Vijaysethupathi with Santa claus @jiohotstar
BiggBoss 9

எல்லாம் நம்ம நேரம்! #Biggboss Day 77

பாருவுக்கு நிச்சயம் மகிழ்ச்சியாக இருந்திருக்கும். இந்த வீட்டில் பாருவின் அட்டகாசங்களை அவரது முகத்துக்கு நேராக கேட்டுக்கொண்டிருந்த ஒரே நபர் எஃப்ஜேதான். ஆதிரையின் முகத்தில், ’தான் உள்ளே வந்த மிஷன் சக்சஸ்’ எனும் நினைப்பில் ஒரு நிறைவு தெரிந்தது.

ஆதி தாமிரா

’சாண்ட்ரா, கனி மீது வீண்பழி போட்ட பஞ்சாயத்தைப் பற்றி விஜய் சேதுபதி விசாரிக்கவே இல்லை. நாளை எபிஸோடில் விசாரிப்பார் என்ற நம்பிக்கையும் நமக்கில்லை!’ என்று நேற்று நாம் பேசிக் கொண்டிருந்தோம். அதற்கு மாறாக விஜய் சேதுபதி அதை விசாரித்தார். ஆனால், இதற்கு அவர் 'ஊதியே இருக்கவே வேண்டாம்' என்பது போலத்தான் இருந்தது அவரது விசாரணை.

கனிக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்பதற்காகவோ, அந்தத் தவறை சுட்டிக்காட்ட வேண்டும் என்பதற்காகவோ அவர் விசாரித்தது போல தெரியவில்லை. பதிலாக, ’ஒரு அம்மாவாக நீங்கள் எப்படி நினைத்தீர்களோ, அதைப்போலத்தானே அவரும். யாரும் அப்படி ஒரு உள்நோக்கத்தோடு பாட மாட்டார்கள் என்று எனக்குத் தோன்றுகிறது. இப்படி எல்லாம் யோசிப்பதும், பேசுவதும் நமக்கு நல்லதல்ல. நீங்கள் அவரிடம் மன்னிப்பு கேட்பதுதான் சரி என்று எனக்கு தோன்றுகிறது. உங்களுக்கு என்ன தோன்றுகிறது?’ என்று ஒரு குழந்தைக்குச் சொல்வது போல அமைதியாக எடுத்துச் சொல்லிக் கொண்டிருந்தார்.

‘நமக்கு நல்லதல்ல’, ’உங்களுக்கு என்ன தோன்றுகிறது?’- இந்த வார்த்தைகளைக் கவனியுங்களேன். மற்றவர்கள் இதுபோல நடந்து கொள்ளும்போது ’உங்கள் மண்டையில் பிரச்சனைங்க’ என்று கொந்தளித்த விஜய் சேதுபதியின் வார்த்தைகள்தான் இவை. அப்போதும் அதைப் புரிந்து கொள்ளாமல் ’எனக்கு அப்படித்தான் தோன்றியது’ என்று பிடிவாதம் பிடித்துக்கொண்டிருந்தார் சாண்ட்ரா. அதன் பிறகும் சாடை மாடையாக 'மன்னிப்பு கேட்பதுதான் உனக்கும் நல்லது, எனக்கும் நல்லது, உன்னால் இங்கே என் டப்பாவே டான்ஸ் ஆடிக் கொண்டிருக்கிறது' என்று புரியவைப்பதற்காக, மறைமுகமாக ஏதேதோ பேசி ஹின்ட்ஸ் கொடுத்துக் மன்றாடிக் கொண்டிருந்தார். ஒரு வழியாக எதையோ புரிந்து கொண்ட சாண்ட்ரா கனியிடம் ‘சாரி’ என்று ஒரு வார்த்தையைச் சொன்னார். அவ்வளவுதான், ஒரு வழியாக இந்தப் பஞ்சாயத்து முடிந்துவிட்டது, என்ற நிம்மதிப் பெருமூச்சுடன் அடுத்த விசயத்துக்குத் தாவி விட்டார் விஜய் சேதுபதி.

