Santa Claus in Biggboss Season 9 @Jiohotstar
BiggBoss 9

அன்பையும், பண்பையும் ஒளித்து வைத்திருக்கும் பாரு! #Biggboss Day 81

சுத்தமாக நல்லாவே இல்லை என்று சொல்கிறேன். நீங்கள் இரண்டு பேரும் வந்தாலே, ‘வேணாம்டா இது’ என்று டிவியை ஆஃப் செய்துவிட்டு ஓட வேண்டும் போலிருக்கிறது’ என்று குண்டைத் தூக்கிப் போட்டார்.

ஆதி தாமிரா

ரசனைக்கும், பாருவுக்கும் துளி தொடர்பும் கிடையாது என்பது நாம் அறிந்ததே. பொதுவாக ஃபிரீஸ் டாஸ்க்கின் போது நடக்கும் சுவாரசியங்கள் அனைத்தையும் கெடுப்பதற்கு பாரு தயாராகக் காத்துக் கொண்டிருந்தது இப்போதுதான் புரிகிறது. ஃப்ரீஸ் டாஸ்க் என்றாலே,  உடனே ஓடிப் போய் நிற்பவரின் தலையில் தம் கையிலிருக்கும் தண்ணீரையோ, காபியையோ, மண்ணெண்ணையையோ என எதையாவது ஊற்றுவதுதான் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார். அமித்தை பிக்பாஸ், ஃப்ரீஸ் செய்தபோது உடனடியாக ஓடிப்போய் கையில் இருந்த காபியை அவரது சட்டைக்குள் ஊற்றத் தொடங்கினார். அத்தனை பேர் தடுத்தும் கொஞ்சமும் காதில் வாங்கிக் கொள்ளவில்லை. இப்படி ஒருவர் மீது எதையாவது நாம் ஊற்றி வைத்தால் பதிலுக்கு அவர்களும் நம்மிடம் ஏதாவது செய்வார்கள், எப்படியோ லைம் லைட் நம் மீதுதான் இருக்கும் என்பது அவரது கணக்கு! அதன்படிதான், இரண்டு நாட்களாக நடந்து கொண்டிருக்கிறது.

இன்றைய எபிசோடில், முதலாவதாக பாருவின் அம்மா உள்ளே வந்தார். அவருக்கு பாருவின் நடவடிக்கைகளில் எதுவும் வருத்தம் இருந்தது போல தெரியவில்லை அல்லது வெளியே வந்த பிறகு பேசிக் கொள்ளலாம் என்ற எண்ணத்தில் அவர் காண்பித்துக் கொள்ளவில்லை. சிரித்த முகத்துடன் உற்சாகமாக இருந்தார். ’என்னாச்சும்மா? நன்றாக இருக்கிறீர்களா? உனக்கு ஓகேயா?’ என்று பாரு, வளைத்து வளைத்துக் கேள்வி கேட்ட போதும், ’நான் நன்றாகத்தான் இருக்கிறேன்’ என்று சொன்னார். அதாவது ’நான் செய்த காரியங்களால் உனக்கு என் மீது கோபம் ஒன்றும் இல்லையே?’ என்ற பாருவின் மறைமுகமான கேள்வியை அவர் புரிந்து கொண்டாரோ, அல்லது புரிந்துதான் சிரித்துக் கொண்டிருந்தாரோ நமக்குத் தெரியவில்லை.

Aurora Sinclair

இதற்காகத்தான் இந்த பாரு, ஒரு வாரமாக ’எங்க அம்மா, எங்க அம்மாதான், அம்மா என்றால் சும்மா இல்லை, எனக்கு எல்லாம் அம்மாதான், அவர்கள் என்ன நினைப்பார்களோ, அவர்களை நான் எப்படிச் சமாதானப்படுத்தப் போகிறேனோ, அதற்குக் 24 மணி நேரமெல்லாம் போதாது, இந்த வாய்ப்பை எனக்குக் கொடுத்த ஆதிரைக்கு வாழ்நாள் முழுவதும் நான் கடமைப்பட்டிருக்கிறேன்’ என்று கதறிக் கொண்டிருந்தார். அது இப்படி ஒரு புஸ்வாணமாகப் போய்விட்டது! நமக்குத் தெரிகிறதோ இல்லையோ, பாரு செய்வதனைத்தும் கண்டெண்டுக்காகத்தான் என்பது அவரது அம்மாவுக்குத் தெரியாதா, என்ன?!

