக்கத்துல உட்காராமல் விளையாட வேண்டுமா, பேசாமல் இருக்க வேண்டுமா என்றெல்லாம் கேட்டான். அதெல்லாம் எனக்கு தெரியாது, ஆனால், நாம இன்டிவிஜுவலா விளையாட வேண்டும் என்று நான் ஸ்ட்ரிக்டாக சொல்லிவிட்டேன் அம்மா’

‘சண்டை போடும் நேரத்துல போட்டாலும், மற்ற நேரங்களில் எல்லோரிடமும் அனுசரித்துப் போக வேண்டும் பாரு’

‘சரியாக சொல்கிறீர்கள் அம்மா, நாங்களும் அப்படித்தான் இருக்கிறோம். இரண்டு பேரும் சண்டை போட்டாலும், ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து, அனுசரித்துப் போகிறோம்’

வேறு வழியில்லாமல், அவரும் அதே டாபிக்குக்கு வந்தார்.

‘அது பரவாயில்லை, ஆணுக்கும், பெண்ணுக்கும் இடையே ஏற்படும் ஈர்ப்பு என்பது இயற்கையானது. அதில் எந்தத் தவறுமில்லை. ஆனால், அதை வெளியே வைத்துக்கொள்ள வேண்டும், இங்கல்ல’ என்று சொன்னதற்கு, பாரு ’நல்ல அம்மா!’ என்று புளகாங்கிதமடைந்தார். தொடர்ந்து,

Vikkals Vikaram

‘கனி, சபரி, விக்ரம், அரோரா, சுபி இவர்கள் எல்லோரும் எவ்வளவு இனிமையாக இருந்தாலும் இவர்களோடெல்லாம் எனக்குக் கொஞ்சமும் செட் ஆகாது. என் உள்மனசு சொல்லுகிறது, இவர்களெல்லாம் மிகவும் மோசமானவர்கள், போலியானவர்கள்’ என்று பாரு சொன்னதற்கும், வேறு வழியில்லாமல் மண்டையை ஆட்டிகொண்டிருந்தார் அம்மா.

‘அரோராவின் ஃபிரண்டு ரியா என்று ஒருவர் வந்தாரல்லவா? அவர் பெரிய லார்ட் லபக்கு தாஸ் மாதிரி என்னிடம் வந்து, நீ அப்படி நீ இப்படி என்று சொல்கிறாள் அம்மா! எவ்வளவு மோசம் பாருங்கள்!’ என்றார் பாரு. ஆனால், வம்படியாக ரியாவைக் கையைப் பிடித்துத் தனியே இழுத்துக்கொண்டு போய் கருத்து கேட்டதே இவர்தான். ஆனால், பாருவின் வாய் எப்படியெல்லாம் பேசுகிறது பாருங்கள்! தொடர்ந்து, பாருவின் அம்மாவை வெளியே அனுப்பி வைத்தார்கள். பாருவின் அம்மா நிகழ்ச்சியைப் பார்த்திருக்கிறாரா என்றே நமக்கு ஐயம் வந்துவிட்டது. மோசமானவர்கள், போலியானவர்கள் என்றெல்லாம் பாரு சொல்லும்போது கேமில் ஒருவரை ஒருவர் இப்படி எல்லாம் பேசக்கூடாது என்று அறிவுரை சொல்லாமல் அம்மாவும் தலையாட்டிக்கொண்டிருந்ததெல்லாம் கொடுமை.


அடுத்து விக்ரமின் அப்பா, அம்மா, மனைவி மூவரும் உள்ள வந்தார்கள். அனைவரும் மிகவும் இயல்பானவர்களாகத் தெரிந்தார்கள். யார் வீட்டுக்குள் வந்தாலும், இந்தப் பாருவின் குரல்தான் ’அங்கிள், ஆன்ட்டி’ என்று நகத்தால் தகறத்தைக் கீறுவது போல நம் காதில் விழுந்து இரிடேட் செய்து கொண்டிருக்கிறது. பாரு எப்படிப் பேசி ஐஸ் வைப்பாரென்று விக்ரம் உள்ளே விளையாடிக்கொண்டே சொன்னது அல்டிமேட்.


விக்ரம், மனைவி அனிதாவோடு பேசிக்கொண்டிருந்தார்.

‘ஒன்று சொல்லவா தங்கம்? வெளியே வந்ததும், உன்னை விட்டு, அந்தப்பக்கம், இந்தப்பக்கம் நகர மாட்டேன். கூடவேதான் இருப்பேன். மிஸ் யூ ஸோ மச்!’ என்றார் விக்ரம். அது நிஜமான உணர்வாகத்தான் தெரிந்தது. நாமும் அப்படித்தானே, ஒரு பத்து நாள் எங்காவது வெளியூர் போய்விட்டு வர நேர்ந்தால், இப்படித்தான் இருக்கும். ஆனால், வந்த ஒரே நாளில் அது சரியாகிவிடும் என்பது வேறு விஷயம்!

