Sandra and Vikkals @jiohotstar
BiggBoss 9

என்னதான் ஆச்சு சாண்ட்ராவுக்கு!!! #Biggboss Day 72

சுபி போவதற்கு முன்பாகவே ஓடிப்போய் பிக்பாஸ் அசிஸ்டன்ட் டைரக்டர் யாரோ, ’அவனு’க்கு வரும் மின்சாரத்தைக் கட் பண்ணிவிட்டிருக்கிறார்கள். பின்னணிக் குழு ஒழுங்காகத்தான் வேலை செய்கிறார்கள் போலிருக்கிறது!

ஆதி தாமிரா

கனி ஏதோ சொன்னார் என்பதற்காக அதைப் பிடித்துக் கொண்டு அழுது சீன் போட்டுக் கொண்டிருந்த சான்ட்ராவை, பாரு, அமித், வினோத் அனைவரும் சமாதானம் செய்து கொண்டிருந்தனர்.

’சான்ட்ராவின் உடல்மொழி மிகவும் அவமானப்படுத்துவதாக இருக்கிறது, அவரே நம்மை அவமானம் செய்துவிட்டு, நம் மீதே பழியை போட்டு, அழுது சீன் போட்டுக் கொண்டிருக்கிறார். இதை எப்படிப் புரிந்து கொள்வது?’ என்று கனி உள்ளே உட்கார்ந்து அழுது  புலம்பிகொண்டிருக்க, அவரை சமாதானப்படுத்துவதற்கு சிலர் முயன்று கொண்டிருந்தனர்.

வெளியே, பாருவும், சான்ட்ராவும் தீவிர விவாதத்தில் இருந்தனர். ’நீ எல்லாம் இந்த கமருவை நம்பிக் கொண்டிருக்கிறாய். ஆனால் அவனுக்கெல்லாம் இங்கு இருக்கிறதுக்குத் தகுதியே கிடையாது. உன்னையும் அரோராவையும் வச்சு ஒரு முக்கோணக் கதை பண்ணினதுனாலதான் இவ்வளவு நாளாக உள்ளே தாக்குப்பிடித்துக் கொண்டிருக்கிறான்’ என்று சான்ட்ரா சொன்னதற்கு, ‘ஆமாம்’ என்பது போல மண்டையை ஆட்டிக் கொண்டிருந்தார் பாரு. அவ்வளவுதான் அவர் கமரு மீது வைத்திருக்கும் தொடர்பு. அவரது நட்பு எல்லாம் நீர்க்குமிழி மாதிரி ஒரு வினாடியில் காணாமல் போய்விடும். அதேபோல, ’அரோரா உள்ளே இருப்பதற்கும் இந்தக் கதைதான் காரணம். இதை வைத்துதான் அவள் எலிமினேட் ஆகாமல் தப்பித்துக் கொண்டிருக்கிறாள்’ என்று சான்ட்ரா சொல்லவும், பாரு அதற்கும், ‘ஆமாக்கா, இந்த அரோரா எல்லாம் எப்படி இவ்வளவு நாள் உள்ளே இருக்கிறாள் என்று எனக்கு ஒரே ஆச்சரியம். நீ சொல்வதுதான் சரி போலிருக்கிறது. இவர்கள் செய்கிற அநியாயத்தை எல்லாம் மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருப்பாங்க, அவங்கதான் நியாயம் சொல்ல வேண்டும்’ என்றார். எல்லாம் பார்வையாளர்களான நமது நேரம்!

