‘ஒரே ஒரு பாம், டோட்டல் சிட்டியும் குளோஸ்! நான்தான் பாம் பக்கிரி!’ என்று வடிவேலு சொல்வது போல, பாரு போட்ட ஒரே ஒரு சின்னத் திட்டத்தால் இன்றைக்கு மொத்த எபிசோடும் அதிலேயே முடிந்து போனது. வழக்கமாக, இப்படி ஏதாவது ஒரு பிரச்சனை கிளம்பும் போது, தினசரி எபிஸோடுதான் முழுமையும் அதைச் சுற்றியே முடிந்து போகும். ஆனால், ஒரு வீக்கென்ட் எபிசோடே இப்படி ஒரே பிரச்சினையில் மூச்சைத் தொலைத்துக் கொண்டிருந்ததை இன்று பார்க்க முடிந்தது. விஜய் சேதுபதிக்கு இன்றைய எபிசோடை முடிப்பதற்குள் நாக்கு தள்ளிவிட்டது!
வெள்ளிக்கிழமைக் காட்சிகளாகக் காட்டப்பட்டதும் அதே வாளி பஞ்சாயத்தின் இறுதிக் கட்டம்தான். இரண்டு நாட்களாக மண்டையை பிய்த்துக் கொண்டிருந்த விக்ரம், வியானா தன்னிடம் மன்னிப்பு கேட்டுவிட்டால் இந்த பிரச்சனையை முடித்துக் கொள்ளலாம் என்ற ஒரு முடிவுக்கு வந்து, மன்னிப்புக் கேட்கச்சொல்லி வியானாவை கட்டாயப்படுத்திக் கொண்டிருந்தார். பாரு இந்த பிரச்சினையை தொடக்கி வைத்திருந்தாலும், அவரது இந்த ட்ராப்பில் மாட்டிக்கொண்டது ரம்யாவும், வியானாவும்தான். ரம்யாவுக்கு, பாரு சொன்னது என்ன? இங்கு நடந்தது என்ன? ஏன், எல்லோரு தம்மைக் குற்றவாளியாக்கிக் கொண்டிருக்கிறார்கள் என்று ஒரு மண்ணும் புரியவில்லை. வியானாவுக்கோ, இது இத்தனைப் பெரிய பிரச்சினையாகும் என்று தெரியவில்லை. அவர் செய்த தவறுகளும் புரியவில்லை. விக்ரமே கூட பாருவை விட்டுவிட்டு, இவர்கள் இருவரையும் நோக்கித் திரும்பியது ஆச்சரியம்தான்.
விஜய் சேதுபதி வந்ததும், அதே துணி ஊறவைக்கப்பட்ட வாளி பஞ்சாயத்துதான் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. பாருவை எழுப்பி என்ன நடந்தது என்று கேட்டதும், பாரு தன் வியாக்கியானத்தை ஆரம்பித்தார்.
‘அம்மா தாயே, கொஞ்சம் சுருக்கமாகச் சொல்லுங்கள்’ என்று விசே சொன்னதும்,
’ஓ, அப்படியா? சுருக்கமாகச் சொல்ல வேண்டுமா? அப்படியானால், நான் சுருக்கமாகச் சொல்கிறேன். நடந்த விஷயங்களை நாம் சுருக்கமாக எப்படி சொல்வது என்று சுருக்கமாக யோசித்துப் பார்க்கும் போது, எனக்கு என்ன தோன்றுகிறதோ அதை அப்படியே சுருக்கமாக நான் சொல்ல முயற்சி செய்கிறேன். இந்த நெக்லஸின் பக்கத்தில் சேர் போட்டுக்கொண்டு குத்துக்கல் மாதிரி உட்கார்ந்திருக்கும் விக்ரமை எப்படி எழுப்பலாம் என்று நான் சுருக்கமாக யோசித்துக் கொண்டிருக்கும் போது, பாத்ரூமில் யாரோ ஒரு வாளியில் துணிகள் ஊற வைத்திருந்ததை பார்த்தேன். அதை வைத்து விக்ரமை எழுப்ப ஒரு யோசனை எனக்குத் தோன்றியது. உடனே, சுருக்கமாக நான் ஒரு திட்டமிட்டு ரம்யாவிடம் போய் இப்படி ஒரு வாளி இருக்கிறது, ஒரு கேப்டனாக விக்ரமிடம் நீ போய் அந்த வாளியை எடுத்து நடு வீட்டில் வைக்க சொல்லு. அப்படியாவது அவன் இடத்தை காலி பண்ணட்டும் என்று..’
’அம்மா தாயே போதும். இதுதான் சுருக்கமாகச் சொல்றதா? சரி நீங்க சொன்னது சரிதானா என்று ரம்யாவிடம் கேட்டுக் கொள்வோம். ரம்யா நீங்க சொல்லுங்க அவர் இதே மாதிரி வந்து சொன்னாரா?’
’ஆமா சார், ஆனா’
’நீங்க வேற ஆரம்பிக்காதீங்க, ஆமாவா இல்லையா, அத மட்டும் சொல்லுங்க’
’ஆமா சார், ஆனா இல்ல சார்’
‘ஸ்ஸ்ஸப்பா!’
’ஒரு தலயா என்கிட்ட வந்து கம்ப்ளைண்ட் பண்றானு நினைச்சிட்டேன் சார். அவ விக்ரமை எழுப்பனும்னு சொன்னா சார், ஆனா அது இவ்ளோ பெரிய பிரச்சனையா மாறும்னு எனக்கு ஒண்ணுமே புரியல சார்’
’பிரச்சனை எல்லாம் ஒன்னுமில்லீங்க, பாரு உங்ககிட்ட சொல்லிட்டு செஞ்சாங்களா இல்லையாங்கறதுதான் முக்கியம்! பாரு இப்படி ஒரு திட்டம் போட்டிருக்கிறது உங்களுக்கு தெரியுமா, தெரியாதா?’
