Amit Bhargav @jiohotstar
BiggBoss 9

நாட்டியப் பேரொளி பாரு! #Biggboss Day 73

முதலில் விக்ரம் குழுவில் விக்ரமும், அரோராவும் ஆடுவதற்காக உள்ளே போக, வெளியே டிவியில் அவர்களைப் பார்த்துக்கொண்டிருந்தது எஃப்ஜேவும், சுபியும்! இரண்டு பாடல்களை எளிதாக கண்டுபிடித்து விட்டாலும் மற்ற இரண்டு பாடல்களைக் கண்டுபிடிக்க முடியாமல் திணறினார்கள்.

ஆதி தாமிரா

நேற்றைப் போலவே இன்றைக்கும் நடிப்பு அரக்கி சான்ட்ராவின் அட்டகாசங்கள் தொடர்ந்து கொண்டிருந்தன. ‘வீக்கெண்ட் நெருங்குகிறது. இந்த வாரம் முழுவதும் மூலையில் உட்கார்ந்து அழுததைத் தவிர நாம் ஒன்றும் செய்யவில்லை, அதைச் சொல்லி பஞ்சாயத்தைக் கூட்டிவிடப்போகிறார்கள், ஏதாவது செய்து மீட்டர் போட்டுக்கொள்ளவில்லை என்றால் நமது டப்பா டான்ஸ் ஆடிவிடும்’ என்ற நினைப்பில், ஒன்றுமில்லாத விஷயம் ஏதாவது சிக்கினால்கூட அதை ஊதிப் பெரிதாக்கி, நம் மீது சிம்பதியை உருவாக்கிக் கொள்ள வேண்டியதுதான், என்னடா சிக்கும் என்று அலைந்து கொண்டிருந்தார்.

அதற்கு வாகாக, இரவு நேரத்தில் அரோராவும், சபரியும் துஷார் வெளியே போனதைப் பற்றி ஏதோ காமெடியாகப் பேசிச் சிரித்துக் கொண்டிருந்தனர். அவர்கள் அப்படிப் பேசியது எனக்கு தூக்கத்தைக் கெடுத்து விட்டது என்று படுக்கையை தூக்கிக் கொண்டு வெளியே போய், வெளியில் புல்வெளியில் கிடந்த சோபாவில் படுத்தார். அவர் இதையெல்லாம் வேண்டுமென்றேதான் செய்து கொண்டிருக்கிறார் என்பது கிட்டத்தட்ட பாரு உட்பட மற்ற எல்லோருக்குமே புரிந்துதான் இருந்தது, அமித்தைத் தவிர! ஆனால், இதை அப்படியே விட்டால் இதை வீக்கெண்டில் ஒரு பஞ்சாயத்தாக ஆக்கி, விஜய் சேதுபதி ‘யார் மீது தவறு இருந்தால் என்ன? ஒருவர் வெளியே குளிரில் போய்க் கிடக்கிறாரே, சக போட்டியாளராச்சே எனும் நினைப்பில் மனிதாபிமானத்தோடு யாரும் போய் சமாதானம் செய்தீர்களா?’ என்று நிச்சயம் கேட்பார், சிக்கிக்கொள்வோம் எனும் எண்ணத்தில் சபரி, அரோரா, வினோத் ஆகிய மூவரும் அவரிடம் போய் மன்னிப்புக் கேட்டு உள்ளே வந்து படுக்கும்படி கெஞ்சிக் கொண்டிருந்தனர்.

‘ஆஹா, இதைத்தான்  எதிர்பார்த்தேன்’ என்ற நினைப்பில், ‘நான் உள்ளே வர முடியாது. உங்கள் யாரிடமும் பேச எனக்கு விருப்பமில்லை, என்னிடம் வந்து பேசாதீர்கள். என்னை தயவுசெய்து கொடுமைப்படுத்தாதீர்கள்’ என்று பில்டப் செய்து கொண்டிருந்தார். வினோத், ’அவர்கள் உங்களிடம் விளையாடுவதற்காக இதைச் செய்யவில்லை. அவர்களுக்குள் ஏதோ சிரித்து பேசிக் கொண்டிருந்தார்கள். இதற்கெல்லாம் நீங்கள் கோபப்படக்கூடாது. இது என்ன ஹாஸ்டலா 10 மணிக்கு, விளக்குகள் அணைந்ததும் படுத்துத் தூங்க வேண்டும் என்று கட்டாயப்படுத்துவதற்கு? இந்த சின்ன விசயத்தையெல்லாம் பொறுத்துக் கொள்ளுங்கள்’ என்று சொன்ன பிறகும், ’அவர்கள் என்னை வெறுப்பேற்ற வேண்டுமென்றேதான் இதைச் செய்தார்கள். ஒரு நாள் அல்ல, தினமும் இதைத்தான் செய்கிறார்கள்’ என்று இல்லாத பழியை போட்டுக் கொண்டிருந்தார். அவர்களும், இதற்கு மேல் இவரிடம் கெஞ்சிக்கொண்டு நிற்க முடியாது என்று கிளம்பி விட்டார்கள்.

Housemates gathered in Living Area

பாருவே, ‘அனைத்து மகளிர் ஓட்டும், இவளுக்கேக் கிடைக்கும் அளவுக்கு செம பெர்பார்மன்ஸைப் போட்டுக் கொண்டிருக்கிறாளே’ என்று பொறாமைப்படும் அளவுக்கு சாண்ட்ராவின் செய்கை போய்க்கொண்டிருந்தது.