பாரு, கமரு, அமித் போன்ற பொம்மைகளிடம் நமது குற்றச்சாட்டுகளைச் சொன்னால் மட்டும் போதாது, ஒரு நடுநிலையான ஆளிடம் சொல்லி வைப்பதும் அவசியம் என்ற திட்டத்தோடு விக்ரமையும் கூட்டி வைத்துக் கொண்டு அதே பாட்டை பாடிக் கொண்டிருந்தார் சாண்ட்ரா. ’இப்படி ஒரு பெரிய நிகழ்ச்சியில், குழந்தைகள் கூட பார்க்கக்கூடிய நிகழ்ச்சியில் ஒருவரை பார்த்து ’சீ’ என்று எப்படி சொல்ல முடிகிறது? இது எவ்வளவு பெரிய அநாகரிகம்? அவரிடம் எப்படி நான் சரியாக நடந்து கொள்ள முடியும்’ என்று கனியை பற்றி புகார் சொல்லிக் கொண்டிருந்தார். சாத்தான் வேதம் ஓதுகிறது! அதற்கு விக்ரம் ஏதோ பதில் சொல்ல முயற்சி செய்தபோது, அதைத் தடுத்து அடுத்து திவ்யா பிரச்சனைக்கு போனார், ’அன்று பிரஜின் வெளியே போகும்போது நான் மிக சோகமாக இருந்தேன். ஆனால் பிரஜினோட பெட்டையும், கப்போர்டையும் உடனே காலி பண்ணிக் கொடு என்று கேட்கிறாள். பிரஜின் என்னைவிட அவளிடம் தான் நல்ல நட்போடு பழகிக் கொண்டிருந்தார். அவர் போனதில் கொஞ்சம் கூட வருத்தமே இல்லாமல் இப்படி செய்யலாமா?’ என்று நூறாவது தடவையாக அதே டயலாக்கை சொல்லிக் கொண்டிருந்தார். பிரஜின் சான்ட்ராவின் கணவர். அவர் போனதற்கு சாண்ட்ரா மூலையில் உட்கார்ந்து அழலாம், திவ்யாவுக்கு என்ன வந்தது? திவ்யாவும் கூட உட்கார்ந்து அழ முடியுமா என்ன?

அப்போதும், விக்ரம், ’திவ்யா உங்களைப் பற்றி எல்லாம் எதுவுமே யாரிடமும் சொன்னதில்லை’ என்று சொன்னதும், ’அது எனக்கும் நன்றாகத் தெரியும். நான் அவள் என்னை பற்றி யாரிடமும் குற்றம் சொல்கிறார் என்று சொல்லவே இல்லையே… என்னுடைய கன்சர்ன் எல்லாம் பிரஜின் போனதற்கு அவள் எதற்கு என்னோடு சேர்ந்து மூலையில் உட்கார்ந்து அழவில்லை என்பது மட்டும்தான். அவள் என்னென்ன கேம் எல்லாம் ஆடியிருக்கிறாள் தெரியுமா? அந்த பால் பிரச்சனையில் தலைவலி என்று பொய் சொல்லி ஏமாற்றினாள். அதெல்லாம் எனக்கு அப்புறமாகத்தான் புரிந்தது’ என்று சொல்லி விக்ரமின் மண்டையைக் கழுவி விட்டார். விக்ரமும் ஒரு கட்டத்தில் அதை நம்பி, அதைப்பற்றி கனியிடம் கூப்பிட்டுக் விசாரித்துக் கொண்டிருந்தார். நமக்குத்தான் மண்டை காய்ந்து, 'என்னதான் ஆச்சு இந்த சாண்ட்ராவுக்கு?' என்று தோன்றியது.

Dance team for daily task

அடுத்து டான்ஸ் மாரத்தானையும், கடிகார டாஸ்க்கையும் மிக்ஸ் செய்து ஒரு புதிய டாஸ்க்கை வீக்லி டாஸ்க் என்ற பெயரில் கொண்டுவந்தார்கள். வெற்றி பெறும் அணி அடுத்த வாரம் கேப்டன் டாஸ்க்கில் கலந்து கொள்ள்ளலாம். அது போக, அடுத்த வாரம் ஃபேமிலி விசிட் வாரம் என்பதால் வெற்றி பெறும் அணியிலிருந்து ஒரு நபருக்கு அவரின் குடும்ப உறுப்பினர்கள், ஒரு நாள் முழுவதும் தங்கலாம் எனும் கூடுதல் ஆஃபரையும் கொடுத்தார். இதனால் எல்லோரும் குதூகலித்தார்கள். குலுக்கல் முறையில் மூன்று குழுக்கள் தேர்ந்தெடுக்கப்பட்டன.  

சபரி, விக்ரம், சுபி, எஃப்ஜே, அரோரா ஒரு குழு.

சாண்ட்ரா, திவ்யா, வினோத், அமித் இரண்டாம் குழு.