‘என்னம்மா நீங்கள்? என்னைத் திட்டுவது போல அல்லது கண்டிப்பது போல ஒரு சூப்பரான சீன் கிரியேட் பண்ணியிருக்கலாமே, இப்படி ஒரு நல்ல வாய்ப்பைச் சொதப்பிவிட்டீர்களே’ என்று கூட பாருவுக்கு உள்ளுக்குள் வருத்தம் இருந்திருக்கலாம், யார் கண்டார்?!

மற்றவர்கள் எல்லோரையும் உட்கார வைத்துக்கொண்டு, பாருவின் அம்மா பேசிக்கொண்டிருந்த போது கமருதீன் வந்து காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கினார். விக்ரம், ’நான் உங்கள் பெண்ணோடு அடிக்கடி சண்டை போட்டாலும், அவரை எனக்கு ரொம்பவும் பிடிக்கும்’ என்று ஒரு டிக்ளரேஷன் கொடுத்தார். வினோத் மட்டும்தான், ‘இவரை எல்லாம் எப்படியம்மா வீட்டில் வைத்து வளர்த்துக் கொண்டு இருக்கிறீர்கள்? எங்களால் கொஞ்ச நாட்கள் கூட சமாளிக்க முடியவில்லை’ என்று காமெடியாக சொல்வது போல அவரது உள்ளத்தை வெளிப்படுத்தினார்.

அடுத்து அரோராவின் நண்பர்கள் உள்ளே வந்தார்கள். அதில் ஒருவர் முந்தைய சீசனின் போட்டியாளரான ரியா. அரோராவுக்குப் பெற்றோரோ, உற்றாரோ இல்லை என்பது போல ஒரு தோற்றத்தை அவர் உருவாக்கிக் கொண்டிருக்கிறார். அது அவருடைய பர்சனல் வாழ்க்கை மற்றும் அவரது முடிவு என்றாலும், அதைக் கேமரா முன்னால், ’எனக்கு யாரும் இல்லை’ என்பது போல அடிக்கடி பதிவு செய்வது, சிம்பதி கேமாகத்தான் பார்க்கப்படும்.

Kamurudin

ரியா, ‘நீ விளையாட ஆரம்பித்ததே ரொம்பவும் தாமதமாகத்தான், அதிலும் அடிக்கடி துஷார், துஷார் என்று என்னடி பெரிய காவியக்காதல் மாதிரி புலம்பிக் கொண்டிருக்கிறாய்?’ என்று கேட்டது சரியாக இருந்தாலும், பாரு விசயத்தில் தெளிவாக இருந்த அரோராவை, அவரால் முடிந்தவரை ரியா குழப்பிவிட்டுவிட்டார் என்றுதான் தோன்றுகிறது.

பிறகு ரியாவை தனியே தள்ளிக் கொண்டு போனார் பாரு. போட்டியாளர்கள் அனைவரும், அவர்களது வீட்டிலிருந்து வரும் நபர்களிடம் இருந்து தங்கள் விளையாட்டைப் பற்றி ஏதாவது தகவலோ, ஆலோசனையோ கிடைக்குமா என்று ஆர்வமாக இருக்கும் போது, இந்த பாரு மட்டும்தான் மற்ற எல்லாருடைய குடும்பத்தாரிடமிருந்தும், தனக்குத் தேவையான விஷயங்கள் கிடைக்குமா என்று நோண்டிப் பார்த்துக் கொண்டிருக்கிறார். அதாவது, அவருக்குத் தெரிய வேண்டிய விஷயம், அவருடைய லவ் கன்டென்ட் வெளியே எப்படித் தெரிகிறது? குறிப்பாக, நாய் குரைத்த விஷயம் எந்த அளவுக்குப் போயிருக்கிறது? என்பதுதான். இதைப் பற்றி அவரது அம்மாவிடம் நேரடியாகக் கேட்கமுடியவில்லை, சுற்றி வளைத்து கேட்டாலும் அவர் பதில் சொல்வது போலத் தெரியவில்லை!