’இந்த வீடே சந்தோஷமாக, மகிழ்ச்சியாக இருக்கிறது. ஆனால், என்னை மட்டும் ஒதுக்கி வைத்து கொடுமைப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்’ என்று ஒரு நேரேடிவ் செட் செய்து கொண்டிருக்கிறார் சாண்ட்ரா. இது சிம்பதி கேம் மட்டுமல்லாது, அடுத்த வாரம் ஃபேமிலி விசிட் டாஸ்க்கில் அவர் ஒரு மிகப்பெரிய அழுகாச்சி டிராமாவை அரங்கேற்ற வசதியாக இருக்கும் என்பது அவரது திட்டம். அவர் அதைச் செவ்வனே செய்து கொண்டிருக்கிறார், வீக்கெண்டில் விசேவும் அதற்கு ஒத்து ஊதப்போகிறார் என்பது இப்போதே கண்ணாடி போல பளிச்சென்று தெரிகிறது!

மீண்டும் மறுநாள் காலை, சபரி, அரோரா வந்து பிரச்சினையைப் பேசி சரி செய்யலாம் என்று முயற்சி செய்த போதும், பிடிவாதமாக யாரிடமும் பேச விருப்பமில்லை இடத்தைக் காலி பண்ணுங்கள் என்பது போல அனுப்பிவிட்டு தனியாக உட்கார்ந்து அழுது கொண்டிருந்தார்.

அடுத்து, அமித்தின் தலைமையில், வினோத் மீது ஒரு பஞ்சாயத்தை நடத்திக் கொண்டிருந்தார் சாண்ட்ரா. இந்த அமித் மட்டும்தான் சாண்ட்ரா சொல்வதையெல்லாம் காது கொடுத்துக் கேட்பது மட்டுமல்ல, சிங்கியும் அடித்துக் கொண்டிருக்கிறார். கனி ‘சீ’ என்று சொன்ன விசயத்தைத்தான் பேசினார்கள். இவர்களிடம் பேசிக் கொண்டிருக்கும்போது கனியைக் குறை சொல்லிக் கொண்டிருந்தவர், கனியை சாட்சிக்கு கூப்பிட்டவுடன், அதை அப்படியே வினோத் மீது திருப்பி விட்டார். ஒரு கட்டத்தில் இது விளங்காது என்று புரிந்து கொண்டதால் வினோத்தும், கடுப்பாகி எழுந்து போய்விட்டார். அதன் பிறகும் அமித்திடம், ‘ஒரு டீ கப் இருக்கிறது அமித். அதில் பிஆர் என்று போட்டிருக்கிறது. அதை பார்த்த பிறகும் இது யாருடைய கப் என்று கேட்கிறாள் கனி. பிஆர் என்றால் பிரஜின் என்று இந்தத் தமிழ்நாட்டுக்கே தெரியுமே! இவளுக்கு மட்டும் தெரியாதா? அந்த விஷயம் என்னை எப்படிக் காயப்படுத்தியிருக்கும் புரியுதா அமித்? இவர்கள் எல்லாம் என்ன மாதிரி மனிதர்கள், எனக்குப் புரியல அமித்!’ என்று அழுதுகொண்டிருந்தார்.

Aurora Sinclair and Vikkals Vikram

அடுத்து டான்ஸ் மரத்தான் டாஸ்க்கின் இரண்டாம் பகுதி ஆரம்பித்தது. ஒவ்வொரு குழுவிலும் இரண்டு பேர் ஆக்டிவிட்டி ஏரியாவில் போய் டான்ஸ் ஆட வேண்டும், அவர்கள் எந்தப் பாட்டுக்கு ஆடுகிறார்கள் என்பதை மற்ற இரண்டு பேர் உள்ளே இருந்து டிவியில் பார்த்தே கண்டுபிடிக்க வேண்டும்.

முதலில் விக்ரம் குழுவில் விக்ரமும், அரோராவும் ஆடுவதற்காக உள்ளே போக, வெளியே டிவியில் அவர்களைப் பார்த்துக்கொண்டிருந்தது எஃப்ஜேவும், சுபியும்! இரண்டு பாடல்களை எளிதாக கண்டுபிடித்து விட்டாலும் மற்ற இரண்டு பாடல்களைக் கண்டுபிடிக்க முடியாமல் மிகவும் திணறினார்கள் சுபியும், எஃப்ஜேவும்! தக்லைப் படத்தில் வரும் ’ஜிங்குச்சா’ பாடலையும், அஜித்தின் ‘அவள் வருவாளா?’ பாடலையும் அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. 5 நிமிடம் 10 நிமிடம் அல்ல, இரண்டு மணி நேரமாக அவர்கள் ஆடிக் கொண்டிருந்தும் அந்தப் பாடல்களைக் கண்டுபிடிக்கவும் முடியவில்லை, டாஸ்க்கும் முடியவில்லை. விக்ரமும், அராரோவும் ஆடிக்களைத்துப் போன பின்பும், விடாமல் படுத்தபடி, உட்கார்ந்தபடி ஆடிக்கொண்டிருந்தது சிறப்பான முயற்சி. 

அவர்களே பாடலைக் கண்டுபிடிக்க முடியாமல் திணறிக் கொண்டிருக்கும் நிலையில், அவர்களை இடைஞ்சல் செய்கிறேன் பேர்வழி என்ற பெயரில் பாரு அந்த இடத்தில் குறுக்கும் நெடுக்குமாக ஆடிக் கொண்டும், பாடிக்கொண்டும் இருந்ததைப் பார்க்க சகிக்கவில்லை. யாரோ பாருவின் மனதுக்குள் போய் ’நீ ஒரு டான்ஸர்’ என்று நம்ப வைத்திருக்கிறார்கள். தாம் ஒரு நாட்டியப் பேரொளி என்ற நினைப்பில், அந்த வீட்டில் அவ்வப்போது அவர் போடும் ஸ்டெப்ஸ்களைப் பார்ப்பது நமக்கெல்லாம் ஒரு தண்டனை போலிருக்கிறது!