’எனக்குப் புரியல’
’புரியலன்னு சொல்லாதீங்கம்மா, தெரியுமா, தெரியாதா?’
’அந்த குட்டிச்சாத்தான் என்ன திட்டம் போட்டான்னே தெரியலையே, இப்ப நான் வந்து மாட்டிக்கிட்டேனே, ஆண்டவா! ஏற்கனவே இந்த சனியன்கள் கூட உள்ள இருக்கிறதே பெரும்பாடா இருக்குது, இதில் ஒவ்வொரு வாரமும் இவர்கிட்ட வேற வந்து மாத்து வாங்க வேண்டியதா இருக்குதே! ஒவ்வொரு நாளும், நித்திய கண்டம், பூர்ண ஆயுசாப்போச்சே நம்ம நிலைமை’ என மொத்தமாக எல்லாம் சேர்ந்து அவர் மண்டையை குழப்பிவிட அங்கேயே அழ ஆரம்பித்தார். அதற்குக் காண்டான விசே,
’கேள்வி கேட்டால் பதில் சொல்லுங்கம்மா, இப்படி அழ ஆரம்பிச்சீங்கன்னா நான் எப்படி மேற்கொண்டு கேள்வி கேட்க முடியும்?’
என்று கத்த, இதையெல்லாம் ஓரமாக உட்கார்ந்து கவனித்துக் கொண்டிருந்த பாருவின் முகத்தில், ‘அப்பாடி, பிரச்சினை நம்மளை விட்டுட்டு, ரம்யா மேல திரும்பிடுச்சு’ என்ற நிம்மதியின் சந்தோஷம் தெரிந்தது. காயமடைந்த ரம்யா,
’கேள்வியும் வேண்டாம், ஒரு மண்ணும் வேண்டாம், என்னால இதுக்கு மேல இங்க இருக்க முடியாது. நான் வீட்டுக்குப் போறேன்’ என்று ஒப்பாரி வைக்க ஆரம்பித்து விட்டார்.
கடுப்பான விஜய் சேதுபதி, ’சரிம்மா, கேட்ட திறக்கச் சொல்றேன். வீட்டுக்குப் போங்க’ என்று சொல்லிவிட்டு இடைவேளை விட்டுவிட்டுப் போய்விட்டார். நாம் எதிர்பார்க்காதபடி கதவும் திறக்கப்பட்டது. நமக்கு இதுவரை, இதற்கு முந்தின சீசன்களில் இப்படி ஒரு சம்பவம் நடந்தது போல நினைவில்லை. அவ்வளவுதான் ரம்யா கதை முடிந்தது, என்று நாம் நினைத்துக் கொண்டிருக்கும் போது சக போட்டியாளர்கள் சிலர், ரம்யாவைச் சமாதானப்படுத்திக் கொண்டிருந்தனர். பாருவோ, வண்டி நம் மீது திரும்பிவிடக்கூடாது என்பதற்காக கனி, விக்ரம் என ஒவ்வொருவரிடமும் போய் தன் நிலைமையை அழுத்தமாக மீண்டும் மீண்டும் ரிஜிஸ்டர் செய்து கொண்டிருந்தார். ஒருவழியாக ரம்யாவும், கேமராவில் மன்னிப்புக் கேட்டுவிட்டு வந்து மீண்டும் உட்கார்ந்துகொண்டார்.
மீண்டும் வந்த விஜய் சேதுபதி, ’எந்த பிரச்சனைக்கும் அழுவுறது தீர்வு கிடையாது. எந்த தப்பு செஞ்சாலும் இங்க யாரும் எதுவும் செய்யப் போறதில்ல, என்ன நடந்தது என்று நாம அதை புரிந்து கொள்வதற்காகவும், அதிலிருந்து ஒரு பாடம் கற்றுக் கொள்வதற்காகவும்தான் இதைப் பத்தி பேசிக்கிட்டு இருக்கிறோம். அதனால தைரியமா உண்மையச் சொல்லுங்க. ஒண்ணா சேர்ந்து புரிஞ்சுக்க முயற்சி பண்ணுவோம்’ என்று விளக்கமாக சொல்லிவிட்டு கதவை அடைக்கச் சொன்னார். மயிரிழையில் தப்பித்தார் ரம்யா!
அதன் பிறகும், அதே பஞ்சாயத்து தொடர்ந்து நடந்து கொண்டிருந்தது. ரம்யாவைத் தொடர்ந்து வண்டி வியானாவின் பக்கம் திரும்பியது. அவர், தான் என்ன தவறுகள் எல்லாம் செய்தேன் என்று விளக்கிவிட்டு விக்ரமிடம் மன்னிப்பு கேட்டார். விசே, இந்தப் பிரச்சனையை இவ்வளவு தூரம் இழுத்துக்கொண்டு போனதற்கு பதிலாக, ரொம்ப சிம்பிளாக ஒரு குறும்படத்தைப் போட்டுக் காண்பித்து யார் என்ன செய்தார்கள் என்பதை எளிதாகப் புரிய வைத்திருக்கலாம். இதனால், பாரு நைஸாக நழுவியதோடு மட்டுமல்லாமல், விசேவிடம் பாராட்டையும் வாங்கிக்கொண்டார். தலையெழுத்து!