கனி, திவ்யா, சான்ட்ரா மூவரும் சேர்ந்த ஒரு புதிய குழு உருவாகி இருக்கிறது. இவர்கள் மூவரும் கிச்சன் குழுவில் காலை நேரத்தில் வேலை செய்து கொண்டிருந்தபோது, கனி அமித்தை, ’பாரு இருக்கும் இடமெல்லாம் அமித் இருப்பார்’ என்பது போல கேலி செய்து கொண்டிருந்தார். அவர் என்னவோ நம் நண்பர்தானே என்று உரிமையில் சாதாரணமாக சொன்னது போலத்தான் இருந்தது. ஆனால், அதற்கு இந்த அமித் எரிச்சலாகி கனியை மன்னிப்புக் கேட்கச் சொன்னார். அதற்கு ’சாரி’ என்று கனி சொன்ன பிறகும், 'சாரியை உண்மையாகக் கேட்கவில்லை, அது எனக்கு இன்னும் அதிகமாகக் காயப்படுத்துகிறது' என்று பிரச்னையைப் பெரிதாக்கி கொண்டிருந்தார்.
அடுத்து, கனியின் மகள்கள் இருவரும், சகோதரி விஜயலட்சுமியும் உள்ளே வந்தார்கள். வழக்கமான செண்டிமெண்ட் எல்லாம் முடிந்து விஜியுடன் அமர்ந்து ஆலோசனை செய்துகொண்டிருந்தார் கனி. விஜி,
‘நீ என்ன இங்கே எல்லோரிடமும் அன்பு காட்டவா வந்தாய் கனி? நீ நீயாக இருக்கிறாய், ஆனால், அது போதாது, தினமும் ஒன் அவர் எபிஸோடில் நீ வர்றதேயில்லை. அது ஏன்னு யோசி. அதற்காக உன்னை சண்டை போடச்சொல்லவில்லை, ஆனால் யோசி! சாண்ட்ரா அவர் செய்த தவறுக்காக உன்னிடம் மன்னிப்பு கேட்கிறார். அதை நீ உட்கார்ந்தபடி கெத்தாக அக்செப்ட் செய்து கொண்டிருக்கலாம், எதற்காக தேவையே இல்லாமல் எழுந்து நின்று மரியாதை தருகிறாய்? இது ஒரு பொழுதுபோக்கு ஷோ! இதுவரை வந்துவிட்டாய், இனி சிரமம். ஃபைனலுக்கு வர வேண்டுமென்றால், ஒன் அவர் எபிஸோடில் வர வேண்டும், அதற்கு கண்டெண்ட் கொடுக்க வேண்டும். அது எப்படி என்று யோசி!’
என்று சொல்லிவிட்டுப் போனார். நமக்கென்னவோ ஒழுங்காக விளையாடிக் கொண்டிருக்கும் கனியை, விஜி குழப்பி விட்டுவிட்டுப் போனது போலத்தான் தோன்றுகிறது.
அடுத்து, விக்ரம் ஏதோ கமெண்ட் அடித்துக் கொண்டிருந்தபோது அவரை லூப் டாஸ்க்குக்கு ஆளாக்கினார் பிக்பாஸ். அப்படியே உற்சாகமாகத் துள்ளிக் குதித்துக் கொண்டு வந்த பாரு, அவரது தலையில் தண்ணீர் ஊற்றி விளையாடினார். பதில் வாய்ப்பாக பாருவை ஃப்ரீஸ் செய்துவிட்டு விக்ரமை ரிலீஸ் செய்தார் பிக்பாஸ். பதிலுக்கு விக்ரம் தண்ணீர் ஊற்றியதற்கு பாரு வந்த வரத்தைப் பார்க்க வேண்டுமே! ஒரு இடத்தில் நிற்கவில்லை, ஃப்ரீஸ் டாஸ்க்காவது மண்ணாவது என்பது போல ஓடிக் கொண்டிருந்தார். அவரை ரிலீஸ் செய்த பிறகும் கூட பதிலுக்கு மைக் இருப்பதையும் பொருட்படுத்தாமல் விக்ரம் மீது தண்ணீர் ஊற்றிக் கொண்டுதான் இருந்தார். விளையாட்டைக் கூட வன்மத்தோடு விளையாட பாருவால் மட்டும்தான் முடியும்.