பாரு, கமரு, கனி, ஆதிரை மூன்றாம் குழு.

சான்ட்ராவும் திவ்யாவும் ஒரே குழுவில் வந்து சேர்ந்தனர். முதல் ரவுண்டில், சாண்ட்ரா குழு வெற்றி பெற்றது. நேரத்தை சரியாகக் கணித்தது அமித்.

விக்ரம் குழுவில் இருந்த சுபி, மைக்ரோவேவ் அவனில் ஓடும் க்ளாக் மூலமாக கொஞ்சம்  பிராக்டிஸ் செய்து கொண்டு வருகிறேன் என்று யோசனையைச் சொல்லிவிட்டு நேராக ’அவனு’க்கு போனார். ஆனால் ’அவன்’ வேலை செய்யவில்லை. சுபி போவதற்கு முன்பாகவே ஓடிப்போய் பிக்பாஸ் அசிஸ்டன்ட் டைரக்டர் யாரோ, ’அவனு’க்கு வரும் மின்சாரத்தைக் கட் பண்ணிவிட்டிருக்கிறார்கள். பின்னணிக் குழு ஒழுங்காகத்தான் வேலை செய்கிறார்கள் போலிருக்கிறது!

இந்த டாஸ்க்கில் எல்லோரும் நேரத்தைக் கணிப்பதில் கவனமாகவும், அமைதியாகவும் ஈடுபட்டுக் கொண்டிருப்பதால், பார்வையாளர்களான நமக்கு ஒரு பெரிய லாபம்! நம் காதுகள் இன்னும் ரெண்டு நாளைக்குப் பாதுகாப்பாக இருக்கும். விக்ரம் மட்டும் காமெடி செய்து அடுத்த குழுக்களின் கவனத்தைச் சிதற வைக்க முயற்சி செய்துகொண்டிருந்தார். அதைப் பார்த்து மற்ற குழுக்களும் மூன்று நபர்கள் கடிகாரத்தைப் பார்ப்பதற்கும், ஒரு நபர் மற்ற குழுக்களை இடைஞ்சல் செய்வதற்குமாகத் திட்டங்களை மாற்றிக் கொண்டார்கள்.

Dance marathon 2.0

இரண்டாவது ரவுண்டில் பாரு இருந்த குழு ஜெயித்தது.

மூன்றாவது ரவுண்டைத் தொடங்குவதற்கு முன்னால், பிக்பாஸ், ’என்னடா இந்த டாஸ்க் அமைதியாக போய்க்கொண்டிருக்கிறது’ என்று நினைத்தாரோ என்னவோ, ’பாத்திரம் கழுவாமல் கிடக்கிறது, கிச்சன் துடைக்காமல் கிடக்கிறது, வீடு பெருக்காமல் கிடக்கிறது. டாஸ்க் நடந்துகொண்டிருந்தால் அதை எல்லாம் கவனிக்க மாட்டீர்களா’, என்று வீட்டு தல வினோத்தை தார்க்குச்சியால் குத்தி விட்டு ஒரு பரபரப்பை ஏற்படுத்தி விட்டார். அதைக் கேட்டதும், தல எதுவும் சொல்வதற்கு முன்பே ஓடிப்போய் வேலையைச் செய்ய ஆரம்பித்தார் கனி. ஆனால், பாருவை வீடு பெருக்க வைக்க வினோத், அவரிடம் கெஞ்ச வேண்டியதாக இருந்தது. அடுத்து, மூன்றாவது ரவுண்டுக்கு வந்தார்கள்.

அமித், அரோராவைத் தோளில் தூக்கி வைத்துக்கொண்டு ஆடுவதைப் பார்த்த பாரு, கமருவிடம் ‘எனக்கும் அதே மாதிரி வேண்டும்’ என்று அடம்பிடிக்க, நிரோஷாவுக்கு ஸ்பூனில் சாப்பாடு ஊட்டிவிடும் லிவிங்ஸ்டன் மாதிரி, பாருவை தோளில் தூக்கி வைத்துக்கொண்டு ஆடினார். இந்த ரவுண்டில், அரோரா இருந்த டீம் வென்றது. இதனால் மூன்று அணிகளும் சமநிலையிலிருந்தார்கள்.