புருஷன் வெளியே போன சோகத்தில், துணி மடித்து வைத்துக் கொண்டிருந்த சான்ட்ராவின் பக்கத்தில் போய், ‘நான் உதவி செய்யட்டுமா?’ என்று கேட்ட திவ்யாவின் மீது விழுந்து பிறாண்டி வைத்தார் சான்ட்ரா. கூடவே சுற்றிக் கொண்டிருந்த செவ்வாழையான திவ்யாவுக்கே இந்த நிலைமை என்றால் மற்றவர்களின் நிலைமையை நினைத்துப் பாருங்கள்.
’நான் இப்போ என்ன கேட்டுட்டேன்னு இவ இப்படிப் பாயுறா?’ என்ற அதிர்ச்சியில் நின்றுகொண்டிருந்த திவ்யாவை அழைத்துப் போய், ’அவங்க வேற நிலைமைல இருக்காங்க, அப்புறம் பேசிக்கலாம். இப்ப தூர வந்துடுங்க’ என்று சொன்ன சபரியிடமும், ’நான் வேற மாதிரிலாம் இல்ல, நல்லாத்தான் இருக்கேன். இரக்கமில்லாத பாவிகளா, சகபோட்டியாளர் என்ற முறையில் கொஞ்சமாவது மனிதாபிமானத்தோடு நடந்து கொள்ளுங்கள்’ என்று கத்தினார் சாண்ட்ரா. இரக்கத்தையும், மனிதாபிமானத்தையும் காண்பிக்கிற அளவுக்கு இப்போது என்ன நடந்துவிட்டது என்று நமக்குப் புரியவில்லை. இந்த அடிபட்ட வேங்கை போலிருக்கும் சான்ட்ராவால், வரும் நாட்களில் என்னென்ன கூத்துகள் நடக்கப் போகிறதோ தெரியவில்லை.
’கிச்சனை கொஞ்சம் கிளீனாக வைங்கடா’ என்று சொன்ன ஒரு வார்த்தைக்காக கண்டதையும் பேசி, மீண்டும் துஷார் வரைக்கும் இழுத்து அரோராவை அழ வைத்துக் கொண்டிருந்தார் கமருதீன். நம்ம ஆளுக்கு இதனால் ஏதும் ஆபத்தா, தாம் உதவப்போக வேண்டுமா எனும் குழப்பத்தில் பக்கத்தில் நின்று கொண்டிருந்தார் பாரு. ஆனால், அந்தப் பிரச்சினை முடிவதற்குள், தன்னைத்தானே சமாதானப்படுத்திக் கொண்டு சிரித்துவிட்டார் அரோரா. இதுவே அரோராவின் பலமாகவும், பலவீனமாக இருக்கிறது. அரோராவை உட்கார வைத்து விக்ரம் சரியான அறிவுரைகளைச் சொல்லித் தேற்றினார்.
சற்று நேரத்தில், மீண்டும் அரோராவிடம் வந்து சமாதானம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டார் கமரு. அவருக்கு அரோரா, ஆதிரையோடு சேர்ந்து சுற்றிக் கொண்டிருப்பது பிடிக்கவில்லை போலிருக்கிறது. அதனால்தான் இந்த வீண்வம்பிழுத்து சண்டையை உருவாக்கியிருக்கிறாராம். கமரு என்னதான் இழவிழுத்தாலும், இந்த அரோரா மன்னிக்கத் தயாராக இருப்பது ஆச்சரியம்தான். இதே கமரு வெளியே போகும் போதும், அரோரா மட்டும்தான் உண்மையாக வருந்துவார் என அடித்துச் சொல்லலாம். பாருவுக்கெல்லாம் எல்லா உறவையும் மீறி ஒரு டிக்கெட் போச்சு, நாம் போகாத வரை மகிழ்ச்சிதான் எனும் மனநிலைதான் இருக்கும்.
அடுத்து, வீட்டுத்தல போட்டி நடந்தது. கண்ணைக் கட்டிக்கொண்டு கடைசி ரவுண்ட் வரை ஜிம் பந்தின் மீது அமர்ந்திருப்பவர்கள் ஜெயிப்பார்கள். ரொம்ப நாள் கழித்து சண்டை சச்சரவின்றி, பார்க்க ஜாலியாக, சிரிப்பாக இருந்தது இந்த டாஸ்க்! கடைசி ரவுண்ட் வரை நின்று, அமித் இந்தப் போட்டியில் வென்று தலயானார்.
சாண்ட்ராவும், பாருவும் வெளியே உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தார்கள். பேசுவதற்கு நல்ல ஜோடிதான். இந்த இரண்டு வன்மங்களும் ஒன்று சேர்ந்தால் அதை இந்த வீட்டாலேயே தாங்க முடியாது, இந்தப் போட்டியாளர்கள் எல்லாம் எம்மாத்திரம்? ’திவ்யாவுக்கு பிரஜின் போனதை விட நான் போயிருக்க வேண்டும் என்ற ஆசை போலிருக்கிறது’ என்று சான்ட்ரா அவர் மனதில் இருந்ததைக் கொட்டினார். காலையில் உதவி செய்ய வந்த திவ்யாவின் மீது விழுந்து பிறாண்டியதற்கு இதுதான் காரணம் போலிருக்கிறது. பாருவும், ‘ஆமாக்கா! நீங்க அவளுக்கு என்னவெல்லாம் பண்ணியிருக்கீங்க, பார்த்தீங்களா அவ பண்றதை!’ என்று அவருக்கேற்ப வாகாக மகுடி ஊதிக்கொண்டிருந்தார்.
அடுத்து நாமினேஷன் நிகழ்சி நடந்தது. போன வாரம் நடந்த டாஸ்க்கில் ஜெயித்தவர்கள் நாமினேசன் ஃப்ரீயாகவும், மற்றவர்கள் அனைவரும் நாமினேஷன் ஆவார்கள் என்றும் பார்த்தால், அப்படியில்லையாம். தோற்றவர்களிலிருந்து, வழக்கம்போல இரண்டு பேரை ஆளாளுக்கு நாமினேட் செய்ய வேண்டுமாம். அனேகமாக எல்லோருமே உள்ளே போக வாய்ப்பிருந்தும், விரோதம் வளர்க்கும் நாமினேசன் டாஸ்க்கை எப்படி விட்டுக்கொடுக்க முடியும், நாமினேசன் பண்ணச்சொல்லிதான் முடிவு செய்வேன் என்று நிகழ்ச்சியை நடத்தினார் பிக்பாஸ்!
ரம்யாவின் ஓர் ஓட்டை வாங்கியும் பாரு தப்பித்ததுதான் கொடுமை! சந்தோசத்தில் துள்ளிக்கொண்டிருந்தார். நாமினேட் செய்யப்பட்டால் வன்மத்தில் கருகுவதும், காப்பாற்றப்பட்டால் மகிழ்ச்சியில் துள்ளுவதும் இவர் வழக்கமாகச் செய்யக்கூடியதுதான். அவன் போடுவான்னு இவனும், இவன் போடுவான்னு அவனும் நினைச்சிக்கிட்டு ஓட்டுப்போடாம விட்டுட்டானுக போல! ஒழியட்டும்!