அனிதா,‘விக்கி, நீங்கள் ஏதாவது தவறு செய்யும்போது அல்லது உணர்ச்சி வசப்படும் போது அழுகிறீர்கள், அழுவது நிச்சயம் தவறில்லை. ஆனால், அது அதிகமாக இருக்கிறது. அதைக் குறைத்துக் கொள்ளுங்கள்! இங்கே, உங்களுக்கு நிறைய பேரோட நட்பு கிடைத்திருக்கிறது. அவர்கள் ஒரு மனக்கஷ்டத்தை உங்களோடு பகிரும்போது, அவர்களை ஆறுதல் படுத்த நல்ல அறிவுரைகள் சொல்கிறீர்கள். ஆனால், இது ஒரு கேம் ஷோ! நீங்கள் நல்ல எண்ணத்தோடு சொல்லக்கூடிய அறிவுரைகளைக் கூட, உங்களுக்குப் பின்னால் சந்தேகப்படுகிறார்கள். அதைப் பார்க்கும்போது அது ரொம்பக் கஷ்டமாக இருக்கிறது விக்கி. அதனால், இனி உங்களுக்காக விளையாடுங்கள்’

Housemates with Subhiksha Family

என்று சொன்னார். அவர் சொன்னதெல்லாம் சரிதான். ஆனால், அதையெல்லாம் கேட்கும் மனநிலையில்தான் விக்ரம் இல்லை. விக்ரமுக்கு, அவரது மனைவியைக் கண்கொட்டாமல் பார்த்து ரசிப்பதிலேயே நேரம் ஓடிவிட்டது. புதிதாகக் கல்யாணம் ஆனவர் போலிருக்கிறது. அனிதா சொன்னதெல்லாம் அவர் காதில் விழுந்திருக்குமா என்பதே சந்தேகம்தான்!

அடுத்து, சுபியின் குடும்பம் உள்ளே வந்தது. அவரது சகோதரர், ‘பீட் பாக்ஸை நிறுத்தித் தொலை சுபி. நன்றாகவே இல்லை, நடுவில் ஒரு விடியோ மெசேஜிலும் கூடச் சொன்னோமே, அப்படியும் நீ திருந்தவில்லையா? பாருவையும், சாண்ட்ராவையும் நம்பாதே! அவர்களோடு சேர்ந்துகொண்டுத் திரியாதே! விக்ரமோடு பழகுவது போல வினோத், கமருவோடும் பழகு!’

‘அதுதான் விக்ரமோடு பழகுவதை நிறுத்திவிட்டேனே!’

’அடிப்பாவி, அதை யாரு நிறுத்தச் சொன்னது? எல்லோரிடமும் நன்றாகப் பழகு, பேசு! இருக்கிற இடம் தெரியாமல் இருக்கிறாய்!’

என்று சரியான அறிவுரைகளைச் சொன்னார். ஆனால், சுபி அதையெல்லாம் காதில் வாங்கிக்கொண்டது போல் தெரியவில்லை! வழக்கம்போல அவருக்குள் அதையெல்லாம் போட்டுக் குழப்பிக் கொண்டிருந்தார்.

அடுத்து, ஒரு ஸ்பான்ஸர் டாஸ்க் நடந்தது. குடும்ப வாரமென்பதால், இந்த வாரம் முழுதும் வேறு எந்தப் பஞ்சாயத்தும் இல்லாமல் போய்விட்டதே என்ற குறையை நீக்கும் வகையில் இதில் பஞ்சாயத்தைக் கூட்டினார்கள். குரூப் பிரிக்கும் போது, ‘எல்லா ஏழரையையும் ஒரே குரூப்பில் போட்டுவிட்டார்கள்’ என்று திவ்யா அவரையும் சேர்த்து கமெண்ட் அடிக்க, அதெப்படி ஏழரை என்று சொல்லலாம் என்று வினோத், கொஞ்ச நேரம் கொதித்துக் கொண்டிருந்தார்.

வாரம் முழுதும் விசாரிக்க ஏழெட்டு பஞ்சாயத்துகள் இருந்தாலே வீக்கெண்டை விளக்கெண்ணெய் மாதிரி கொண்டுபோவார் விஜய் சேதுபதி. இந்த வாரம் ஒரு பஞ்சாயத்துமில்லை! வீக்கெண்டில் என்ன செய்யப்போகிறாரோ?!