ஆனால், தினசரி எபிசோடில் வராத இன்னொரு சம்பவமும் நடந்திருக்கிறது. அது, அதே பெட்ரூமில் வைத்து டிரிம்மரைக் கொண்டு சாண்ட்ரா அவரது கை, கால்களில் உள்ள முடியை நீக்கிக் கொண்டிருந்திருக்கிறார். ஆதிரை இப்படிச் செய்த நிகழ்வை விசாரித்த போது ஆதிரைக்கு சப்போர்ட்டாக அவர் பேசியதே, நமது சாண்ட்ராவும் இப்படி ஒரு சம்பவத்தை நிகழ்த்தியிருக்கிறார், அவரைக் கண்டித்தால், அதில் சாண்ட்ராவும் மாட்டிக்கொள்வார் என்பதால்தானோ என்னவோ என்றும் நாம் சந்தேகப்பட வேண்டியதிருக்கிறது.

Housemates in Living Area

பஞ்சாயத்துகளை எல்லாம் முடித்தாயிற்று, அடுத்து எவிக்சனுக்குப் போவதற்கு முன்னால் ஒரு ஜாலியான கேள்வி கேட்கலாம் என்ற மூடுக்கு வந்தார் விஜய் சேதுபதி. ’அடுத்த வாரம் ஃபேமிலி வீக் என்பதால் குடும்பத்தை எதிர்கொள்வதற்கு யாரெல்லாம் பயத்தோடு இருக்கிறார்கள், யாரெல்லாம் மகிழ்ச்சியோடு இருக்கிறார்கள்?’ என்று ஒரு கேள்வி கேட்டார்.

பயத்தோடு இருக்கிறார் என்று பெரும்பாலும் எல்லோரும் பாருவைச் சொன்னார்கள். இது விஷயமாக கடுமையாக சீன் போட்டுக் கொண்டிருந்தாலும், பாருவெல்லாம் அவரது அம்மாவை மிக எளிதாகச் சமாளித்து விடுவார். ஏதோ இது விஷயமாக நம் மீது லைம்லைட் பாய்கிறது என்பதால், கிடைத்தவரை லாபம் என்று, பயத்தோடு இருப்பது போல நடித்துக் கொண்டிருக்கிறார் அவ்வளவுதான்!

அடுத்து எவிக்சனுக்கு வந்தார்கள். 75 நாட்களைத் தாண்டியும் வீட்டுக்குள் கூட்டம் ஜாஸ்தியாக இருந்ததால், நாம் சந்தேகப்பட்டது போலவே இந்த வாரமும் டபுள் எவிக்சன் நடந்தது. முதலில் எஃப்ஜே வெளியேற்றப்பட்டார். இவரெல்லாம் இத்தனை வாரம் உள்ளே தாக்குப்பிடித்ததே பெரிய விஷயம்தான் எனும் நிலையில் நமக்கோ அல்லது சக போட்டியாளர்களுக்கோ அது ஒன்றும் பெரிய அதிர்ச்சியாக இல்லை. பாருவுக்கு நிச்சயம் மகிழ்ச்சியாக இருந்திருக்கும். இந்த வீட்டில் பாருவின் அட்டகாசங்களை அவரது முகத்துக்கு நேராகக் கேட்டுக்கொண்டிருந்த ஒரே நபர் எஃப்ஜேதான். ஆதிரையின் முகத்தில், ’தான் உள்ளே வந்த மிஷன் சக்சஸ்’ எனும் நினைப்பில் ஒரு நிறைவு தெரிந்தது.