அடுத்து சபரியின் குடும்பம் உள்ளே வந்தது. அம்மா, அக்கா, அக்கா பையன் என மூவர் வந்திருந்தார்கள். ’நீ இருக்கும் இடத்தில் ஒரு தவறு நடந்தால் தட்டிக்கேள், ஆரம்பத்தில் அப்படிச் செய்துகொண்டிருந்தாய், பின்னர் குறைந்துவிட்டது. நீ ஹீரோ, இப்படி சென்ஸ் இல்லாமல் டிரஸ் செய்யாமல், நன்றாக செய்துகொள்’ என்று ஆர்வமாக அறிவுரை சொன்னார் சபரியின் அம்மா. எல்லோரிடமும் மிக அன்பாக, ஒரு நிஜமான ஈடுபாட்டோடு பேசிவிட்டுப் போனார்.
அவர்கள் போனதும், ’சபரி அம்மாவும், அரோராவும் கிளாஸ்மேட்ஸ்’ என்று இயல்பாக கேலி செய்தார் வினோத். இந்த வீட்டில் ஒருத்தராவது கேலியைக் கேலியாக எடுத்துக்கொள்வதில்லை அரோராவைத் தவிர! அதற்கு முகம் நிறைய சிரிப்போடு, அரோரா முடிந்தவரை ஸ்பாண்டேனியஸாகவும், ‘ஆமால்ல, நீதானே எங்களுக்கு வாத்தியாராக இருந்தாய்!’ என்று பதிலும் கொடுத்தது அழகாக இருந்தது.
அடுத்த பாடல் வந்ததும், வினோத்தின் குடும்பம்தான் வருகிறார்கள் என்று எப்படிக் கணித்தார்களோ தெரியவில்லை, வினோத்தைப் பிடித்துக்கொண்டு எல்லோரும் உற்சாகப்பட்டார்கள். கணித்தது போலவே வினோத்தின் இரண்டு குழந்தைகளோடு அவரது மனைவி உள்ளே வந்தார்.
தனியாகப் பேசிக்கொண்டிருக்கும் போது உரிமையோடு மனைவியையும் கலாய்த்துக் கொண்டிருந்தார். ‘நான் இங்க இருக்கிறவர்களையே மேக்கப்புக்காகக் கலாய்த்துக் கொண்டிருக்கிறேன். நீ என்னடாவென்றால் சிமெண்டுக் கோட்டிங் மாதிரி இரண்டு கோட்டிங் அடித்துக்கொண்டு வந்திருக்கிறாய்’ என்று சொல்லவும் அவர், இங்க விஜய் டிவிகாரர்கள் செய்த வேலை என்று சொல்லாமல், ‘அது அப்படித்தான்’ என்று சிரித்தார். அவர்களது அம்மாவை நினைவு கூர்ந்து நெகிழ்ந்தார்கள்.
‘யாரும் பேச ஆரம்பிக்கிறதுக்கு முன்னாலேயே, அவங்களைப் பேச விடாமல் டிரிக்கர் ஆகி, பதில் பேச ஆரம்பிக்கிறாய். அதை மட்டும் சரி செய்தால் மிகச்சிறப்பாக இருக்கும். வேறு பிரச்சினை ஏதுமில்லை’
என்று அவர் நல்ல அறிவுரைதான் சொல்லிக் கொண்டிருந்தார். ஆனால், அதைக்கூட சொல்லவிடாமல் குறுக்கே பேசிக்கொண்டிருந்தார் வினோத். இந்தாளு திருந்துவார் என்று நமக்குத் தோன்றவில்லை.
மொத்தத்தில் இன்றைய குடும்ப எபிஸோடுகள், கிரிஞ்சுகள் ஏதுமின்றி சிறப்பாகவே இருந்தன எனலாம்!
இன்றைய பெஸ்ட் கலாய்:
’என்ன ஒரு சந்தோஷமான நாளில்ல இது, ரொம்ப பாஸிடிவா இருக்கு. எவ்வளவு ரியலைஸேஷன்ஸ்! மை காட்! ஹௌ குட் இஸ் திஸ்!’ என்று பாரு சொன்ன தத்துவத்துக்குப் பக்கத்திலிருந்த விக்ரம், ‘இவளுக்கு இப்பதான், நம்மைத் தவிர இந்த வீட்டிலிருக்கும் போட்டியாளர்களும் மனிதர்கள்தான், ஏலியன்ஸ் இல்லை, அவங்களுக்கும் சந்தோஷமான குடும்பம், குட்டி எல்லாம் இருக்கிறது என்று ரியலைஸ் ஆகுது. அதைத்தான் சொல்கிறாள்’ என்றது!