ரியாவிடமும் பாரு அதே கேள்வியை கேட்டபோது,  

‘ஓ, அதுவா? அது நன்றாகவே இல்லை. ஒரு மாதிரியாக இருக்கிறது’

’ஒரு மாதிரியாகவா? அப்படி என்றால்?’

’அது ஒரு மாதிரியாக, வேற மாதிரியாக இருக்கு!’

’வேற மாதிரி என்றால்?’

‘அதுதான் சொல்கிறேனில்ல! அது ஒரு மாதிரி, வேற மாதிரி, இந்த மாதிரி, அந்த மாதிரி இருக்கு!’

‘என்னடி சொல்கிறாய்?’

’சுத்தமாக நல்லாவே இல்லை என்று சொல்கிறேன். நீங்கள் இரண்டு பேரும் வந்தாலே, ‘வேணாம்டா இது’ என்று டிவியை ஆஃப் செய்துவிட்டு ஓட வேண்டும் போலிருக்கிறது’ என்று குண்டைத் தூக்கிப் போட்டார். அதிர்ச்சியடைந்த பாரு, ‘இல்லை ரியா, நான் இப்போதெல்லாம் அப்படிச் செய்வதில்லை, தள்ளியிருக்க வேண்டும் என்றுதான் நினைக்கிறேன்’

‘அதேதான், நீ நினைக்கிறாய், ஆனால் செய்வதில்லை! இன்னொண்ணு தெரியுமா? இது மட்டும்தான் வெளியே தெரிகிறது, உனது குட் சைடு தெரியவே இல்லை!’

‘என்னது..??’ என்று அதிர்ச்சியடைந்தார் பாரு. ‘அடப்பாவிகளா, நான் என்னதான் கொஞ்சம் முரட்டுத்தனமாக விளையாடினாலும், எனக்குள்ளே ஒரு பக்கம் எக்கச்சக்கமான அன்பும், அறிவும், பண்பும், பணிவும் கொட்டிக்கிடக்கிறதே, அதெல்லாம் கொஞ்சம் கூட வெளியே தெரியவில்லையா?’

‘இல்லையே!’

‘அடேய், பிக்பாஸ் எடிட்டர் சதிகாரர்களா? இப்படிப் பண்ணிவிட்டீர்களேடா?’ என்று மனதுக்குள் கொதிக்கத் தொடங்கினார் பாரு.

Sabarinadhan with Kamurudin Family

அடுத்து கமருவின் உறவினர்கள் வந்தார்கள். அவரது அக்கா அவருக்குத் தேவையான பொதுவான அறிவுரைகளைக் கொடுத்தார், ’அடுத்த ஆள் வேண்டாம். உனக்குத் தெரிந்த பாருவையே எடுத்துக் கொள். வந்த நாளிலிருந்து எவ்வளவு சண்டைகள், எவ்வளவு சச்சரவுகள் செய்கிறார். ஆனால், ஒரு இடத்திலாவது ஒரு தவறான வார்த்தையையாவது விடுகிறாளா? நீ எப்போதாவதுதான் பேசுகிறாய், அப்போதும் பிய்ந்துவிடும் என்பது போல தகாத வார்த்தையை சொல்லி மாட்டிக் கொள்கிறாய்’. அறிவுரை என்னவோ சரிதான். ஆனால், பாரு பேசிய புனித வார்த்தைகளையெல்லாம் அவர் பார்க்கவில்லை போலிருக்கிறது. 

அடுத்து, அவரது மைத்துனர் பேசும் போதும், ’இங்கே கேமரா இருப்பதையே மறந்து விட்டாயா, என்ன செய்து கொண்டிருக்கிறாய் கமரு? கொஞ்சமாவது மண்டையில் மூளை இருக்கிறதா? ஒழுங்காக நடந்துகொள்’ என்பது போல சொல்லிவிட்டுக் கிளம்பினார்கள். 

இன்றைய மூக்குடைப்பு:

’நீங்கள் பெருமைப்படுவது போல நடந்து கொள்வோம்’ என்று பாரு, கமருவின் அக்காவிடம் சொன்னபோது, ‘முதலில் உங்கள் அம்மா பெருமைப்படுவது போல நடந்து கொள்ளுங்கள், எங்களைப் பிறகு பார்த்துக்கொள்ளலாம்’ என்று அவர் சொன்னது.