Vikkals Vikram

அந்த நிறைவை அவர் அனுபவித்து முடிப்பதற்குள்ளாகவே, ’அதுதான் நீ உள்ளே வந்த மிஷன் சக்சஸ் ஆகிவிட்டதே, இனிமே நீ எதற்கு?’ என்பது போல அவரையும் வெளியே அனுப்பி விட்டார்கள். மற்ற யாருக்கும் இதில் எந்த அதிர்ச்சியும் இல்லை என்றாலும், ஆதிரைக்குதான் பெரும் அதிர்ச்சி. அதோடு அவர், ’நான் இவ்வளவு பண்ணி விட்டேன். இதற்கு மேலும் என்னை என்னதான் செய்யச் சொல்கிறார்கள்? ஓட்டுப் போடும் மக்களுக்கு அறிவே கிடையாதா? ஃபேமிலியை உள்ளே கொண்டு வரலாம் என்று எவ்வளவு ஆசையோடு இருந்தேன். எல்லாம் போச்சு. வெறுப்பாக இருக்கிறது’ என்பது போல பார்வையாளர்களான நம்மைத்தான் குறை சொல்லிக் கொண்டிருந்தார். அவர் மட்டுமல்ல, அவரது அம்மாவும் மேடைக்கு வந்து ‘இதற்கு மேல் என்ன செய்தால் இவங்களுக்கெல்லாம் பிடிக்கும் என்று தெரியவில்லையே’ என்று மக்கள் மீதுதான் குறை சொன்னார். தாயைப் போல பிள்ளை!  

ஆதிரை வெளியே போவதற்கு முன்னால் அவருக்குக் கிடைத்த, ’குடும்பத்தை 24 மணி நேரம் உள்ளே வைத்திருக்கும்’ அவரது வாய்ப்பை, அவரது குழுவில் இருந்த மற்ற யாருக்காவது மாற்றிக் கொடுக்கச் சொன்னார் பிக்பாஸ். கனிக்கு கொடுப்பார் என்று நாம் எதிர்பார்த்துக் கொண்டிருந்தால், ஆதிரை அந்த வாய்ப்பை பாருவுக்குக் கொடுத்தார். அவ்வளவுதான் ஆதிரையின் முதிர்ச்சி. கனியைப் பிடிக்காது என்பதற்ககவே பாருவுக்குக் கொடுத்துவிட்டார். இதற்கு நெகிழ்ச்சியோடு நன்றி சொல்லலாம் தப்பில்லை, ஆனால் பாரு, கதறி அழுதபடி ’இப்படி ஒரு வாய்ப்பை எனக்குத் தந்து விட்டாயே, வாழ்நாள் எல்லாம் இதை நான் மறக்க மாட்டேன், இதற்காக நான் உனக்கு சாகும்வரை நன்றிக்கடன் பட்டிருப்பேன்’ என்று ஓவராக சீன் போட்டுக் கொண்டிருந்தார். ஆனால் கொஞ்ச நாளிலேயே ஆதிரையையும் அவர் புறணி பேசுவார் என்று நமக்குத் தோன்றாமல் இல்லை.

Double Eviction of the Week - FJ and Aadhirai

அதோடு, கமருவைத் தனியாகக் கூட்டிக்கொண்டு போய் ’பார்த்தாயா இந்த ஆதிரையின் அறிவை? அவள் வெளியே கொஞ்சம் முரட்டுத்தனமாக தெரிந்தாலும் அவளது மனசு தங்கமானது என்று நிரூபித்துவிட்டாள். ஆனால் இந்தக் குணம் எல்லாம் அரோராவுக்குக் கிடையாது. அவள் எமோஷனை வைத்து விளையாடுகிறாள். யார் வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் விளையாடலாம். ஆனால், அடுத்தவர்களின் எமோஷனை வைத்து விளையாடுவது பெரிய தவறு! அதையெல்லாம் அந்த அரோராதான் செய்து கொண்டிருக்கிறாள். நீ இப்போதாவது அரோராவைப் புரிந்து கொள்’ என்று ஒன்றுக்கொன்று சம்பந்தமில்லாத விஷயத்தை சம்பந்தப்படுத்தி, பசுமாட்டைக் கொண்டுவந்து தென்னை மரத்தில் கட்டிக்கொண்டிருந்தார். ஆனால், அரோரா எமோஷனை வைத்து விளையாடுகிறார் என்று சொல்லும் இந்த பாருதான், இந்த வீட்டிலேயே அடுத்தவர்களின் எமோஷனை வைத்து விளையாடிக் கொண்டிருக்கும் ஒரே நபர்! இதையெல்லாம் கேட்டுக் கொண்டிருக்க வேண்டும் என்பது நமது தலை எழுத்து!